பயண விரும்பிகளுக்கு பயணத்தின்போது பல சிரமஙகள், சந்தேகங்கள் ஏற்படும். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படி செல்வது, எங்கே நமக்கேற்ற உணவுகள் நம்முடைய பட்ஜெட்டில் கிடைக்கும், எங்கு தங்குவது என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படும். அதற்காக நாம் அலைந்து திரிவதிலேயே பயணத்தை சுகமாக அனுபவிப்பதற்கு பதில், சோர்ந்துபோய் எப்போதுதான் வீட்டுக்குபோய் சேருவோம் என ஆகிவிடும். ஆனால், இந்த ஐந்து செல்ஃபொன் ‘ஆப்’கள் இருந்தால் போதும். நம்முடைய பயணத்தை எளிதாக்கிவிடும். நம் சந்தேகங்களுக்கு விரல்நுனியில் பதில் கிடைத்துவிடும்.
1. விமான டிக்கெட்டுகள் பெற:
Ixigo- flight booking app குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் பெற இந்த ஆப் உதவிகரமாக இருக்கும். நமக்கு ஏற்ற வகையில் விமான டிக்கெட்டுகள் இருந்தால் அதற்கான அலெர்ட், விடுமுறை காலண்டர், விமானங்களின் நிலவரம், பயண வழிகாட்டிகள், உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலைகள், குறைந்த விலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம், தள்ளுபடி ஆகியவை குறித்து இந்த ஆப் மூலம் எளிதில் தெரிந்துகொண்டு நமது பயணத்தை ‘ஈஸி’யாக மேற்கொள்ளலாம்.
2.உணவகங்கள், தங்கும் விடுதிகள்:
Couchsurfing- connect and stay with locals இந்த ஆப் மூலம் வெளிநாடுகளில் குறைந்த விலையில் நமக்கான உணவகங்கள், தங்கும் அறைகளை பற்றிய தகவல்களை பெற முடியும். 12 மில்லியன் பயண ஆர்வலர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். நாம் செல்லும் இடங்களில் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் பயணத்தை சுலபமாக்க ஆப் வழிவகுக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள 2,30,000 நகரங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.
3. சாலை வழி பயணங்களை மேற்கொள்ள:
Fuel Buddy- road trip essential இந்த ஆப் மூலம் கார், பைக் மூலம் பயணம் மேற்கொள்பவர்கள், தாங்கள் செல்லக்கூடிய இடங்களில் எங்கு, எந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து செக் செய்தால், உங்கள் அருகிலேயே பெட்ரோல், டீசல் எங்கு கிடைக்கும் என்பதை இந்த ஆப் பட்டியலிடும்.
4.சத்தான உணவுகளுடன் பயணம் மேற்கொள்ள:
HealthyOut- for healthy eating-ஆப் மூலம் பயணத்தின்போது துரித உணவுகளை தவிர்த்து சத்தான உணவுகள் எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை பெறலாம். பயணத்தின்போது ஆரோக்கியமான உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வது கடினம். ஆனால், இந்த ஆப் மூலம் அருகில் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் உணவகங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், அந்த உணவுகளில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்ட சத்துகள் எவ்வளவு உள்ளன என்பதையும் இந்த ஆப் காண்பித்துவிடும்.
5.பயணத்தின்போது உறவுகளை தொடர்புகொள்ள:
Viber- keeping in touch made easy-ஆப் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பயணத்தின்போது தொடர்புகொள்ள முடியும். உங்கள் செல்ஃபோனில் உள்ள தொடர்பு எண்களை எல்லாம் இந்த ஆப்-உடன் இணைத்துவிட்டால் போதும். குறுந்தகவல்கள், ஆடியோ காலிங், வீடியோ காலிங் மூலம் தொடர்புகொள்ள முடியும்.