மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வயது ஒரு தடையில்லை என நிரூபித்துக் காட்டிருக்கிறான் வேலூரை சேர்ந்த 9 வயது சிறுவன் இஷான் ஆபிரஹாம்.
இயற்கை மீது தீரான காதலும், ஆர்வமும், சக உயிர்களின் மீது பற்றும் கொண்டிருந்தால், குடும்பத்துடன் செல்லும் ஒரு படகு சவாரி கூட நம்மை பெரும் அறிவியல் விஞ்ஞானியாக மாற்றும் என்பதற்கு இஷான் ஆபிரஹாம் தான் சான்று.
வேலூர் கிரிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் கிஷோர் பச்சமுத்துவின் மகன் இஷான் ஆபிரஹாம். கடந்த 2016-ஆம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றான் சிறுவன் இஷான். நாமெல்லாம், படகு சவாரி போகும்போது மற்றவர்களுடன் பேசிக்கொண்டும், இயற்கையை ரசித்துக்கொண்டும் சவாரியை அனுபவித்திருப்போம்.
ஆனால், சிறுவயதிலிருந்தே பூச்சிகள், மீன்கள் என சிறுசிறு உயிரிகளின் மீது ஈர்ப்பும், அவற்றைக் குறித்து தேடிதேடி படிக்கும் ஆர்வமும் கொண்ட சிறுவன் இஷான் ஆபிரஹாம் படகு சவாரிக்கு ஒரு தேடுதல் வேட்கையுடன் சென்றான். ஒரு உயிரினத்தைக் கண்டறியும் தேடலில் 10 கி.மீ. தூரம் வரை படகில் பயணித்தான்.
அப்போதுதான் அந்த ஜெல்லி மீன் அவன் கண்ணில்பட்டது. “ரொம்ப சிறியதா, ஒரு வெள்ளை நிற மலர் மாதிரி இருந்துச்சு. உடனே எங்க அப்பாகிட்ட அதைக் காண்பித்தேன். அதுக்கப்புறம் தான், அது ஜெல்லி மீன்னு தெரிஞ்சுது. ஒரு பாட்டில்ல எனக்குக் கிடைத்த ஜெல்லி மீன்களை எடுத்துக்கொண்டேன்”, என்கிறான் சிறுவன் இஷான் ஆபிரஹாம் இன்னும் ஆர்வம் குறையாமல்.
அதன்பின், அந்த ஜெல்லி மீன் குறித்து இணையத்தில் ஆராய்ந்தான் இஷான். அப்போது, இந்த வகையிலான ஜெல்லி மீன் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது தெரியவந்தது. உடனே, தன் தந்தையின் உதவியுடன், ஜெல்லி மீன் மாதிரிகளை அண்ணா பல்கலைக்கழகம், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆகிவற்றில் பணிபுரியும் விலங்கியல் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைத்தான். அந்த மாதிரிகள் அனைத்தும் சுமார் 6 மாதங்கள் ஆராயப்பட்டன.
”ஆய்வின் முடிவில் தான் அந்த ஜெல்லி மீன்கள் இதுவரை கண்டறியப்படாத நன்னீரில் வாழும் ஜெல்லி மீன் இனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.”, என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறான் இஷான்.
இந்த ஜெல்லி மீன்களின் செல்கள், இனப்பெருக்க முறை மற்ற ஜெல்லி மீன்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறானது என விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு தற்போது அறிவியல் ஆராய்ச்சி இதழ் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்ல, இந்த ஜெல்லி மீன் இனம் விரைவில் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், இந்நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தின் இந்த ஜெல்லி மீன் இனம் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
“நீங்கள் வயதில் முதிர்ந்தவராகவோ, பெரிய விஞ்ஞானியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் கண்களை திறந்து வைத்துக்கொண்டு, புதியதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே, உங்களால் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடியும்”, என்கிறான் இளம் விஞ்ஞானி இஷான் ஆபிரஹாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.