நம் முன்னோர்களை நாம் வணங்குவதற்கு மிக உன்னதமான நாள் ஆடி அமாவாசை
Advertisment
அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.
அதில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று போற்றுவார்கள்.
ஆடி அமாவாசையில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை.
எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போல ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
ஜூலை 17 ஆம் தேதி (ஆடி-1) அமாவாசையும், ஆகஸ்டு 16 ஆம் தேதி (ஆடி-31) ஒரு அமாவாசையும் வருகிறது.
அதில் ஆகஸ்டு 16 ஆம் தேதி (ஆடி-31) வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது.
எனவே விரதம் இருப்பது, முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுப்பது, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், தேவிபட்டிணம், புண்ணிய தலங்களில் புனித நீராட ஆடி- 31 புதன்கிழமையில் வரும் அமாவாசையே உகந்தது.
எனவே ஆடி அமாவாசையில் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். ஆறு பேருக்கேனும் உணவுதானம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து போய் பித்ருக்கள் உங்களுக்கு அருளுவார்கள்.
நீங்கள் செய்த தர்ப்பண வழிபாட்டால், பித்ருக்களின் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும். அதேபோல், இந்தப் புண்ணியங்கள் உங்கள் வம்சத்தையே வாழச் செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“