கலை என்றாலே இயல், இசை, நாடகம் என்று நம் தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும். நம் தமிழ் மரபில் இந்த மூன்று வகைகளிலேயே பல்வேறு கருத்துக்களை கொண்ட கலைகள் படைக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப உலக வரலாற்றிலேயே பலவகை கலைகள் உருவாகியிருக்கிறது. இந்த நவீன காலகட்டத்தில் கலைப்படைப்புகள் பரிணமித்துள்ளது.
அப்படி இந்த நவீன காலகட்டத்தில் புதிய கருத்துக்களை தன் கலையின் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஓவியர் நடராஜனை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நேர்காணல் எடுத்தபொழுது:
“நான் சிறுவயதிலிருந்தே ஓவியம் பயிலுகிறேன். ஓவிய கல்லூரியில் நுண்கலை பட்டப்படிப்பு முடித்தவுடன் ஓவியம் மற்றும் சிற்பக்கலைகளில் பணியாற்றி வருகிறேன்”, என்று கூறினார். மேலும், உரையாற்றிய போது அவர் கூறியதாவது:
நடராஜனின் கலைப்பாணி:
என் வாழ்க்கையில் என்னை பாதித்த, என்னை ரசிக்கவைத்த, எனக்கு உத்வேகத்தை குடுத்த நிகழ்வுகளை என் கலைப்படைப்பின் மூலம் வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறேன். என்னை பொறுத்தவரை என் கலைப்படைப்புகள் மக்களின் மனதில் புதிய கேள்விகளை உருவாக்கவேண்டும். அந்த புதிய கேள்விகளின் மூலமாக இந்த சமூகத்தில் நடக்கும் அடக்குமுறையையோ அல்லது இந்த சமூகத்தில் எதெல்லாம் தன்னை உயர்ந்த சக்தி என்று பாவிக்கிறதோ (உதாரணத்திற்கு சாதி, மதம், அரசியல், வர்கம், பாலினம்) ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படும் பாரபட்சத்தை சுட்டிக்காட்ட வேண்டும். நவீன வளர்ச்சிக்கு பிறகு உருவான கலை இலக்கியங்கள் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கவே உருவாகிறது, இது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது.
நவீனத்திற்கு பின்பு வந்த கலை இலக்கியம்:
அண்ணல் அம்பேத்கர் சொன்னாற்போல மனித மாண்பை மீட்டெடுப்பது தான் ஒரு கலையின் வேலை என்று நம்புகிறேன். மனித மாண்பு அப்படியென்றால் எல்லோரையும் சமமாக மதிப்பது, சமத்துவம் சகோதரத்துவம் ஜனநாயகம் ஆகியவற்றை பின்பற்றுவது, ஆகிய வழிகளின் மூலமாக ஒரு மனிதனை சுதந்திரமானவனாக மாற்ற முடியும். இச்சித்தாந்தம் தான் நவீனத்திற்குமான கருப்பொருளாகும்.
மேற்கத்திய நாடுகளில் மறுமலர்ச்சி காலம் என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அது கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு சென்றது. அந்த காலத்திற்கு பிறகு வந்தது தான் நவீன காலம். சமூக ரீதியாக மக்கள் பின்தங்கி இருந்ததால் தற்போது அதிகாரத்தை எதிர்த்து விடுதலையை நோக்கி செல்லவேண்டும் என்று கலை இலக்கியம் மாறுகிறது.
ஓவியர் நடராஜனின் படைப்புகளை பற்றி:
கல்லூரி காலங்களிலிருந்தது கலைத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். ஓவியர்களுக்காக இங்கு மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கண்காட்சிகள் நடத்தப்படும்பொழுது அதில் தவறாமல் பங்குகொள்வேன். என் கலைப்படைப்புகளை ஓவியம் அல்லது சிற்பம் மூலம் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி வருகிறேன்.
அந்த குழுவின் சார்பாக கண்காட்சிகளில் பங்குகொண்டதால் இரண்டு ஆண்டுகளில் அறிஞர் என்ற பட்டம் எனக்கு கிடைத்தது. நிறைய கண்காட்சிகளுக்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட்ட முகாம்களில் பங்குகொண்டிருக்கிறேன். அதன்பிறகு, 2005இலிருந்து தொடர்ச்சியாக வருடத்திற்கு ஒரு முறை கண்காட்சி நடத்தி வருகிறேன்.
உங்களை பெருமைப்படுத்திய படைப்பு:
நம்மை சுற்றி நடக்கும் பிரச்சனைகளை பற்றியோ அல்லது என் வாழ்க்கை அனுபவங்களை பற்றியோ கலையில் மூலம் வெளிகொண்டுவருவது வழக்கம். ஆனால் இவை இரண்டிற்கும் பெரிய இடைவேளை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
உதாரணத்திற்கு, கூடங்குளம் போராட்டம் போல் சமூகத்தில் ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால், அதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக வர்க்-ஷாப் நடத்தினோம். ஒரு சமூக நீதிக்காக படைக்கப்படுகிற கலைப்படைப்பிற்கும் என்னுடைய திருப்திக்காக படைக்கப்படுகிற கலைப்படைப்பிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டறிந்து தனிப்பயனாக்கப்பட்ட கலைப்படைப்பை உருவாக்க முயற்சிக்கிறேன்.
2018ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள தாசின்சித்ராவில் ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். 'காதல் மட்டும் அனாதையாய்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த கண்காட்சியில் நிறைய சமூக பிரச்சனைகளை எடுத்துரைத்தோம். உதாரணத்திற்கு, கண்ணகி முருகேசன் ஆணவப்படுகொலை, வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடினவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல், 8 வழி சாலை பிரச்சனை போன்ற செய்திகளை சார்ந்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளின் தொகுப்பாக வைத்தோம். இது எனது புதிய முயற்சி என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு புதிய தன்னம்பிக்கை எனக்குள் உருவானது. அதனால், இது என் மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சி ஆகும்.
ஊரடங்கு காலத்தில் இருந்த மனநிலை:
நீளம் கலை கண்காட்சியில் நான் பங்கேற்றபோது வைக்கப்பட்ட 8 ஓவியங்களும் ஊரடங்கு சமயத்தில் என் மனநிலையை பற்றியே கூறும். கொரோனா காலத்தில் சமூகம் தந்த மனநெருக்கடி, அழுத்தம், இங்கு நடந்த அவலம் ஆகிய எல்லாவற்றையும் மையமாக வைத்து வரையப்பட்ட ஓவியங்கள் ஆகும்.
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு உங்களின் ஆலோசனை:
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பயிற்சி மிகவும் முக்கியம். அது தவிர ஒரு கலைப்படைப்பை நாம் உருவாக்குகிறோம் என்று சொன்னால், அதை நம் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எடுக்க வேண்டும். அப்படி படைக்கப்படும் கலைக்குள் ஒரு உண்மைத்தன்மை இருக்கும் என்று நம்புகிறேன். அப்படி செய்யவில்லை என்றால் வேறு ஒரு இடத்திலிருந்து ஒரு தகவலை பரிமாறுவது போன்ற தோற்றத்தை பெரும்.
உங்கள் வாழ்க்கை அனுபவங்களை உங்களுக்கு வசதியான முறையில், உதாரணத்திற்கு திரைப்படம், குறும்படம், இசை அல்லது நாடகம் போல உருவாக்கினால் உங்கள் படைப்பில் ஒரு உண்மைத்தன்மை இருக்கும். அதுவே உங்கள் கலையை உயர்த்தி காட்டும்.
சமூக ஊடகங்களின் கலை விமர்சனம்:
சமகால கலைப்படைப்பில் ஒரு வரையறை கிடையாது. பண்டைய காலங்களில் கலையை பலவகை படுத்தினார்கள், அது அந்த காலத்தை புரிந்துகொள்வதற்கு மட்டும் தானே தவிர, அது ஒரு கலைப்படைப்பினை கட்டுப்படுத்த கூடாது. ஒரு கலைப்படைப்பை உருவாக்குவது என்பது ஒரு பயிற்சியின் மூலமாக கற்று தேர்ந்துவிடலாம், திறமை மட்டும் தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பயிலும்போது ஒரு வகையான கலையை மட்டுமே பயில வேண்டும் என்று நம்மை கட்டுக்குள் கொண்டு வர கூடாது.
ஒவ்வொருவரின் கையெழுத்து எப்படி மாறுபடுகிறதோ அதைப்போல, ஒவ்வொருவரின் கலைப்படைப்பும் மாறுபடும். இப்படி தான் வரைய வேண்டும் என்ற விதிகளை கலைக்கு அமைக்கமுடியாது. ஒரு கலைப்படைப்பை மெருகேற்றுவதற்கு திறமை தேவை ஆனால் திறமை இருந்தால் மட்டும் தான் கலையை படைக்க முடியும் என்ற அர்த்தம் இல்லை.
சமூகத்தில் ஒரு கருத்தை கூறவேண்டும் என்றால் அதை ஆணித்தரமாக மட்டும் தான் கூற வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வருகிறது, இதை மக்கள் கலைக்குள்ளும் புகுத்தி பார்ப்பது தவறான கண்ணோட்டமாகும்." என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.