Avvai Shanmugi fame Ann Andra on World Environment Day Social Service Tamil News : ‘அவ்வை ஷண்முகி’ திரைப்படத்தில் துருதுருவென நடித்த குழந்தையை நிச்சயம் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ‘அந்தப் படத்திற்குப் பிறகு ஆளையே காணுமே’ என்று பலர் வலைவீசித் தேடியவர்களும் உண்டு. வெள்ளித்திரையிலோ, சின்னதிரையிலோ தோன்றவில்லை என்றாலும், தன்னை வளர்த்த சமூகத்திற்காக, தன்னால் முடிந்த நற்சேவைகளை செய்துகொண்டிருக்கிறார் ஆன் ஆண்ட்ரா . ‘உலக சுற்றுச்சூழல் தினமான’ இன்று, அதிகப்படியான கார்ட்டன் கழிவுகளைக் குறைப்பதற்காக புதிய முயற்சியைத் தொடங்கவிருக்கிறார்.
‘Wasted 360 Solutions’ எனும் சுற்றுச்சூழல் சேவை நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் சிகரெட், பயன்படுத்தப்பட்ட பான அட்டைப்பெட்டிகள், பல அடுக்கு பேக்கேஜிங் போன்ற குறைந்த மதிப்புள்ள உலர்ந்த கழிவுகளை மையமாகக் கொண்டு, தொழில்நுட்ப மற்றும் புதுமைகளைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான கழிவு மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறார் ஆன் ஆண்ட்ரா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் செயல்முறையைப் பற்றிக் கேட்டதற்கு,

நடிப்புக்கும் தனக்கும் நீண்ட இடைவெளி உள்ளது என்பதை புரிந்துகொண்டதால் திரைத்துறையை தான் தேர்ந்தெடுக்கவில்லை என்கிற சின்ன முன்னுரையோடு தற்போது செய்துகொண்டிருக்கும் சேவை பற்றி பேசினார். “கடந்த டிசம்பர் 2020-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். சென்ற வருட லாக்டவுனில் ஏராளமான டெட்ரா பேக் மற்றும் குளிர்பான பாட்டில்கள் நிறையக் குப்பைகளில் இருப்பதாகத் தகவல்கள் வந்தன. அதனால், ‘டேக் மீ பேக்’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கினேன். அதாவது, அண்ணா நகரிலிருந்து ஓஎம்ஆர் சாலை வரையிலான 20 சூப்பர் மார்க்கெட்களில், ஒரு பாக்ஸ் செட் பண்ணினோம். அதில், சுத்தம் செய்யப்பட்ட டெட்ரா பேக் மற்றும் கார்ட்டன் பாக்ஸ்களை உள்ளிடுமாறு கேட்டுக்கொண்டோம்.
இந்த கார்ட்டன் பாக்ஸ்களை மறுசுழற்சி மூலம் ஃபர்னீச்சர், டெஸ்க், பெஞ்ச் போன்றவற்றைச் செய்து சென்னையில் உள்ள அரசு சாரா அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறோம். வழக்கமாக நன்கொடையாக மக்கள் பணம் தருவார்கள். ஆனால், இதன் மூலம் உங்கள் வீடுகளில் இருக்கும் குப்பைகளைக் கொண்டு உங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாரோ ஒருவருக்கு டெஸ்க், நாற்காலி போன்றவற்றை வழங்கமுடியும். இந்த முழு செயல்முறையையும் சென்னை பெரும்பாகத்தைச் சேர்ந்த பெண்கள்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலும், ஆறு பெண்கள் சமீபத்தில் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்.

அப்படி கடைகளுக்குச் சென்று கார்ட்டன் பாக்ஸ்களை கொடுக்க முடியாதவர்கள், டன்ஸோ செயலி மூலம் கோரிக்கை வைக்கலாம். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் சுத்தம் செய்து வைத்திருக்கும் பாக்ஸ்களை பெற்று, பிறகு சேகரித்தவற்றை மீண்டும் சுத்தம் செய்து, மறுசுழற்சிக்கு அனுப்புவோம். இப்படிதான் நன்கொடையாக வழங்கப்படும் டெஸ்க், பெஞ்ச் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி’ ஃபீவர் எஃப்எம் சேனலில் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சி வாயிலாக, 50,000 கார்ட்டன் பாக்ஸ்களை திரட்டும் முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம். இது சுமார் ஆறுமாதகால பிரச்சாரம். இதன்மூலம் யாரெல்லாம் அதிகப்படியான கார்ட்டன் பாக்ஸ்களை கொடுக்கிறார்களோ அவர்களுடைய பெயரில் ஏதாவதொரு ஃபர்னீச்சரை நன்கொடையாக வழங்கவுள்ளோம்”

கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த உங்களுக்குச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?
“நான் வேலை செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் சமூக ஈடுபாடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை பற்றித்தான் என்னுடைய பெரும்பாலான ப்ராஜெக்ட் இருந்தன. அதனால், நாமும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதனால், பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே இந்த சேவைக்கான வேலைப்பாடுகளையும் செய்துகொண்டிருந்தேன். விடாமுயற்சிதான் முதன்மை காரணம்”
இந்த பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள்?
“எந்த ஒரு சேவைக்கும் அரசாங்கம் மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் உதவி தேவைப்படும். அதைவிட முக்கியமாக மக்களின் சப்போர்ட். இதை மூன்றையும் இணைப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதேபோல, இதனைத் தொடங்குவதற்கு முன்பு போதுமான அளவு தரவுகள் மற்றும் தேவைப்படும் தொகை என்னிடமில்லை. என்ன மாதிரியான குப்பைகள் உள்ளன, தூய்மை பணியாளர்களின் வேலையை பாதிக்காமல் என்னவெல்லாம் செய்யலாம் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கே அதிக நேரம் தேவைப்பட்டது”
வீட்டிலிருந்தபடியே ‘வேஸ்ட் மேனேஜ்மேன்ட்’ எப்படி செய்வது?
“நம் முன்னோர்கள் பின்பற்றிய சில விஷயங்களை பின்பற்றினாலே போதும். அதேபோல, வேஸ்ட் மேனேஜ்மேன்ட் என்றாலே ‘கஞ்சூஸ்’ என்று நினைப்பார்கள். இந்த மென்டாலிட்டியை முதலில் மாற்றவேண்டும். வீட்டில் சேகரித்து வைக்கும் காகிதம்கூட முழுமையானதாக இருப்பது சிறந்தது. காய்கறி மற்றும் பழங்களின் மிச்சத்தை, வீட்டில் சின்னதாகத் தொட்டி வைத்து அதில் செடி வளர்த்து அதற்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

பழைய உணவுகள் இருந்தால் அதனைக் குப்பையில் கொட்டாமல், பால்கனி, மொட்டைமாடியில் வைத்தால், அவற்றைப் பறவைகள் உண்ணும். பாடி வாஷ் பதிலாக சோப் உபயோகிக்கலாம். ஷாம்பூ, கண்டிஷனர் போன்றவற்றுக்கு மாற்றாக ‘பார்’ வந்திருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். முடிந்தால் கடலை மாவு, பயித்தம் மாவு போன்றவற்றைக்கூடப் பயன்படுத்தலாம். இது குப்பையை மட்டுமல்ல, குளிக்கும் நீரின் மாசையும் கட்டுப்படுத்தும். சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
மேலும், வீட்டிற்கு ஏதாவது வாங்கவேண்டும் என்றால், பக்கத்து ஊரு, பக்கத்து நாடு என்று போகாமல்,உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் சிறிய கடைகளிலேயே வாங்குங்கள். அப்போதுதான், தேவையில்லாத பிளாஸ்டிக் பேக், பாட்டில் போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும். பணமும் மிச்சம், சுற்றுச்சூழலும் பாதிப்படையாது.
அதேபோல புது துணிகள் வாங்குவதைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு உங்கள் ஆடையை மாற்றிக்கொள்ளலாம். இப்போது ஏராளமான நன்கொடை வாங்கும் அல்லது சிக்கன கடைகளும் வந்துவிட்டன. அங்கு உங்களுடைய பயன்படுத்தாத உடைகளை தானமாகக் கொடுக்கலாம். இப்படிக் குப்பை சேருவதைத் தவிர்க்கப் பல வழிமுறைகள் உள்ளன” என்று நிறைவு செய்கிறார் ஆன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil