பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
துருக்கி, சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
துருக்கியின் மாலத்யா மாகாணத்தில் 23 பேரும், சன்லியுர்ஃபாவில் 17 பேரும், தியர்பாகிரில் 6 பேரும், உஸ்மானியாவில் மேலும் 5 பேரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
துருக்கியில் கெய்ரோ வரை உணரப்பட்ட நிலநடுக்கம், அங்கிருந்து 90 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் காசியான்டெப் நகருக்கு வடக்கே மையமாக வைத்து செயல்பட்டது.
அங்கு தான் பல நகரங்களுடன், தங்கள் நாட்டின் நீண்டகால உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேறிய மில்லியன் கணக்கான சிரிய அகதிகள் வசித்து வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு “தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். “இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில், குறைந்த சேதத்துடன் கடந்து செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
குறைந்தது 6 நில அதிர்வுகள் ஏற்பட்டன, மேலும் ஆபத்துகள் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு மக்களை வலியுறுத்தினார். “இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதே எங்களது முன்னுரிமை” என்று அவர் கூறினார்.
வடக்கு நகரமான அலெப்போவிலும், மத்திய நகரமான ஹமாவிலும் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சிரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் நகரில் கட்டிடங்கள் நிலைகுலைய தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் இறங்கினர்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக துருக்கி மற்றும் சிரியாவுக்கு பறக்க மீட்புக் குழுக்களை தயார் செய்து வருவதாக ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் கூறினார்.
100 தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்களைக் கொண்ட குழுக்கள் இரண்டு Il-76 போக்குவரத்து விமானங்களுடன் துருக்கிக்கு அனுப்ப தயாராக உள்ளன.
இதற்கிடையில், துருக்கி மற்றும் வடக்கு சிரியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம், நாட்டின் வடமேற்கில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் “பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மக்கள் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் சிக்கியுள்ளனர்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அதன் அவசர மருத்துவ குழுக்களின் நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டுள்ளது”.
“போலந்து 76 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு மீட்பு நாய்கள் அடங்கிய மீட்புக் குழுவான HUSAR அனுப்பப்படும்”, என்று உள்துறை மற்றும் நிர்வாக அமைச்சர் மரியஸ் கமின்ஸ்கி தெரிவித்தார்.
“1939ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இதுவாகும்”, என்று துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தில் 2,818 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.