விஜய் ஹீரோவாக அறிமுகமான படம் ‘நாளைய தீர்ப்பு’. 1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. 26 வருடங்கள் முடிந்து இன்றுடன் 27-வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.
நடிகர் விஜய்..20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் நடிகராகவே அறியப்பட்ட இந்த பெயர் இன்று எத்தனையோ ரசிகர்கள் மனதில் தலைவன் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் இந்த விதை அவ்வளவு எளிதாக தூவப்பட்டது இல்லை. இன்று தமிழகமே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ’சர்கார்’ படத்தின் சர்ச்சையை விஜய் நேற்று இன்று சந்திக்கவில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ’அழகிய தமிழ் மகன்’ படத்தில் தொடங்கி தீபாவளி அன்று வெளியான சர்கார் வரை தொடர்ந்துக் கொண்டே செல்கிறது.
இடையில் எத்தனை படங்கள் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். வெறும் படம் தானே.. இதில் என்ன இருக்கிறது? என்று ஈஸியாக கூறிவிடலாம். ஒரு படத்திற்கு எதிர்ப்பு கிளம்புகிறது என்றால் அதுவெறும் படத்தின் நடிகர் (விஜய்) மட்டும் பாதிப்பது இல்லை. படத்தின் கருவை உருவாக்கிய இயக்குனரில் தொடங்கி, லைட் மேன் வரை அனைத்து கலைஞர்களையும் பாதிக்கும்.
இந்த சிரமங்களை மற்ற நடிகர்கள் அதிகம் சந்தித்தார்களா? என்றால் அதற்கு சினிமா வரலாற்றை புரட்டித்தான் பார்க்க வேண்டும். ஆனால் 90ஸ் கிட்ஸிடம் கேட்டால் உடனே பதில் வருகிறது. “ நம்ம விஜய் அண்ணா படம் தான்பா. எத்தனையோ தடவ ஃபர்ஸ்டே ஷோவுக்கு டிக்கெட் எடுத்துட்டு வெயிட் பண்ணா, படம் இன்னிக்கு ரீலீஸ் இல்ல போயிட்டு வாங்கனு அனுப்பி வைப்பார்கள்.. இப்படி ஒருதடவ இல்லை நிறைய டைம் நடந்து இருக்கு”
இப்படி நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ நடிகர் விஜய் படங்கள் சந்திக்கும் சர்ச்சைகள் எண்ணில் அடங்காதவை. மெர்சல்,சர்க்காரில் தான் அரசியல் பிரச்சனை. ஆனால் இதற்கு முன்பு வெளியான படங்களில் கதை பிரச்சனை, டைட்டில் பிரச்சனை, திருட்டு விசிடி பிரச்சனை, நஷ்ட ஈடு பிரச்சனை என ஏகப்பட்டது இருக்கிறது.
”விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் என்றால் யாரும் ஆச்சரியமாட்டார்கள், ஆனால் படம் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆனால் தான் ஆச்சரியமாக கேட்பார்கள்” என்று விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
சர்ச்சையை சந்தித்த படங்கள்:
2007 ஆம் ஆண்டு வெளிவந்த ’அழகிய தமிழ் மகன்’ படத்தின் படம்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் எம்.எஃப்.ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்கை தொடர்ந்து படத்திற்கு 4 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு படம் ஒருவழியாக ரீலீஸ் ஆன பிறகும், படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கிறார், மது அருந்துகிறார், இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள்.
அடுத்தது, ’காவலன்’ திரைப்படம். விஜய்யின் 50 ஆவது படமான ’சுறா’ தோல்வியை சந்தித்ததை அடுத்து தோல்விக்கு நஷ்ட ஈடு கேட்டு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் காவலன் படத்தை வெளியிட கூடாது என்று பிரச்சனை செய்தனர்.
அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் ’துப்பாக்கி’ படத்தில் நடிப்பது உறுதியானது. முதல் பிரச்சனை தலைப்பில் வெடித்தது. கள்ளத்துப்பாக்கி என்னும் படக்குழுவினர் படத்தை தடைசெய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். கூடவே, படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில இஸ்லாமிய அமைப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு படம் வெளியாகியது.
இதுவரை சந்தித்த பிரச்சனைகளை விட ’தலைவா’ திரைப்படம் சந்தித்த இன்னல்கள் விஜய் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. "Time To Lead" வாசகத்தில் ஆரம்பித்து , படத்தில் இடம்பெறும் காட்சிகள், வசனங்கள் என நீண்டுக் கொண்டே சென்றது. இப்போது தமிழ் ராக்கர்ஸ் போல் அந்த காலக்கட்டத்தில் திருட்டு விசிடி பிரச்சனை வேற. அந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்னமே திருட்டு விசிடியிலும் வெளிவந்தது. படத்தின் தயாரிப்பாளர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். ரசிகர்களும் கூட
பின்பு, நடிகர் விஜய் பிரத்யேகமாக வீடியோவை வெளியிட்டு தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கை குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் படத்தை ரீலிஸ் செய்வதற்கு கோரிக்கையும் விடுத்தார்.
மீண்டும் ஏ.ஆர் முருகதாஸ் உடன் கூட்டணி. தப்பிக்குமா கத்தி.. சொல்லி வைத்தது போல் விவசாயிகள் பிரச்சனை, ஸ்டாபெர்ரி வசனம், கதை திருட்டு என அடுத்தடுத்து செக். இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நம்ம முடியாத ஆச்சரியம்.
அதுவரை தயங்கி, யோசித்து அரசியல் பஞ்ச்களை பேசி வந்த விஜய், கத்திக்கு பிறகு நேராகவே அடிக்க ஆரம்பித்தார். அந்த அடியில் முதலில் சிக்கியது மெர்சல் திரைப்படம். இன்று வரை மெர்சல் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ஓட வைத்தது நம்ம அரசியல் தலைவர்கள் தான் என்று, கருத்து கூறாதவர்களே இல்லை.
2007 ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இதோ சர்கார் வரை வந்து நிற்கிறது. இதோடு முடிந்து விடுமா? என்றால் அதற்கு பதில் விஜய்யிடம் மட்டுமே உள்ளது. விஜய்யின் பயணம் சினிமாவுடன் நின்றுவிடுமா? என்றால் அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறனர். அவரை அருகில் இருந்து பார்ப்பவர்கள்.
விஜய் எது செய்தாலும் ஒரு எதிர்ப்பு வந்துக்கொண்டே இருக்கின்றது, அவரும் அதை புறம் தள்ளி ஒரு படி மேலே சென்றுக்கொண்டே தான் இருக்கின்றார். சர்காருக்கு பிறகும் விஜய் மீண்டு(ம்) எழுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவர் ஸ்டைலில் சொன்னால், “எவ்வளவோ பார்த்தாட்சி இத பார்க்க மாட்டோமா”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.