இஸ்லாமிய புனித மாதமான ரமலான் அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகள் இஸ்லாமிய விவகாரங்களில் சவுதிஅரேபியாவின் முடிவுகளை பின்பற்றி வருகிறது. இதில் நேற்று சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதால் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அமீரக பிறை பார்க்கும் கமிட்டி ரமலான் மாதம் தொடங்குவது குறித்து அறிப்பை வெளியிட்டது.
அதன்படி அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் மாத நோன்பு தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அமீரகம் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா நாடுகளும் இன்று முதல் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
உக்ரைன் அப்டேட்
உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகின.
இந்த பேச்சு வார்த்தை முடிந்து 3 நாட்களான நிலையில் நேற்று இரு தரப்பு அமைதி பேச்சு வார்த்தை காணொலி காட்சி வழியாக தொடங்கியது.
வடக்கு நகரமான செர்னிஹிவின் அருகேயுள்ள சுலோபோடா, லுகாஷிவ்கா கிராமங்களை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளன.
கீவ் நகரின் கிழக்கேயும், வடகிழக்கேயும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் படைகள் கூறுகின்றன.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் கலாச்சார நினைவு சின்னங்களும் சேதமடைந்தன.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது.
இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது.
சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை யாரும் எதிர்க்க முடியாது: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
அமெரிக்கா பொருளாதாரத் தடை
வடகொரிய ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடையை விதித்துள்ளது.
வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வட கொரிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நான்கு துணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“