நீங்கள் எங்க நாட்டின் பிரதமர் ஆக வேண்டும்: சுஷ்மா ஸ்வராஜிடம் உருகும் பாகிஸ்தான் பெண்!

சுஷ்மாவின் இந்த உடனடி நடவடிக்கை மற்றும் இந்திய உயர் ஆணையத்தின் உதவிகள் குறித்து பூரித்துப் போன ஹிஜாப் ஆசிஃப்.....

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஜாப் ஆசிஃப் என்ற பெண், தனது மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு, இந்திய தூதரகத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் ட்விட்டர் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், “நோயாளி ஐசியு-வில் உள்ளார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும். விசாவிற்கு விண்ணப்பித்து இரண்டு மாதங்களாக காத்திருக்கிறேன். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் மேடம். பாகிஸ்தானில் உள்ள எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்க தயாராக இல்லை. நீங்கள் உதவி செய்ய வேண்டும் என நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரான கெளதம் பம்பாவாலேவை தொடர்பு கொண்ட சுஷ்மா, அந்த பெண்ணிற்கு உடனடியாக விசா க்ளியீர் செய்யுமாறு உத்தரவிட்டார்.

சுஷ்மாவின் இந்த உடனடி நடவடிக்கை மற்றும் இந்திய உயர் ஆணையத்தின் உதவிகள் குறித்து பூரித்துப் போன ஹிஜாப் ஆசிஃப், தனது ட்விட்டரில், “இங்கே என் மீது அளப்பறியா அன்பு செலுத்தப்படுகிறது. நீங்கள் எங்கள் நாட்டின் பிரதமராக இருந்திருக்கக் கூடாதா? எங்கள் நாடு மாறியிருக்கும்.

நான் உங்களை எவ்வாறு அழைப்பது? ‘சூப்பர்பெண்’ என்று அழைப்பதா? ‘கடவுள்’ என்று அழைக்கட்டுமா? உங்கள் பெருந்தன்மையை விவரிக்க வார்த்தையே இல்லை. எனது கண்ணீரால் உங்களை வாழ்த்துவதை என்னால் தடுக்க முடியவில்லை.

சுஷ்மா சுவராஜைப் போன்ற பெண்ணை இதுவரை நான் பார்த்ததில்லை. இரு நாடுகளுக்கிடையே எவ்வளவோ சர்ச்சைகள், சண்டைகள் இருந்தாலும், அவர் அதனை மனதில் கொள்ளாமல், தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் மேடம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தனது நாட்டின் பிரதமரான நவாஸ் ஷெரிஃப்பிற்கும் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “நம் நாட்டின் அரசு ஊழலில் மலிந்து கிடக்கின்றது. நாங்கள் இந்தியாவை வெறுக்கவில்லை. நான் இந்தியாவிற்கு சென்றிருக்கிறேன். சத்தியமாக சொல்கிறேன்… நான் இந்தியாவையும், இந்தியர்களையும் மிகவும் நேசிக்கின்றேன். அவர்களும் என்னை நேசிக்கிறார்கள்.

பாகிஸ்தானில் சுஷ்மாவைப் போல யாரும் இல்லை. சர்தாஜ் அஜிஸ் இருக்கிறாரா இல்லையா என்றே பலருக்கும் தெரியவில்லை (சர்தாஜ் அஜிஸ் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்)” என்று காட்டமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

×Close
×Close