கடந்த சில நாட்களாக கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு தகுந்தாற்போல நாட்டில் ஆங்காங்கே கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெளியாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 257க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனா். தற்போது கேரளா, தமிழ்நாடு, மகராஷ்டிராவிலும் பரவியுள்ளது. கடந்த 2019 ஆண்டு பரவிய கொரோனா கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் மக்களை பாடாய் படுத்தியது.
அதனை தொடர்ந்து தடுப்பூசிகளின் மூலம் சரி செய்யப்பட்டு தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும் பாத்திப்புகள் இல்லை, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என அரசால் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
எனவே இந்த சூழ்நிலையை மக்கள் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றும் தற்போது பரவும் கொரோனாவின் தன்மை குறித்தும் நுரையீரல் மருத்துவம் டாக்டர். ஷரோன் கிளமெண்ட் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
1. மீண்டும் கொரோனா பரவுவதற்கு காரணம் என்ன ?
வைரஸ் என்பது உருமாறிக் கொண்டே தான் இருக்கும். அதனால் தற்போது பரவும் கொரோனாவால் அச்சம் ஏதும் இல்லை. இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கொரோனா வைரஸ் கிருமியின் மாறுபாடு தான் தற்போது பரவும் கொரோனா. ஏற்கனவே இருந்த கொரோனா வைரஸின் சிறிய மாறுபாடுதான் தற்போது பரவி வருகிறது. எனவே மழை சீசன் ஆரம்பித்து விட்டதால் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது என்றும் டாக்டர். ஷரோன் கிளமெண்ட் தெரிவித்தார்.
2. இந்த கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் ?
தற்போது பரவிருவரும் கொரோனா வைரஸ் வீரியமற்றது என்பதால் அதிகம் பயப்படத் தேவையில்லை. இருப்பினும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போது பருவமழை ஆரம்பித்து விட்டதால் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. எனவே அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதும் என்று டாக்டர். ஷரோன் கிளமெண்ட் கூறுகிறார்.
3. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன ?
எப்பொழுதுமே அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்லது. அந்த வகையில் நாம் எப்போதும் பின்பற்றும் சில விஷயங்களை செய்தாலே போதும். கை கழுவுதல், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுதல். காய்ச்சல் இருந்தாலும் உடனே அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். மேலும் கீரைகள், காய்கறிகள், பழங்கள், ஆளி விதைகள் போன்றவற்றையும் நன்கு சாப்பிட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் நிறைய சாப்பிடலாம் என்று டாக்டர். ஷரோன் கிளமெண்ட் கூறுகிறார்.
4. தற்போது பரவும் கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன ?
எப்போதும் போல தொண்டை வலி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் இருக்கும். இவற்றை உடனடியாக மருத்துவரிடம் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் திடீரென்று பசி எடுக்காமல் போய்விடும். இதுவும் இதன் முக்கிய காரணமாகும். எனவே இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே சரி செய்து கொள்ள வேண்டும்.
5. மீண்டும் ஒரு ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதா ?
தற்போது பருவமழை காலம் என்பதால் கொரோனா பரவுகிறது. இந்த வகை கொரோனாவால் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம் நாடு செயல்படுவதால் இதன் தாக்கம் அதிகமாக இருக்காது. எனவே மறுபடியும் ஒரு ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். மக்கள் தற்போது மிகவும் கவனமாக இருப்பதால் இதுபோல் நோய் பரவுவதற்கு இனி வாய்ப்பு இல்லை எனவே பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்று டாக்டர். ஷரோன் கிளமெண்ட் கூறினார்.