மழைக்காலத்தில் மலையேறுவோம்: இந்தியாவில் சிறந்த 5 ட்ரெக்கிங் இடங்கள்

மலையின் மூடுபனிகளுக்கிடையே மழைத்துளிகளை கையில் பிடித்து அதனை அனுபவிக்க இந்தியாவில் எந்தெந்த மலைகளுக்கு ட்ரெக்கிங் செல்லலாம்.

மழைக்காலம் துவங்கிவிட்டது. மழையை ரசிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால், மலைகளுக்கு சென்று அதன் அழகிலிருந்து மழையை ரசிப்பதே அலாதி இன்பம். மலையின் மூடுபனிகளுக்கிடையே மழைத்துளிகளை கையில் பிடித்து அதனை அனுபவிக்க இந்தியாவில் எந்தெந்த மலைகளுக்கு ட்ரெக்கிங் செல்லலாம்.

1. லேய்ட்லம் கேன்யோன், மேகாலயா:

ஷிலாங்கின் ஒட்டுமொத்த பரப்பையும் பேர்ட்வியூவில் கண்டுவிடலாம் லேய்ட்லம் கேன்யோன் மலைக்கு சென்றால். காசி மலைத்தொடரில் அமைந்துள்ளது. லேய்ட்லம் கேன்யோன் மலை ஒரு அழகென்றால் அதனடியில் உள்ள பள்ளத்தாக்கு அதனினும் அழகு. மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் அதற்கென உள்ள உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியுடனே இங்கு ட்ரெக்கிங் மேற்கொள்ள வேண்டும். இங்கு ட்ரெக்கிங் செல்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

2. லோஹ்கட் கோட்டை, மஹராஷ்டிரா:

மும்பைக்கு அருகிலேயே ட்ரெக்கிங் மேற்கொள்ள சிறந்த இடம் லோஹ்கட் கோட்டை. மலவாலிக்கு அருகில் அமைந்துள்ள லோஹ்கட் கோட்டை வரலாற்று ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. மன்னன் சத்ரபதி சிவாஜியால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட கோட்டை இது. மழைக்காலங்களில் வழுக்கிவிடும் பாறைகளைக் கொண்டது. அதனால், இங்கு ட்ரெக்கிங் செல்லும்போது ஜாக்கிரதையாக இருங்கள்.

3. அந்தர்காங்கே, கர்நாடகா:

இரவில் ட்ரெக்கிங் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இங்கு செல்லலாம். பெங்களூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அந்தர்காங்கே உள்ளது. ட்ரெக்கிங் மட்டுமின்றி, நடைபயணம், மலையேறுதல் உள்ளிட்ட சாகசங்களுக்கான ஏற்ற இடமாகவும் இது திகழ்கிறது. மழைக்குப் பின் இன்னும் பச்சைப்பசேலாக மாறுவதால் மழைக்காலத்திற்குப் பின் ட்ரெக்கிங் செல்ல அந்தர்காங்கே சிறந்த இடம். சூரியன் மறையும் நேரத்தில் இங்கு ட்ரெக்கிங் செய்தால் அதன் அழகை முழுமையாகக் கண்டுணரலாம்.

4.வேலி ஆஃப் ஃபிளவர்ஸ், உத்தரகாண்ட்:

பல்வேறு வண்ணமாயமான பூக்களால் சூழப்பட்ட வேலி ஆஃப் ஃபிளவர்ஸ்-இன் அழகு உங்களை வார்த்தைகள் அற்றவராக ஆக்கிவிடும். மேற்கு இமயமலையில் உள்ள வேலி ஆஃப் ஃபிளவர்ஸ், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொள்ளை அழகுடன் காட்சியளிக்கும் இந்த இடம் மழைக்காலத்தில் கொண்டிருக்கும் கூடுதல் அழகை சொல்ல வேண்டுமா என்ன?

5. ஹம்தா பாஸ், இமாச்சலப் பிரதேசம்:

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆகச்சிறந்த ட்ரெக்கிங் இடம் ஹம்தா பாஸ். அங்குள்ள நீலநிறத்திலான ஏரி அதன் அழகை கூடுதலாக காட்டும்.

×Close
×Close