பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் இப்போது நாம் பேசத் துவங்கியிருக்கிறோம். மாதவிடாயின் முதல் நாளில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க சில நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. ஆனால், மாதவிடாய் குறித்த அடிப்படை புரிதல்கள் இல்லாமல், அந்நாட்களில் விடுமுறை அளிப்பது சாத்தியமா என்ற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. மாதவிடாய் விடுமுறையை நம் மேலதிகாரியிடம் எப்படி கேட்பது என்ற சில தயக்கங்களும் எழுந்து வருகின்றன.
மாதவிடாயின்போது பள்ளி மாணவிகள் அதிக சிரமங்களுக்கு உள்ளாவார்கள். மாதவிடாய் சுகாதாரம் குறித்து அத்தகைய இளம் பெண்களுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால், சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று, அத்தகைய புரிதல்கள் ஆசிரியருக்கே இருக்கிறதா என்ற கேள்வியை எழச் செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சீருடை மற்றும் வகுப்பு மேசையில் ரத்தக்கறை படிந்தததற்காக, சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை திட்டியதாக கடிதம் எழுதிவைத்து, ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இப்படியிருக்கையில், மாதவிடாய் காலத்தில் மாணவிகள் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, வெளிநாடு ஆசிரியர் ஒருவர் புது முயற்சியை முன்னெடுத்துள்ளார். அது, தன் வகுப்பில் தாங்கள் எதிர்பாராமல் மாதவிடாய் ஏற்படும் மாணவிகள், சகஜமாக செயல்பட அவர்களுக்குத் தேவைப்படும் நாப்கின்கள், டாம்பூன்கள் உள்ளிட்டவை அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை தயாராக வகுப்பறையிலேயே தயார்செய்து வைத்திருக்கிறார் ஆசிரியர் கிரிஸ்டின் ஹெவ்னர்.
இதுகுறித்த அவருடைய முகநூல் பதிவை, 11,000-க்கும் மேலானோர் பகிர்ந்தனர். பலரும் அந்த ஆசிரியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பள்ளியிலேயே மாதவிடாய் ஏற்படும் மாணவிகள், ஆசிரியரிடம் தெரியப்படுத்தி அந்த பெட்டகத்தை வாங்கிக்கொள்ளலாம் எனவும், அந்நாளுக்கு எத்தனை நாப்கின்கள், டாம்பூன்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும், அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றாலும் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம் என அந்த ஆசிரியர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். மாதவிடாயின் போது தேவைப்படும் அனைத்து விதமான பொருட்களையும் உள்ளடக்கிய இந்த பெட்டகத்தை ஆசிரியர் தன் சொந்த செலவிலேயே தயார் செய்கிறார்.
இம்மாதிரியாக, மாணவ, மாணவிகள் மீது சின்ன சின்ன புரிதல்களால் ஆசிரியர் - மாணவர் உறவு இன்னும் இன்னும் அழகாகும்.