/indian-express-tamil/media/media_files/2025/10/16/aippasi-month-sabarimala-opening-date-tamil-news-2025-10-16-12-09-05.jpg)
சபரிமலையில் இவ்வருட மண்டலகால பூஜைகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. மறுநாள் (18ம் தேதி) சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது. சபரிமலைக்கு 14 பேரும், மாளிகைப்புரம் கோயிலுக்கு 13 பேரும் ஏற்கனவே நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் குடவோலை முறைப்படி புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயிலில் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள்.
21 ஆம் தேதி சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 22 ஆம் தேதி மதியம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்கிறார். அன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்லும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் பம்பை செல்கிறார். 12 மணியளவில் பம்பையில் இருந்து தேவசம் போர்டின் ஜீப்பில் சன்னிதானம் செல்லும் அவர், தரிசித்த பின்னர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
இதன் பின்னர் 3 மணியளவில் சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டு நிலக்கல் சென்ற பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 22ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.