”இந்து-முஸ்லிம் ஒன்றாக தங்கக் கூடாது”: தம்பதியருக்கு அறை மறுத்த உணவகம்

”இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருப்பதால், ஏதேனும் சொந்த பிரச்சனை காரணமாக அறைக்கு வந்து அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற சந்தேகம் வந்தது.”

இந்து-முஸ்லிம் இருவேறு மதங்களை சேர்ந்த தம்பதியருக்கு, கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் அறை தர மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெவ்வேறு மத நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள் மீது எழுந்த சந்தேகத்தால் அறை தர மறுத்திருப்பதால், அந்த உணவக நிர்வாகம் மதவெறியுடன் செயல்பட்டிருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

கேரளாவை சேர்ந்த வெவ்வேறு மதங்களை பின்பற்றும் தம்பதியர்கள் ஷஃபீக் சுபைடா ஹக்கிம் மற்றும் திவ்யா. இவர்கள் இருவரும் சொந்த பணிகளுக்காக பெங்களூர் சென்றனர். அப்போது, அங்குள்ள ஆலிவ் ரெஸிடென்ஸி எனும் உணவகத்தில் தங்க அறை கேட்டபோது, ஷஃபீக் முஸ்லிம் மதத்தவராகவும், திவ்யா இந்து மதத்தவராகவும் இருப்பதால், அவர்களுக்கு அறை தர முடியாது என அந்த உணவகத்தின் வரவேற்பாளர் மறுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து ஷஃபீக் செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “உணவகத்தின் வரவேற்பாளர் எங்களது அடையாள அட்டைகளை சோதனை செய்தார். அப்போது நாங்கள் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததால், எங்களுக்கு திருமணமாகி விட்டதா என கேட்டனர். அதற்கு எங்களுக்கு திருமணமாகிவிட்டது எனக்கூறியும், அதை ஏற்காமல் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் ஒன்றாக தங்குவதை ஏற்கமுடியாது எனக்கூறி அறை தர மறுத்துவிட்டனர்.”, என கூறினார்.

மேலும், இதுகுறித்து ஆலிவ் ரெஸிடென்ஸி உணவகத்தின் வரவேற்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தம்பதியருக்கு அறை தர மறுத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது, “பெரும்பாலும், இந்துக்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் இந்துக்களையும் திருமணம் செய்வது இல்லை. அதனால், இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருப்பதால், ஏதேனும் சொந்த பிரச்சனை காரணமாக அறைக்கு வந்து அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற சந்தேகம் வந்தது. எனவே, அறை தர மறுத்தோம்.”, என கூறினார்.

மேலும், அவர்களிடம் நிறைய உடைமைகள் இல்லாததாலும், இருவரிடமும் ஒவ்வொரு பேக் மட்டுமே இருந்ததால் சந்தேகம் அடைந்ததாகவும் உணவக வரவேற்பாளர் தெரிவித்தார்.

இருவேறு மதங்களை பின்பற்றும் தம்பதியர்களுக்கு உணவகத்தில் அறை தர மறுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்து-முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்-பெண் இருவரை ஒன்றாக அறையில் தங்க அனுமதித்தால் அவர்களால் ஏதேனும் தங்கள் நிர்வாகத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, ஆலிவ் ரெஸிடென்ஸி அவர்களுக்கு அறை தர மறுப்பதை கொள்கையாகவே கடைபிடித்து வருகிறது. இந்த சம்பவம் மதம் மற்றும் சாதிகளைக் கடந்து திருமணம் செய்துகொண்டவர்கள் மீது எடுக்கப்படும் முன்முடிவுகளை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close