/tamil-ie/media/media_files/uploads/2017/09/2f820283-6825-44d1-b2e7-b570747e21c5.jpg)
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பல பகுதிகளில் இன்றும் பெண்களுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்படுகிறது. குடும்பம், பொதுவெளி, வேலைவாய்ப்பு, தொழில் என எல்லாவற்றிலும் அவர்கள் ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், ஒவ்வொன்றிலிருந்தும் பெண்கள் தங்களை மெல்ல மெல்ல விடுவித்துக்கொண்டு சாதிப்பதற்காக முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கு ஒரு உதாரணம் தான் ‘சான்’ தொலைக்காட்சி. ஆஃப்கானிஸ்தானில் முழுக்க முழுக்க பெண்களே நடத்துகின்ற சேனல். இதில், 50 பெண்கள் பணிபுரிகின்றனர். இதில் பலரும் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள். சிலர் ஊடகத்துறைக்கு புதியவர்கள். பெண்களுக்காக பெண்களே நடத்தும் சேனல்.
பெண்கள் எல்லா துறைகளிலும் ஒடுக்கப்படும்போது அதற்கு ஊடக துறை ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆஃப்கானிஸ்தானில் ஊடகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள், செய்தி வாசித்தல் பிரிவுடன் நின்று விடுகின்றனர். ஊடகத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருக்கின்றனர். முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் ஆண்கள் தான். அப்படியிருக்கையில், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருக்கும் ‘சான்’ டிவிக்கு வாழ்த்துகளும், ஆதரவும் குவிந்து வருகின்றன.
பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்குதல், இந்த சமூகம் பெண்கள் குறித்து என்ன நினைக்கிறது, பாலின பாகுபாடு, பெண்கள் முன்னேற்றம் இவை எல்லாவற்றையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை அந்த சேனலில் வழங்குகின்றனர்.
இதனை ஹமீத் சமர் எனும் ஊடகவியலாளர் ஆரம்பித்தார். பெண்கள் ஊடகத்தில் பணிபுரிய ஏன் மற்ற ஊடக நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும்? அவர்களுக்காகவே ஒரு சேனல் ஆரம்பித்தால் என்ன? என அவர் யோசித்ததில் பிறந்ததே ‘சான்’ டிவி.
சான் டிவி கிட்டத்தட்ட 70 சேனல்களுடன் போட்டிப்போட வேண்டியிருக்கிறது. காபுல் உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெண்களை கவர்வதே ’சான்’ டிவியில் உள்ள பெண்களின் முதல் முக்கிய கடமையாக உள்ளது. இருப்பினும், சேனல் ஆரம்பித்த சிறிய காலத்திலேயே இதற்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.