நாம் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது கையில் தட்டுக்களை ஏந்தி பிச்சை எடுக்கும் சிறு குழந்தைகளை கடக்காமல் இருந்திருக்க மாட்டோம். தினந்தோறும் அத்தகைய குழந்தைகளை கடந்து கூட நாம் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த குழந்தைகள் யார்? அவர்களுக்கு யாருமில்லையா? இதற்கு முன்பு எங்கிருந்தார்கள்? ஒருவேளை அவர்கள் தங்களுடைய வீட்டில் அம்மா, அப்பாவுடன் சந்தோஷமாக கூட இருந்திருக்கலாம். ஆனால், எப்படி இந்த நிலைமைக்கு அவர்கள் ஆளானார்கள் என்ற கேள்வி நமக்குள் எழாமல் இருந்திருக்காது. அதனைக் கண்டறிந்து அந்த குழந்தைகளும் மற்ற எல்லோரையும் போல் மரியாதையான வாழ்க்கையை வாழவும், மீண்டும் அவர்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைக்கவும் என்ன செய்வதென்பது நமக்கு தெரியாது. வெறும் கேள்விகளுடன் அந்த நிமிடத்தைக் கடந்துவிடுவோம்.
கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல், வீட்டைவிட்டு குழந்தைகள் வெளியேறுதல் உள்ளிட்ட பலகாரணங்களுக்காக தினந்தோறும் ஏராளமான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறுகின்றனர்.
சென்னையை சேர்ந்த ஐ.டி.யில் பணிபுரியும் விஜய் ஞானதேசிகன் என்பவர் அப்படி நிர்க்கதியாக நிற்கும் குழந்தைகளை பெற்றோர்களுடன் இணைக்க களமிறங்கினார்.
தன் நண்பர் இளங்கோவுடன் இணைந்து காணாமல் போன குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட களமிறங்கினார். அதற்காக ஒரு செல்ஃபோன் ஆப்-ஐ கண்டறியும் முயற்சியை மேற்கொண்டனர்.
முதலில், காணாமல் போன குழந்தைகளை பதிவு செய்துள்ள மத்திய, மாநில அரசுகளின் இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் எல்லாவற்றையும் சேகரித்தார். சுமார், 3 லட்சம் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வாறு சேகரித்தனர்.
முகங்களை அடையாளம் காணுதல், அதாவது ஃபேஷியல் ரெக்கக்னிஷன் எனும் மென்பொருளை இருவரும் இணைந்து கண்டறிந்தனர். இந்த மென்பொருளின் உதவியுடன் ‘ஃபேஸ்டேக்ர்’ (Facetagr) என்னும் புதிய செயலியை உருவாக்கி அதில் சேகரித்துவைத்த குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தனர்.
“காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை அந்த ஆப்-ல் பதிவேற்றினால், அந்த குழந்தையின் முகஜாடையுடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றும் புகைப்படங்களில் உள்ள குழந்தைகளை அரசு அமைப்புகள், என்.ஜி.ஓ-க்கள், தனிநபர்கள் யாராவது ஏற்கனவே மீட்டு வைத்திருக்கலாம். அதன் மூலம் காணாமல் போன குழந்தைகளை அவர்களது குடும்பத்துடன் இணைக்க முடியும்”, என இந்த ஆப் செயல்படும் விதம் குறித்து சொல்கிறார் ஞான தேசிகன்.
ஒருவேளை காணாமல்போன குழந்தையின் புகைப்படம் இல்லையென்றால், அவர்களுடைய உடன்பிறந்தவர்களின் புகைப்படங்களைக் கூட பதிவேற்றலாம். உடன்பிறந்தவர்கள் இடையே முகஜாடையில் பல ஒற்றுமைகள் இருக்கும் என்பதால் இந்த வழியும் பல்வேறு தருணத்தில் உதவிபுரியக் கூடும். “ஒரு குழந்தை காணாமல் போன 5-10 வருடங்களில் அக்குழந்தையின் முகஜாடை மாறாமல் இருந்தால் எளிதில் அக்குழந்தையை கண்டறிந்து விடலாம்.
இந்த ஆப் மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்துள்ளனர். இந்த ஆப் நிச்சயம், தங்களது குழந்தைகளை ஏதோவொரு தருணத்தில் தொலைத்துவிட்டு பரிதவிக்கும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம் என்பது நிச்சயம்.