குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ கற்றுக் கொடுங்கள்! அலட்சியம் காட்டாதீர்கள் பெற்றோர்களே!

குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற இந்த விஷயங்களை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள். இது அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள உதவும்

குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக் கொடுங்கள். இதில் அலட்சியம் காட்டாதீர்கள் பெற்றோர்களே! இது உங்களுக்கான கட்டுரை!

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு குழந்தை பாலியல் பலாத்காரத்தை எதிர்கொள்கிறார்கள். பாலியல் வன்கொடுமைகளைப் பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளும் சந்திக்கின்றனர். மனதில் எந்தவித கள்ளம் கபடமின்றி இந்த மண்ணில் பிறந்த தேவதைகள் குழந்தைகள். இவர்களின் வாழ்க்கையில் எந்தத் துயரங்களும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்கள் மட்டுமின்றி அனைவரின் பொறுப்பும் கூட.

கடந்த சில வருடங்களாகவே, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல், வளர்ந்து நிற்கும் 17 வயது வரை யார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்தாலும் அவை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தான் வரும். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் பாஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவாகும்.

குழந்தை பாலியல் வன்கொடுமை, வழக்குப் பதிவு மற்றும் அதன் சட்டம் குறித்துத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை பற்றி கற்றுக் கொடுப்பது அவசியம்.

பாலியல் வன்கொடுமை என்ற தீமை உங்கள் குழந்தைகளை நெருங்காமல் இருக்க இதையெல்லாம் நீங்களும் தெரிந்துகொண்டு உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

ஏன் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகமாக உள்ளது:

குழந்தைகள் மிகவும் அப்பாவித்தனமான குணம் கொண்டவர்கள். பாசமாகவும், அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் யார் நடந்துகொண்டாலும் அவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள். எனவே இதனை ஒரு உத்தியாகக் கொண்டே இது போன்ற குற்றங்களை மிருகத்தனமாக செய்கின்றனர்.

யார் யாரெல்லாம் பாலியல் குற்றங்களைச் செய்வார்கள்:

பொதுவாக பாலியல் வன்கொடுமைகளைப் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாகக் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்கு சமமாக ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளைச் சந்திக்கின்றனர். எனவே குறிப்பிட்ட பாலினத்தவர் தான் இதில் பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது. ஏனெனில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஈடுபடுகின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளைச் சந்திக்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:

 • சிறிய வயதிலேயே பாலியல் கொடுமைகளைச் சந்திக்கும் குழந்தைகளுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
 • பெண் குழந்தைகளாக இருந்தால், சிறிய வயதிலேயே கர்ப்பப்பை பாதிக்கப்படும். இரு பாலின குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்படும்.
 • வளரும்போதே, தனிமையை நாடுவார்கள், இரவு நேரம் மட்டுமின்றி பகலில் உறங்கும்போதும் கூட கெட்ட கனவுகள் காண்பார்கள், அதிகமாக கோபப்பட வாய்ப்புகள் உண்டு.

எனவே குழந்தைகள் எதிர்கொள்ளும் இந்தக் குற்றத்தால் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை திசை மாறிவிடும்.

உங்கள் குழந்தை ஒருவேளை பாலியல் கொடுமைகளைச் சந்தித்திருந்தால் எப்படி தெரிந்துகொள்வது:

 • நன்றாக சிரித்துப் பேசி குறும்பு செய்யும் குழந்தைகள் திடீரென அமைதியாகிவிடுவார்கள், அதிகம் பேசாமல் தனியாகவே இருக்கவும் விரும்புவார்கள்.
 • சக நண்பர்களோடும், சுற்றியிருப்பவர்களோடும் சகஜமாக பழகத் தயங்குவார்கள்.
  குறிப்பிட்ட ஒரு நபரைக் கண்டு பயம் கொள்வார்கள்.
 • தூக்கத்தில் திடீரென அழலாம் அல்லது கெட்ட கனவுகள் காணலாம்.

இது போன்ற எந்த ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் உங்கள் குழந்தைகளை அழைத்து அன்பாகப் பேசுங்கள். மேலே இருக்கும் அறிகுறிகள் ஒரு வேளை பாலியல் குற்றங்களைச் சந்தித்ததன் விளைவாகவும் இருக்கலாம்.

நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

 • தாய், தந்தை, பாட்டி, தாத்தா என இவர்கள் குழந்தையைத் தொட்டு அன்போடு கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தால் அது குட் டச். ஆனால் அதே குடும்பத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட நபர்கள் தொடுவது அந்தக் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நிச்சயம் தடுக்க வேண்டும். இல்லையெனில் அது பேட் டச் ஆகவே கருதப்படும்.
 • அன்னையைத் தவிர வேறு யாரும் குழந்தையை குளிப்பாட்ட அனுமதிக்கக் கூடாது.
 • ஒரு சில பாகங்களில் (அதாவது முட்டிக்கு மேல், வயிறு, மார்பு பகுதி, பின் பாகம்) போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டாலும்  கூட தாய் அல்லது குழந்தை நம்பும் நபரைத் தவிர வேறு யாரும் மருந்து போடக்கூடாது.
 • பெண் மற்றும் ஆண்… இரண்டு குழந்தைகளின் அந்தரங்க உடல் பகுதிகளை யாரையும் தொட அனுமதிக்காதீர்கள். ஒருவேளை யாராவது அந்தப் பாகங்களை தொட்டுப் பேசுவதை பார்த்தால் உடனே அந்த நபரைக் கண்டித்துவிடுங்கள். அது யாராக இருந்தாலும் சரி.
 • உங்கள் குழந்தைகள் திடீரென யாராவது புதிய நபரிடம் அதிகமாக நெருங்கிப் பழகினால் உடனே அந்த நபர் மீது சந்தேகம் கொள்வதில் தவறில்லை. ஏன் இந்த திடீர் நெருக்கம் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் குழந்தைகளை பாலியல் ரீதியாக ஏமாற்ற வேண்டுமென்றால், சில குற்றவாளிகள் முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகுவார்கள். அதற்காக அந்தக் குழந்தையிடம் நம்பிக்கையைப் பெற சாக்லெட், பிஸ்கெட் போன்றவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்து நெருக்கம் ஆவார்கள். எனவே குழந்தைகள் வெளியாட்களைக் கண்மூடித்தனமாக நம்பினால் அது ஏன் என்று உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு குட் டச்/ பேட் டச் குறித்து கற்றுக்கொடுங்கள்:

குழந்தைகளுக்கு இந்த விஷயத்தை நீங்கள் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். எந்தப் பாகங்களை பிறர் தொடலாம், எங்கெல்லாம் யாருமே தொடக் கூடாது என்பது குறித்த அறிவை அவர்களுக்குச் செலுத்துவது அவசியம் மட்டுமல்ல கடைமையும் கூட.

 • உதடு
 • பூபூ பகுதி (மார்பு பகுதி)
 • பின் புறம் (பட்டக்ஸ்)
 • சூசூ பகுதி (கால்களுக்கு இடையே)
 • இடுப்பு

இந்தப் பாகங்களை தாய் அல்லது குழந்தை நம்பும் முக்கிய நபரைத் தவிர யாருமே தொடக்கூடாது என்பதை அவர்களுக்குக் கூறுங்கள். குழந்தைகளை உட்கார வைத்து, அவர்களிடம் மேலே குறிப்பிட்டு பாகத்தை யாரும் தொடக் கூடாது. அந்தப் பகுதிகளை நீ, உன் தாய் அல்லது நம்பும் நபர் தவிர வேறு யாரும் தொட அனுமதிக்காதே. உன் அனுமதி இன்றி அவர்கள் தொட்டால் அவர்கள் நல்லவர்கள் இல்லை, அவர்களிடம் இருந்து விலகிச் செல், பின்பு என்னிடம் வந்து கட்டாயம் சொல் என்று பொறுமையாக கூறுங்கள்.

நீங்கள் கூறும் இந்த அறிவுரை உங்கள் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும்.

ஒரு வேளை உங்கள் குழந்தைகள் இது போன்ற நிலையில் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள்:

குழந்தைகளை நம்பகத் தன்மையற்ற நபர் யாராவது அந்தரங்க பகுதிகளை தொட்டால், உடனே நோ…… (NO…..) என்று சத்தமாக கத்தச் சொல்லுங்கள். கத்திய பின்பு, உடனே அந்த இடத்தை விட்டு ஓடச் சொல்லுங்கள் (GO). அந்த இடத்தை விட்டு ஓடிய பிறகு பெற்றோர் மற்றும் அவர்கள் நம்பும் நபரிடம் நடந்ததைக் கூற வேண்டும் (TELL) என அழுத்தமாகக் கூறுங்கள். இந்த NO, GO, TELL என்பது மிகவும் முக்கியமாக ஒன்று.

குழந்தைகளைச் சுற்றி நீங்கள் போடும் மனித வேலி… என்ன அது?

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அவர்கள், தினமும் அவர்களை சுற்றி நடப்பதை யாராவது ஒருவரிடம் கட்டாயம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அந்த நபர் குழந்தைகள் மட்டுமின்றி நீங்களும் நம்பும் நபராக இருக்க வேண்டும். இதுபோல் மொத்தம் 5 நபர்களை உங்கள் குழந்தைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த 5 பேரில் ஒருவர் நிச்சயம் உங்கள் குழந்தை மற்றும் நீங்கள் நம்பும் ஆசிரியராக இருக்க வேண்டும். அப்போது தான் பள்ளியில் ஏதேனும் நடந்தால் உடனே அந்த ஆசிரியரிடம் அவர்கள் கூறுவார்கள். ஆசிரியர் மூலம் நீங்கள் விஷயத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, இந்த 5 பேரில் பெற்றோர்களும் அடங்கியிருக்க வேண்டும். இந்த 5 நபரும் ஒருவருடன் ஒருவர் கட்டாயம் தொடர்பில் இருக்க வேண்டும். நேரடியாக பேச முடியவில்லை என்றால் போனிலாவது பேச வேண்டும். 5 நபர்களில் ஒருவர் மற்றவருக்கு போன் செய்தால் அந்த காலை தவிர்க்க கூடாது.

ஒருவேளை முக்கிய விஷயம் எதையாவது உங்கள் குழந்தை உங்களிடம் கூற நினைத்து அந்த இடத்தில் நீங்கள் இல்லாமல் போனால், உடனடியாக அந்த 5 நபர்களில் ஒருவரிடம் அந்த விஷயத்தை கூறும்படி குழந்தையிடம் சொல்லி வையுங்கள். இதற்காகத் தான் இந்த 5 பேர் கொண்ட மனித வேலி.

பாலியல் வன்கொடுமை சந்தித்த குழந்தை அந்த சம்பவத்தை எப்படி உங்களிடம் கூறுவார்கள்… அவர்கள் வைத்திருக்கும் ரகசிய அறிகுறி:

பொதுவாகவே குழந்தைகளுக்கு நேரடியாக தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி கூறத் தெரியாது அல்லது கூற பயப்படுவார்கள். அந்த நேரங்கள், அவர்கள் தங்களின் துக்கத்தை ஏதோ ஒரு வழியாக மறைமுகமாக உங்களிடம் கூறுவார்கள். அது ஒரு கதை வடிவில் இருக்கலாம், அல்லது அவர்களின் நண்பர்களுக்கு நேர்ந்தது என்று கூட கூறுவார்கள். சில குழந்தைகள் வரைந்து காட்டுவார்கள். ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் உங்களிடம் தவறை கூறிவிடுவார்கள். நீங்கள் தான் உஷாராக இருந்து அந்த பிரச்சனையை கண்டறிய வேண்டும்.

ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கும்போது சிறகடித்து வண்ணத்துப் பூச்சியாய் பறக்கவே விரும்புகிறது. ஆனால் அவர்களின் சிறகுகளை உடைத்தெறிய இது போன்ற கோரச் சம்பவங்களை நிகழ்த்தும் மிருகங்கள் பூமியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றன. இவர்களை கண்டறிவதில் கடினம் ஏற்படலாம் ஆனால் இந்த தொகுப்பில் உள்ள குறிப்புகளை வைத்து உங்கள் குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை பற்றி பேசலாம். இதன் மூலம் இந்த துயரத்தில் இருந்து உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close