அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், பயங்கரவாதத்தாலும், தீவிரவாதத்தாலும் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான், ஒவ்வொரு நாளிலும் மக்களை கொன்று குவித்து வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமும் தந்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்லாயிரம் கோடி கணிக்கில் நிதியுதவி அளிக்கிறது. அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும் உள்ளது. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்து தடை செய்யப்பட்டுள்ள 20 இயக்கங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் கொல்கின்ற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடனான நட்புறவு தொடர முடியாது.
தலீபான் மற்றும் இன்னும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக திகழ்ந்து கொண்டிருந்தால், அதை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டியவரும். ஆப்கானிஸ்தானில் மீண்டும் படையின் எண்ணிக்கையையும் அமெரிக்கா உயர்த்துவது உறுதியாகி உள்ளது.
பாகிஸ்தானில் அந்நாட்டு அரசு பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என இனம்பிரித்து உள்ளது. இந்தியாவிற்கு எதிரான மறைமுக போருக்கு பயங்கரவாதிகளை பயன்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பொருளாதார மற்றும் கட்டமைப்பு பணியில் இந்தியா நாட்டம் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு மற்றும் கவலையை தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த கவலையானது தேவையற்றது.
பாகிஸ்தான், நாகரிகம், ஒழுங்கு மற்றும் சமாதானத்துக்கான தனது உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டிய தருணம் இது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் அன்டன் பேசுகையில், "ஆப்கானிஸ்தானில் இந்தியா ராணுவ தளத்தை அமைக்கவில்லை. இந்தியா அங்கு படைகளையும் நிறுத்தவில்லை. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்க இந்தியாவை காரணமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது" என்றார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்ச்சியாக நேரடியாக ஆதரவு கொடுத்து பாகிஸ்தான் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது எனவும் அமெரிக்கா குற்றம் சாட்டிஉள்ளது.