Advertisment

உக்ரைன் போரில் டென்னிஸ் வீரர்.. ரஷ்யாவிற்கு எதிராக புதிய நிதித் தடைகள்.. மேலும் செய்திகள்

உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்தனர் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
உக்ரைன் போரில் டென்னிஸ் வீரர்.. ரஷ்யாவிற்கு எதிராக புதிய நிதித் தடைகள்.. மேலும் செய்திகள்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தல்

Advertisment

உக்ரைனில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 3-ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் பலர் எல்லை பகுதி வழியாக அருகில் உள்ள நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர்.

இதனால் உக்ரைனில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டினரும், அங்கு படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதி லனா நுசெய்பெ பங்கேற்றார். அப்போது அவர் உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசியதாவது:

இருதரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பின்பற்றி அப்பாவி மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த கவுன்சிலில் உள்ள சக உறுப்பினர்களுடன் இணைந்து அமீரகம் இரு நாடுகளுக்கு இடையிலான பகையை தணித்து, போர் நிறுத்தம் என்ற இலக்கை அடைவதற்கு உதவ தயாராக இருந்து வருகிறது.

இந்த நெருக்கடியை ராஜதந்திர முயற்சிகள் மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ரஷிய படைகள் உக்ரைனில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எனினும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தியா, சீனா, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்தன.

இதனால் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், இந்த தீர்மானத்தை தனது மறுப்புரிமையை பயன்படுத்தி ரஷியா தோற்கடித்தது.

ரஷ்யா தாக்குதல்: உக்ரைனில் 190க்கும் அதிகமானோர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவரும் தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்தனர் என்று உக்ரைன் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. 

போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்காவும் போர் தொடுக்கும் முடிவை கைவிடுமாறு வலியுறுத்தி வந்தது.

எனினும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன.

தலைநகர் கீவ் நகரையும் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.

ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்தனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.  நேற்று முன்தினம் 2ஆவது நாளாகவும் போர் நீடித்தது.

இதில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.  ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்தனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், 3ஆவது நாளான நேற்று உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. 

எனினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்தனர் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

ரஷ்ய படையெடுப்பினால், 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். 

உக்ரைன் விவகாரம்; மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணமாக ராஜதந்திர சிக்கலில் இந்தியா

ஆனால், ரஷிய வீரர்கள் உயிரிழப்புபற்றி ரஷிய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டர் லையாஷ்கோ முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், 3 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் 1,115 உக்ரைனியர்கள் காயமடைந்தனர்.  அவர்களில் மொத்தம் 33 பேர் குழந்தைகள்.  ரஷ்யா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேரை இதுவரை இழந்துள்ளோம் என தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான புதிய நிதித் தடைகள்

ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியில் திணறுகிற நிலை உருவாகி வருகிறது.

ரஷ்ய அதிபர் புதின் மீது அமெரிக்கா நேரடியாக பாய்ந்துள்ளது. அவருக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து சில தினங்களுக்கு முன்பு அதிரடி காட்டியது. இதனால் அமெரிக்காவில் உள்ள புதின் சொத்துகள் முடக்கப்படுகின்றன.

புதினுக்கு பக்க பலமாக உள்ள வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருக்கிறது. ரஷிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மீதும் அமெரிக்காவின் பொருளாதார தடை நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்நிலையில் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகத்தில்  (SWIFT) இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு முக்கிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. 

இதன்படி உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான புதிய நிதித் தடைகளை விதிக்க, ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா  ஒப்புக்கொண்டுள்ளன.

அதன்படி ரஷ்ய வங்கிகளை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து விலக்க ஒப்புக்கொள்கின்றன.

முன்னதாக தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து 2014 இல் ஈரான், உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து  நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் (SWIFT) என்பது பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன நிறுவனமாகும்.

இது 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே உள்ளக செய்தியிடல் அமைப்பாக செயல்படுகிறது.

தாய்நாட்டுக்காக போரிட முன்வந்த உக்ரைன்

முன்னாள் டென்னிஸ் வீரர்!

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளதாக உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி(36) தெரிவித்தார். 

உக்ரைனில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய சண்டை நடந்தது. இரவு நேரத்தில் ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலை அடையாளப்படுத்தும் சைரன்கள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருங்கடலில் இருந்து உக்ரைன் முழுவதும் ஏவுகணைகளை ரஷிய கடற்படை வீசித் தாக்குதல் தொடுத்தது. பெலாரஸ் மற்றும் கிரிமியாவில் இருந்தும் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022இல் ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றில் பங்கேற்ற ஸ்டாகோவ்ஸ்கி, தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக ஹங்கேரிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.   

இதுதொடர்பாக ஸ்டாகோவ்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு ராணுவ அனுபவம் இல்லை, ஆனால் துப்பாக்கியை கையாளும் அனுபவம் எனக்கு உள்ளது. என் அப்பாவும் சகோதரனும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். ஆனால் நான் அவர்களிடம் அடிக்கடி பேசி தைரியப்படுத்துகிறேன். அவர்கள் வீட்டின் அடித்தளத்தில் தூங்குகிறார்கள். நிச்சயமாக, நான் சண்டையிடுவேன்” என்று அவர் கூறினார். 

உலக அளவில் கொரோனா பாதிப்பு; 43.46 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று 71,377 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 635 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 9,72,835 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  8.05 கோடியை கடந்தது. 

உலகின் பிற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, ஜெர்மனியில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் புதிதாக 1.22 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பிரேசிலில் நேற்று 90,199 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  72,856 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.46 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.62 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். 36.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment