அமெரிக்கா, ஐநா ஆகியவற்றின் எச்சரிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை என நடத்தி வரும் வட கொரியாவால், மே 13-ஆம் தேதிக்குள் உலகப் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பையும் மீறி, கடந்த சனிக்கிழமையன்று வட கொரியா, ஏவுகணை சோதனை ஒன்றை நிகழ்த்தியது. இந்த ஏவுகணை சோதனை, வட கொரியாவின் தலைநகரான யோங்யாங் பகுதியின் வடக்கு பகுதியில் நிகழ்த்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேசுகையில், வட கொரியாவின் இந்த அணு மற்றும் ஏவுகணை சோதனைகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்படுத்த தவறிவிட்டது, இது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, எண்ணற்ற முறையில் வட கொரியா, ஏவுகணைகளை சோதனை செய்வது, அணு ஆயுதம் தொடர்பான சோதனைகளை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதன்மூலம், இடைநிலை தொலைவிலான ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணைகள் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, வட கொரியா நிறுவனரின் பிறந்தநாளான ஏப்ரல் 15-ஆம் தேதி, வட கொரியா நடத்திய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உலக உழைப்பாளிகளின் தினமான மே 1-ஆம் தேதி (நேற்று) இரவு, வடகொரியா முன்பைவிட தீவிரமாக தன்னுடைய ராணுவத் தளவாடங்களை, ‘சென்சாய்’ நகரில் நிலை நிறுத்தியுள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்சாய் நகர் சீனாவுக்கு சொந்தமானது என்றாலும், அதுதான் வடகொரியாவின் எல்லைப் பகுதியாகும். வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலால், எல்லையோரம் உள்ள மக்களை பாதுகாக்கும் விதமாக, இன்று மட்டும் ஆறு முறை சீனா அபாய சங்கு ஊதியுள்ளதாம்.
எனவே, இதே நிலை நீடித்தால், மே 13-ஆம் தேதிக்குள் இது உலகப் போராக வெடிக்கலாம் என்ற அச்சம், உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.