சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான ஜூபிடர் என்னும் வியாழனை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, கடந்த 2011 ஆகஸ்டு 5-ஆம் தேதி, 'ஜூனோ' என்ற விண்கலத்தை புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ‘அட்லஸ் வி-551’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.
இந்த ஜூனோ விண்கலம், 170 கோடி மைல்கள் பயணம் செய்து, திட்டமிட்டபடி கடந்த வருடம் ஜூலை மாதம் 4-ஆம் தேதி வியாழனின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. அதன்பின், அங்கிருந்து அது ஒலி சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், இந்த ஜூனோ விண்கலம் தற்போது வியாழன் கிரகத்தின் மிக அருகாமையில் சென்று, அதன் புகைப்படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்து உள்ளது. இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் அது பயணம் செய்து வருகிறது.
அந்த புகைப்படங்களை நாசா ஆய்வு செய்தபோது, அங்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான சூறாவளிக் காற்று வீசிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கிரகத்தின் வடக்கு முனையில் இருந்து தெற்கு முனை வரை 1400 கி.மீட்டர் தூரத்துக்கு சூறாவளிக்காற்று வெளுத்து வாங்குவது தெரியவந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a367-294x300.jpg)
அதே போன்று அங்கு 'அமோனியா ஆறு' ஓடுவதும் தற்போது முதன்முறையாக தெரியவந்துள்ளது. அது பல 100 மைல்கள் ஓடுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டலத்தில் பல விதமான கியாஸ் கலந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போது வியாழன் கிரகத்தில் காற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியை விட 11 மடங்கு அதிகமாக மேகங்கள் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a368-300x217.jpg)
இந்த ‘ஜூனோ’ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.