International Women’s Day: பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சோ கால்டு விதிமுறைகளுக்கு விடுமுறையளித்திருக்கிறது இன்றைய தலைமுறை.
அடுப்படியில் இருந்தவர்கள் ஆடிட்டோரியத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்கள். கையில் இருந்த கரண்டி, புத்தகமாக மாறிய கணத்திலிருந்து, அவர்கள் ஏற்றம் அடைந்தார்கள். இன்றைய சூழலில் பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை எனும் அளவுக்கு ‘ஸெட்’ வேகத்தில் பயணிக்கிறார்கள்.
ஆண்களுக்கு நிகரான பல சவால் நிறைந்த விஷயங்களை சுவாரஸ்யத்துடன் கையாள்கிறார்கள். அப்படியான சுவாரஸ்ய சூழலில் தான் பைக் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆன் ஜெனிஃபர்.
யாரிவர்?
பைக் ரேஸில் கடந்தாண்டு தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். இந்தியாவின் சார்பாக ’ஏசியா கப் ஆஃப் ரோட் ரேஸிங்கில்’ கலந்துக் கொண்டவர்.
சிறுமிக்கு உரிய பாவனைகளுடன் பேசத் தொடங்குகிறார் ஜெனிஃபர்.
“வீட்ல அண்ணாவுக்கு ரேஸிங் பிடிக்கும். அதனால கோச்சிங் போவான். அப்போ தான் எனக்கும் அவன மாதிரி பைக் ரேஸ் போகணும்ன்னு ஆசை வந்துச்சி.
வீட்ல சொன்னதும், சரின்னு சேத்து விட்டாங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டிராக்ல போய் ஓட்டி பழகுனேன். என்னோட 14 வயசுல பைக் ரேஸ் ஓட்ட ஆரம்பிச்சேன், இப்போ 17 வயசாகுது. போன வருஷம் நேஷனல் சாம்பியன்ஷிப் வின் பண்ணுனேன். அப்புறம் ஆசிய கோப்பை போட்டிலயும் இந்தியா சார்பா கலந்துக்கிட்டேன்” என்றவரிடம்,
”வழக்கமா பொண்ணுங்க வீட்ல சொல்ற மாதிரி உங்க வீட்ல ஒண்ணும் சொல்லலயா” எனக் கேட்கத் தோன்றியது. மனதில் மறைக்கத் தெரியாத காரணத்தால் சந்தேகத்தை அப்படியே கேட்டோம்.
“உண்மையிலேயே யாராலயும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எங்க வீட்ல எனக்கு ஆதரவா இருக்காங்க. ஸ்பான்சர் எதும் இல்லாத காரணத்துனால முழுக்க முழுக்க எங்கப்பா தான் செலவு பண்றார். அது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. ஆனா மத்த வீடுகள்ல மாதிரி, பொண்ணுக்கு எதுக்கு பைக் ரேஸ், அதுக்கு இவ்வளவு பணம் செலவாகுதுன்னு எல்லாம் எங்க வீட்ல சொல்லல. பொண்ணு ஆசைப் படறா, செய்யட்டும்ன்னு, தட்டிக் கொடுக்குறாங்க.
ஏன்னா என் கூட கோச்சிங் எடுக்குற நிறைய பேர் நல்லா ஓட்டுவாங்க. ஆனா அவங்க பெற்றோர்கள் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு, பாதிலயே கூட்டிட்டு போய்டுவாங்க. சின்னதா அடிபட்டா கூட, அத காரணமா வச்சி, அவங்கள பாதிலயே நிறுத்திடுவாங்க. அப்புறம் பண பிரச்னைகளும் நிறைய இருக்கும். பெண்கள் நிறைய பேருக்கு பைக் ஓட்டுற ஆர்வம் இருக்கு. ஆனா அதுக்கான சூழல் தான் இங்க இல்ல”
”பள்ளி கல்லூரில உங்கள தூக்கி வச்சி கொண்டாடுறாங்களா?” என்றதும், “அட நீங்க வேற. நான் இப்போ முதலாமாண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிக்கிறேன். கோச்சிங் போகணும்ன்னு பர்மிஷன் கேட்டா, உனக்கு எதுக்கு இதெல்லாம். படிப்பு தான் உனக்கு கடைசி வரைக்கும் இருக்கும், இது உனக்கு யூஸாகாதுன்னு க்ளாஸ் எடுப்பாங்க. அப்போல்லாம் அவ்ளோ கோபம் வரும். உண்மையிலேயே விளையாட்டுத் துறைல பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனா அத யாரும் புரிஞ்சிக்கிறது இல்ல”.
அண்ணா என்ன சொல்றாரு?
அண்ணாவும் ரேஸ் பண்றான். ஆனா நான் சாம்பியன்ஷிப் வின் பண்ணிட்டேன்னு கொஞ்சம் பொறாமை, பட் எனக்கு நல்லா சப்போர்ட் பண்ணுவான்.
அடுத்த பிளான்?
இந்த வருஷமும் ரேஸ் ஓட்டுறேன். ஆனா பைக் மட்டும் இல்ல, காரும் சேத்து தேசிய போட்டிக்கு முயற்சி பண்றேன். ஆசிய கோப்பைல மறுபடியும் கலந்துக்குறேன், என ரேஸ் வேகத்தில் பதிலளிக்கிறார் ஆன்.