இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா, இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றார். இதனால், அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கிற்காக, அவர் லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் முன் ஆஜராவதற்கு முன்னர் மல்லையா நிரூபர்களிடம் கூறுகையில், "வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நான் இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும், என் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் மறுக்கிறேன். தொடர்ந்து மறுப்பேன். இந்த வழக்கில், என்னை நிரபராதியாக நிரூபிக்க என்னிடம் 'போதுமான ஆதாரங்கள்' உள்ளன" என்றார்.
மேலும், கடந்த ஞாயிறன்று நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் லீக் போட்டியை நேரில் காண வந்த விஜய் மல்லையாவை நோக்கி ரசிகர்கள் 'திருடன்' 'திருடன்' என கூச்சலிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மல்லையா, "அன்று ஓவல் மைதானத்தில் யாரும் என்னை திருடன் என்று அழைக்கவில்லை. யாரோ இரண்டு பேர் குடித்துவிட்டு அப்படி கூச்சலிட்டனர். மற்றபடி நிறைய பேர் என்னருகில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்" என்றார்.
பின் விசாரணையின் முடிவில், நீதிமன்றம் அவரது ஜாமீனை டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அடுத்ததாக, ஜுலை 6-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளது.