உங்களின் இனியவர்களுக்கு சிறப்பான பரிசுகள்! இணையதளத்தில் கலக்கி வரும் இளம்பெண் அர்ச்சனா.

சென்னையில் பெரும்பாலான கடைகளில் காணப்படாத விதவிதமான பரிசுகள். நீங்கள்அளிக்கும் பரிசில் உங்களின் அன்பை கலந்து தருகிறார் அர்ச்சனா. திறமையை வலிமையாக்கிய இளம் தொழில் முனைவோர்.

By: Updated: March 27, 2018, 04:29:33 PM

WEB EXCLUSIVE

நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்னல்களினால் மனவேதனை அடைவது இயல்பு. ஆனால் புண்பட்ட மனதிற்கு ஆறுதலாக அமைவது ஒருவர் நம் மீது காட்டும் அன்பே ஆகும். அத்தகைய வலிமைக் கொண்ட அன்பை சிலர் வார்த்தையாலும் சிலர் செயல் மூலமாக வெளிப்படுத்துவர். மேலும் பலர் பரிசளித்து அன்பை வெளிக்காட்டுவர்.

நாம் நேசிப்பவர்களுக்கு முக்கிய நிகழ்வுகளில் பரிசளிக்க கடை கடையாக ஏறி இறங்குவது வழக்கம். அதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும், நம் பாசமும் கலந்திருக்க வேண்டும் மற்றும் பட்ஜெட்டிலும் இருக்க வேண்டும். அப்படியொரு ஒரு கிஃப்ட் எங்கு உள்ளது என்று மண்டையை உடைத்துக்கொள்பவர்கள் பலர். இத்தனைக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கத் துவங்கப்பட்ட ஆன்லைன் கிஃப்ட் கடைதான் “லாமொர் (L’Amour)”. நீங்கள் தேடும் வித்தியாசமான பரிசுகளில் உங்களின் அன்பையும் காதலையும் கலந்து தயாரித்து தருகிறார் சென்னையை சேர்ந்த இளம் சுயதொழில் முனைவோர் அர்ச்சனா.

யார் இந்த அர்ச்சனா?

Archana - L'Amour Owner

சென்னை குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் அர்ச்சனா. வாழ்வில் எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும், சோர்ந்து போகாது எதையும் எதிர்கொள்ளும் துடிப்பு கொண்டவர். சென்னை தனியார் கல்லூரியில், ஆங்கில மொழியில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் முதுகலைப் பட்டத்தை பத்திரிக்கைதுறை (Journalism) பெற்றவர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர், தனியார் தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் பரபரப்பான வாழ்க்கையில் இடையில் அவர் எடுத்த ஓய்வில் தோன்றிய யோசனைதான் இந்த லாமொர்.

லாமொர் உருவானக் கதை:

L'Amour Page

 

 

முன்னர் ஒரு நாள் நெருக்கடியான வாழ்விலிருந்து சற்று இளைப்பாற வேண்டும் என்ற முடிவில் அர்ச்சனா இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பொழுதைக் கழிக்க கலை மற்றும் கைவினை பொருட்களைச் செய்ய துவங்கினார். பள்ளிப்பருவ காலத்திலிருந்தே இவர் இதில் தேர்ச்சிப் பெற்றவர். எனவே இந்தத் திறமையை மேம்படுத்தும் வகையில் தனது நண்பர்களுக்குப் பரிசுகளை செய்து தந்துள்ளார். இந்தப் பரிசுகளை கண்ட அர்ச்சனாவின் தோழி இவரை சுயமாக தொழில் துவங்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் இந்த யோசனையைக் கருத்தில் கொண்டு பரிசுப் பொருட்கள் விற்கும் தளத்தை உருவாக்கும் பணியைத் துவங்கினார். இவருடன் அவ்வப்போது இவரின் தோழியும் உதவி செய்தார்.

அனைத்து ஏற்பாடுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் “லாமொர்” ஆன்லைன் கிஃப்ட் ஷாப் (L’Amour Online Gift Shop) துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை “லாமொர்”, முகநூல் பக்கமாக விளங்கி வருகிறது. இவரிடம் பரிசுகளை ஆர்டர் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள், “லாமொர் (L’Amour)” என்ற பக்கத்தில் தங்களுக்குத் தேவையானவற்றை தேர்வு செய்யலாம்.

அர்ச்சனாவும் லாமொர்-ம்:

பொதுவாகச் சுயதொழில் என்றாலே கடினம் தான் என்ற தவறான எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் அத்தகைய எண்ணங்களை உடைத்தெறிகிறார் அர்ச்சனா. “செய்யும் தொழில் மீது ஆர்வமும் நேசமும் இருந்தால் எல்லாத்தொழிலுமே சுலபம்” என்கிறார் இவர்.

“எனக்கு என்றுமே என் கஸ்டமர்சின் சந்தோஷமும் திருப்தியும்தான் முக்கியம். என்னிடம் கிஃப்ட் வாங்கும் ஒவ்வொருவரும், அவர்களின் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவர்களுக்காக வாங்கிச் செல்கின்றனர். அதனால், கூடுதல் அக்கறையும் கவனமும் கொண்டு இந்தப் பரிசுகளை நான் தயாரிப்பேன்.” என்கிறார் அர்ச்சனா.

இந்தத் தொழிலை முதன் முதலில், 5 ஆயிரம் ரூபாய் கொண்டு துவங்கினார். உயர்தர பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் பரிசுகளுக்கு இவர் தேடி சென்று பொருட்களை வாங்கி வருவார். பின்னர் எந்த வித உதவியுமின்றி, பரிசுகளை இவரே முழுமையாகச் செய்து முடிக்கிறார். இவ்வாறு இயந்திரம் இல்லாமல் கைகளை கொண்டு தயாரிப்பதால் இவரின் பரிசுகளுக்கு மவுசு அதிகம். மேலும் தகுந்த வளர்ச்சியை பெற்ற பின் தற்போது மாதம் ரூ. 7 முதல் 10 ஆயிரம் வரை இதன் மூலம் வருவாய் ஈட்டி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

லாமொரின் முதல் கட்ட வளர்ச்சி:

ஆரம்பக் காலத்தில் முகநூல் பக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய சவாலாக இருந்தது என்று பெரும் மூச்சு விடுகிறார் இவர். மேலும் இது குறித்து கூறுகையில்,

“ முதன் முதலாக ஒரு தொழில் துவங்கியதும் மக்களிடம் அதைக் கொண்டு சேர்ப்பதற்குக் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. முகநூல் பக்கம் என்பதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்கள் தேர்ந்தெடுத்த பரிசுகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிகப்பெரிய சவால். ஆனால் இத்தகைய சவாலையும் எளிதாக எதிர்கொள்ள எனக்கு உறுதுணையாக இருந்தது எனது நண்பன் தியாகு. தியாகுவின் உதவியால் மக்களிடம் எனது லாமொர் பக்கம் நம்பிக்கையுடன் சென்றடைந்தது. மேலும் விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் எனப் பலவற்றில் எனக்கு உதவியாக இருந்தார் தியாகு.” – அர்ச்சனா.

உழைப்பும் நல்ல நட்பும் உடன் இருந்ததால் தொழில் முனைவில் முதல் இரண்டு படிகளை எளிதாகக் கடக்க நேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

பரிசுகளில் எத்தனை வகை?

1. எக்ஸ்ப்லோஷன் பாக்ஸ் (Explosion Box)

Explosion Box - L'Amour

2. ரூபிக்ஸ் க்யூப் (Rubix Cube)

Rubix Cube

3. மெமரி புக் (Memory Book)

Memory Book

Memory Book

4. லவ் கூப்பன் (Love Coupon)

Love Coupon

Love Coupon

5. போட்டோ வால் ஹாங்கிங்க் (Photo Wall Hanging)

Photo Wall Hanging

மேலும் பல பரிசுகள் இவரிடம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது.

இப்பரிசுகளின் அம்சங்கள்:

தினந்தோறும் நாம் கடந்து செல்லும் சாலைகளில் கண் முன் தோன்றும் கடைகளில் பல வகை பரிசு பொருட்கள் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றையும் விட மாறுபட்டு நிற்கிறது அர்ச்சனா தயாரிக்கும் பரிசுகள். இவர் தயாரிக்கும் ஒவ்வொரு பரிப் பொருட்களும் உயர்தர பொருட்களை கொண்டு தயாரிக்கிறார். இவை அனைத்தும் பேப்பகளால் தயாரிப்பதால் பொருட்களை கவனத்துடன் தேர்வு செய்கிறார். இவ்வாறு தேர்வு செய்யப்படும் உயர்ந்த வகை பேப்பரால் பரிசுகளின் நீண்ட நாட்கள் பாதிப்பின்றி இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தப் பரிசின் முக்கிய அம்சமானது, இதை “பெர்சனலைஸ்ட் கிஃப்ட் (Personalised Gift)” என்று அழைப்பதே ஆகும். அது என்ன “பெர்சனலைஸ்ட் கிஃப்ட்”? பொதுவாகக் கடைகளில் அவர்கள் முன்பே தயாரித்து வைத்துள்ள பரிசுகளில் ஒன்றை நாம் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் லமொரில் (L’Amour) பரிசின் வடிவமைப்பை மட்டுமின்றி, பரிசின் உள்ளே என்ன விவரங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வாடிக்கையாளர்களே தேர்வு செய்கின்றனர். இதன் மூலம் இந்தப் பரிசுகளை தமக்குப் பிடித்தவர்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அர்ச்சனா கருத்து கூறுகையில், “என்னிடம் பரிசு வாங்க வரும் அனைத்து வாடிக்கையாளரும் முழு திருப்தியுடன் வாங்குகின்றனர். இதன் மூலம் நானே சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தாலும், அவர்கள் விடுவதில்லை. எல்லா மாதமும் எனக்கு ஆர்டர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டே இருக்கும். அவர்களின் மகிழ்ச்சியே என் உழைப்பிற்கான முதன் கூலி” என்றார்.

இதுவரை முகநூல் பக்கம் மட்டும் இருந்த போதிலுமே இவருக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றது. முக்கியமாகக் காதலர் தினத்தன்று அலுவலகத்தில் விடுமுறை பெற்று, வீட்டில் இருந்து பரிசுகளை செய்து முடிக்கும் அளவிற்கு ஆர்டர்கள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை:

அடுத்தகட்ட நடவடிக்கையாக தமது லாமொர் பக்கத்தை இணையதள பக்கமாக தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இணையதளம் துவங்கிய பின்னர், இயந்திரங்கள் கொண்டு உற்பத்தியை அதிகப்படுத்தவும் முடிவெடுத்துள்ளார். பிற்காலத்தில் இந்தத் தொழில் மேலும் விரிவடைந்த பின் ஊழியர்கள் பணியமர்த்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது பாதையில், பல்வேறு தடைகள் வந்தாலும், அனைத்தையும் தகர்ந்தெரிந்து முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாகப் பெருமையுடன் தெரிவித்து முடித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Archana runs successfull innovative gifts store online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X