இந்திய தொழிலதிபர் அதானி, ஆஸ்திரேலியாவில் அமைக்கவுள்ள நிலக்கரிச் சுரங்க திட்டத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கமாக அமைய உள்ள இந்த சுரங்கத்திற்கு, ஆஸ்திரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. 16.5 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்த, அதானி நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட போதே வடக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம் சாட்டிய சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் இதற்கு எதிராக குழு அமைத்தனர்.
இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரையில் நேற்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், அதானி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். கடற்கரை மணலில் STOP ADANI, ADANI GO HOME என்று எழுதி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிட்னியில் கலந்து கொண்ட போராட்டக்காரர் ஒருவர் பேசிய போது, "எனது பெண் குழந்தையின் வயது இரண்டு. பத்து வருட காலத்திற்கு பிறகு, இதுகுறித்து நான் அவளிடம் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. அப்போது, எல்லாம் கையை மீறி போயிருக்கும். அதன்பின் அவள் என்னைப் பார்த்து, 'நீங்கள் ஏன் எதுவும் செய்யவில்லை?' என்று என்னை கேட்டுவிடக் கூடாது என்பதால், இப்போதே போராடுகிறேன்" என்றார்.
சிட்னியில் உள்ள ‘Stop Adani’ போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஐசக் கூறுகையில், "இது ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.எங்களது காலநிலை சிதைந்து போகும் நேரத்தில், தென் துருவத்தின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாக இது இருக்கும். இது சர்வதேச பிரச்சனை என்பதால் தான், உலகம் முழுவதிலிருக்கும் மக்கள் இதை உற்று நோக்குகிறார்கள். இதனால் தான், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய மக்கள் அதானி வேண்டாம் என்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ஓ'ஷானாசி கூறுகையில், "இத் திட்டம் மூலம் உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் பாதிக்கப்படும். எனவே தான், மெல்போர்ன், சிட்னி, கான்பெர்ரா, அடிலைட், கெய்ர்ன்ஸ் ஆகிய பகுதிகள், அதானியின் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்படாமல் பார்த்துக் கொள்கின்றன" என்றார்.