ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாய் சுமார் 20 வருடங்களாக இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரப்பர் குழாயால் இத்தனை வருடங்களும் அப்பெண்ணுக்கு எத்தகைய அறிகுறிகளும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2000-ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்தார். அப்போது, அவருக்கு உணவளிக்க பயன்படுத்தப்பட்ட 12 இன்ச் ரப்பர் குழாய் அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது. ஆனால், தான் செயலிழந்து கிடந்ததால் அப்பெண்ணுக்கு இதுகுறித்து தெரியவில்லை. அதேபோல், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், அவரது வயிற்றுக்குள் இருந்த 12 இன்ச் ரப்பர் குழாயை அகற்றாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பக்கவாதத்திலிருந்து நலமடைந்த அப்பெண்ணுக்கு, வயிற்றில் ரப்பர் குழாய் இருந்தும் எவ்விதமான அறிகுறியும் ஏற்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அப்பெண் பரிசோதனை ஒன்றிற்காக மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது, அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அப்பெண்ணின் வயிற்றில் குடல் பகுதியில் கருப்பான பொருள் ஒன்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அவரது வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாய் சுமார் 20 வருடங்கள் இருப்பது தெரியவரவே, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பெண்ணின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், தன் வயிற்றில் ரப்பர் குழாய் இருந்தபோது, தனக்கு எவ்விதமான அறிகுறிகளும் ஏற்படவில்லை எனவும், எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் அப்பெண் கூறினார்.