இந்தியாவில் 43% முதியவர்கள் உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்: அதிர்ச்சிகர ஆய்வு

இந்தியாவில் தனிமை, உறவுச்சிக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக, 100 முதியவர்களில் 43 முதியவர்கள் உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் முதியவர்கள் அனுபவிக்கும் துயரங்களை சொல்லி மாளாது. தங்களது வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது மட்டும் இந்தியாவில் அதிகமல்ல. அவர்களை நம் வீட்டிலேயே வைத்திருந்தாலும், நம்மில் எத்தனை பேர் அவர்களிடம் ஆசையாக அமர்ந்து பேசுகிறோம். அவர்களின் சிறிய சிறிய தேவைகளை அறிந்துகொண்டு நிறைவேற்றுகிறோம். இந்தியாவில் தனிமை, உறவுச்சிக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக, 100 முதியவர்களில் 43 முதியவர்கள் உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை ஏஜ் வெல் அமைப்பு (Age Well Foundation) மேற்கொண்டது. நாடு முழுவதும் 50,000 முதியவர்களை தேர்ந்தெடுத்து கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வை நடத்தியது. அவர்களில், 50 சதவீதம் பேர் தங்களது குடும்பத்தினரால் கவனித்துக்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.

”43 சதவீத முதியவர்கள் தனிமை, உறவு பிரச்சனைகளால் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். 50 சதவீதம் முதியவர்கள் தங்கள் குடும்பத்தினரால் கவனித்துக்கொள்ளப்படவில்லை”, என்பதே இந்த ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, முதியவர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை அரசாங்கம் வகுக்க வேண்டும் என ‘ஏஜ் வெல்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

”அவர்களுடைய தேவைகளும், உரிமைகளும் புறக்கணிக்கப்படுவது சமூக வளர்ச்சி கொள்கைகளை சிதைத்துவிடும். அவர்களை பொதுத்தளத்திற்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க வழி செய்ய வேண்டும். முதியோர்களுக்கு நன்மை பயக்கும் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்.”, ‘ஏஜ் வெல்’ அமைப்பின் நிறுவனர் ஹிமான்ஷூ ராத் கூறினார்.

மேலும், ”மாறி வரும் சமூக பொருளாதார காரணிகளால் நாம் நம்முடைய கலாச்சாரத்தை மறந்துவிட்டோம். இந்த நவீன கலாச்சாரத்துடன் அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால், அவர்கள் தனிமையாக உணர்கிறார்கள்”, என ஹிமான்ஷூ தெரிவித்தார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளாதார சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

முதியவர்களுக்கான தேசிய ஆணையம், ஓய்வு பெற்றவர்களுக்கு பிரதமரின் பெயரில் சுய வேலை வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கி தருதல் ஆகியவை அரசு சார்பில் அவர்களை சுதந்திரமாக உணர வைக்க சில வழிகளாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close