ஈரானில் குழந்தை பெற முடியாத பெண்கள், முகப்பரு உள்ளவர்கள் ஆசிரியராக முடியாது: சர்ச்சைக்குரிய விதிமுறைகள்

முகப்பருக்கள், முகத்தில் முடி, மச்சங்கள், அரிப்பு, கண்களின் வடிவமைப்பில் கோளாறு ஆகிய பிரச்சனைகள் உள்ள பெண்கள் ஆசிரியராக முடியாது என ஈரான் அறிவித்தது.

முகப்பருக்கள், முகத்தில் முடி, மச்சங்கள், அரிப்பு, கண்களின் வடிவமைப்பில் கோளாறு (Cross Eye) ஆகிய பிரச்சனைகள் உள்ள பெண்கள் ஆசிரியராக முடியாது என ஈரான் நாட்டு கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் வகுப்பறையின் உள்ளே நுழைவதிலிருந்தும் தடை செய்யப்படுகிறது என அந்நாட்டு கல்வித்துறை அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல், நோய்த்தொற்று, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், புற்றுநோய், சிறுநீரக கற்கள் ஆகிய உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்களும் இனி ஆசிரியராக முடியாது என ஈரான் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், Color Blindness எனப்படும் நிறக்கோளாறு உள்ளவர்கள் கலைத்துறையில் ஆசிரியராக முடியாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானதில் இருந்து இந்த அறிவிப்பு வைரலாக பரவி வருகிறது. இம்மாதிரியான விநோத விதிமுறைகளை ஈரான் கல்வித்துறை புகுத்தியுள்ளதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை விட, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட சிகிச்சை மேற்கொள்வதிலேயே அதிக நேரம் செலவழிப்பதாக FARS செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.

இந்த அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானிக்கு நெருக்கமானவராக கருத்தப்படுபவர் ஒருவர், கல்வித்துறையின் இந்த அறிவிப்புகள் குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார். ஈரானில் பெண் ஆசிரியர்கள் தங்கள் தலையை ஸ்கார்ஃப் கொண்டு மறைத்துதான் கற்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினால் ஸ்டீஃபன் ஹாக்கிங் கூட ஈரானில் ஆசிரியராக முடியாது என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

”ஆசிரியர்களின் உடல் மற்றும் மனநலம் அவர்களின் கற்பித்தல் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்த விதிமுறைகள் மனித உரிமைகளுக்கு எதிரானது”, என மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் ஆசிரியர் அஹமது மெதாதி தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close