scorecardresearch

இந்த மாதிரி ஒரு மணப்பெண் தான்; ஏ.ஆர்.ரஹ்மான் லவ் ஸ்டோரி

ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் சிமி கரேவால் உடனான நேர்காணலில் தன் மனைவி சாய்ராவை முதல் முறை சந்தித்தது மற்றும் அவரது திருமணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த மாதிரி ஒரு மணப்பெண் தான்; ஏ.ஆர்.ரஹ்மான் லவ் ஸ்டோரி
AR Rahman love story

விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த ரஹ்மானை, 1992 ஆம் ஆண்டு தனது ரோஜா படம் மூலம்  தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மணிரத்னம். முதல் படமே மாபெரும் வெற்றி. பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகனை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டின. மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து, தேசங்கள் கடந்து ரஹ்மான் இசை ஒலித்தது. அன்று ஆரம்பித்த ரஹ்மான் பயணம் இன்று 30 ஆண்டுகளை கடந்தும் நிற்காமல் தொடர்கிறது.

இந்திய இசை உலகின் முடிசூடா மன்னன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான், பல அழகான காதல் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பல இதயங்களில் காதல் பூத்ததற்கு அவரது இசையும் ஒரு காரணம். ஆனால் அவரது காதல் கதை எப்படி இருந்தது?

ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் சிமி கரேவால் உடனான நேர்காணலில் தன் மனைவி சாய்ராவை முதல் முறை சந்தித்தது மற்றும் அவரது திருமணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ரஹ்மானுக்கும் சாய்ராவுக்கும் 1995 இல் திருமணம் நடந்தது, இது குடும்பத்தினர் பார்த்து நிச்சயித்த திருமணம். ரோஜா மற்றும் பாம்பே ஆகிய படங்கள் இந்திய அளவில் வெற்றி பெற்ற நேரம் இது.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று ரஹ்மானிடம் தொகுப்பாளர் சிமி கேட்டதற்கு, அந்த நாட்களில் வேலையில் மூழ்கியிருந்ததால் மணப்பெண்ணைத் தேட அவருக்கு நேரம் இல்லை என்று கூறினார்.

உண்மையைச் சொல்வதென்றால், மணமகளைத் தேடுவதற்கு எனக்கு நேரமில்லை. நான் ரங்கீலா மற்றும் சில படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் அனைத்தையும் பம்பாயில் செய்து கொண்டிருந்தேன், அதனால் நான் அதில் மிகவும் பிஸியாக இருந்தேன். ஆனாலும், திருமணம் செய்து கொள்ள இதுவே சரியான நேரம் என்று எனக்கு தோன்றியது. எனக்கு அப்போது 29 வயது, நான் எனக்கு மணப்பெண்ணை பார்க்குமாறு என் அம்மாவிடம் சொன்னேன், என்றார்.

உங்களிடம் திருமணத்துக்கான நிபந்தனைகள் ஏதும் இருந்ததா என்று சிமி கேட்டபோது, ​​ரஹ்மான் சிரித்துக்கொண்டே, எளிய பெண்ணைத் பார்க்கும்படி தன் தாயிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். எனக்கு அதிக சிரமம் கொடுக்க மாட்டார்கள், அதனால் நான் என் இசையை தொடர முடியும், அவர் என்னை ஊக்குவிப்பார் என்று நம்பினேன் என்றார்.

அப்போது சிமி, அவரிடம் சிறிது படித்த, கொஞ்சம் அழகு மற்றும் அன்பான மணமகள் வேண்டும் என்று விரும்புனீர்களா என்று கேட்டார்.

அதற்கு ரஹ்மான், தனது தாயார் சாய்ராவின் சகோதரியை ஒரு சூஃபி ஆலயத்திற்கு அருகில் சந்தித்ததாகவும், அதுவே அவர்களை ஒன்றிணைத்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.

சாய்ரா உடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த ரஹ்மான், அது ஒரு வேடிக்கையான சம்பவம் என்று பகிர்ந்து கொண்டார், ஏனெனில் அதுவரை எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததில்லை, அந்த மாதிரியான எண்ணத்துடன் ஒரு பெண்ணைப் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.

பராம்பரிய திருமணங்களை போல, ஒரு காபி உடன் எங்கள் உரையாடல் ஆரம்பித்தது.  நான் சாய்ராவை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வதில் உங்களுக்கு விருப்பமா என்று கேட்டேன். அவள் ஆம் என்றாள்.

செலிபிரிட்டியின் மனைவி என்பதால் நீங்கள் ஷாப்பிங்கிற்கு வெளியே செல்ல முடியாது, இதனால் திருமணமான புதிதில் சாய்ரா, விரக்தியடைந்தாள். இருப்பினும் அவள் எப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்தப் போகிறாள் என்பதை ஆரம்பத்திலேயே அவளிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்றார் ரஹ்மான்.

ரஹ்மானுக்கும் சாய்ராவுக்கும் கதீஜா மற்றும் ரஹீமா என்ற இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கு 2022 இல் திருமணம் நடந்தது, அவரது திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Ar rahman love story rahman love songs