Advertisment

சுகர் பிரச்னையை தடுக்க இந்த பாரம்பரிய அரிசி: வேளாண் மாணவிகள் முகாமில் தகவல்

கிராமங்களில் ஊரக வேளாண் பணி குறித்த தொடக்கவிழா; பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் பிரச்னையை தடுக்க இந்த பாரம்பரிய அரிசி: வேளாண் மாணவிகள் முகாமில் தகவல்

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் இறுதியாண்டு G8 குழு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்த தொடக்க விழா நல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டம், ஆரப்பள்ளம் ஊராட்சி, நல்லூர் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் குழுவாக இணைந்து ஊரக வேளாண் பணி அனுபவம் மேற்கொள்கின்றனர். இப்பயிற்சியின் துவக்க விழா உத்திராபதியார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: கல்லணை வேந்தன் கரிகாலனுக்கு புகழாரம்.. திருச்சியில் 1000 சிறுமிகள் நாட்டியாஞ்சலி..!

இவ்விழாவில் வேளாண்புலம் இணைப்பேராசிரியர் முனைவர் காளிதாசன் தலைமைத் தாங்கினர் மற்றும் உதவிப் பேராசிரியர்களான முத்துக்குமார், மாதவன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா முருகானந்தம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தநடராஜன், வேளாண் உதவி இயக்குநர் எழில்ராஜா, வேளாண் உதவி அலுவலர் கொளஞ்சிநாதன், கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் மற்றும் பத்திரிகையாளரும், விவசாயிமுமான கரு.முத்து ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கரு.முத்து பாரம்பரிய ரக அரிசிகள் குறித்து பேசியதாவது; காட்டுயானம் அரிசி ரகத்தில் யானை கூட பயிருக்கு மத்தியில் மறைந்துவிடும். 7 அடிக்கு மேல் உயரமாக வளர்கின்றன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தோல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது.

கருப்பு கவுனி அரிசி பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை “அரச உணவு” என்றும் “பேரரசர் உணவு” என்றும் கூறுவர், தமிழ் மன்னர்கள் விரும்பி உண்டனர். இந்த அரிசி புற்றுநோய் எதிர்ப்பையும், இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது. உடலில் இருந்து நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

நார்ச்சத்து மற்றும் 18 அமினோ அமிலங்கள் உள்ளன. இன்றும் கருப்பு கவுனி அரிசியுடன் இனிப்பு இல்லாமல் அரச குடும்ப செட்டிநாடு திருமணம் இல்லை. சிவப்பு கவுனி அரிசி எலும்புகளுக்கு நல்லது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

அருபதாம் குருவை அரிசி 60 நாட்களில் பயிரிடப்படும் குறுகிய கால பயிர். வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. கருங்குருவை அரிசி நம் உடலைப் பாதுகாக்கும் கயாகல்பம். சித்தர்கள் இந்த அரிசி வகையை மருந்துகளை தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

மாப்பிள்ளை சம்பா அரிசி தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய்  எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. மாப்பிள்ளை சம்பா அரிசியில் நார்ச்சத்து உள்ளது. அல்சரை தடுக்கிறது. உடல் வெப்பத்தை குறைக்கிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. பலப்படுத்தும் சக்தி உள்ளது. ஹீமோகுளோபின் மற்றும் மூளை வலிமையை அதிகரிக்கும்.

பூங்கார் ரகம், வாலன் சம்பா அரிசி ரகங்கள் பெண்களுக்கு நல்லது. கர்ப்பிணிகளின் இடுப்பு எலும்பை பலப்படுத்தி சுகப்பிரசவத்திற்கு உதவி செய்யும். குழியாடிச்சன் அரிசி உப்பு மண்ணிலும், வறட்சி நிலையைத் தாங்கி வளரும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

குள்ளக்கார் அரிசி உடற்பருமனை குறைக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. வெள்ளை அரிசியை விட துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

கருடன் சம்பா அரிசி ரத்த ஓட்டம் மற்றும் ரத்த சுத்திகரிப்பை மேம்படுத்துகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மருத்துவ ரீதியாக காரியோபிலீன், எத்தில் ஓலியேட், ஸ்குவாலீன், டோகோபெரோல் மற்றும் காம்பெஸ்டெரால், ஸ்டிக்மாஸ்டெரால் மற்றும் சிட்டோஸ்டெரோல் போன்ற பைட்டோ ஸ்டெரோல்களும் உள்ளன.

பாரம்பரிய அரிசி வகைகள் உடல் கொழுப்பின் அளவு உருவாக்குவதைத் தடுக்கிறது. நிறம், மணம், மரபுவழி நன்மைகள் கொண்டவை. அதிக உரம் பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை. நல்ல ஆரோக்கியமான உணவாக பாரம்பரிய அரிசி பரிந்துரைக்கப்படுகிறது. விவசாயிகளும் இதுபோன்ற ரகங்களை சாகுபடி செய்தால் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும். பாரம்பரிய நெல் ரகங்களும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

இதேபோல், அளக்குடி கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புலன் இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் குழுவாக இணைந்து வேளாண் பணி அனுபவம் மேற்கொள்கிறார்கள். இவ்விழாவில் வேளாண்புலன் இணைப்பேராசிரியர் முனைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார். அளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பவள்ளி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இவ்விழாவை மாணவி நிவேதிகா தொகுத்து வழங்கினர். மாணவி ஓவியா தொடக்க உரையாற்றினார், மாணவிகள் நௌமிகா மற்றும் நித்யஸ்ரீ ஊரக வேளாண் பணி அனுபவம் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தனர். உதவி வேளாண் அலுவலர் கொளஞ்சிநாதன் வேளாண்துறை சார்ந்த திட்டங்களை விளக்கி கூறினார்.

மாணவி நிவேதா நன்றியுரை கூறி விழாவை சிறப்பித்தார். இவ்விழானை சிறப்பிக்க வந்திருந்த விவசாய பெருமக்களுக்கு உதவும் வகையில் பல விவசாயம் சார்ந்த செய்திகள் சிறப்பு விருந்தினார்களால் எடுத்துரைக்கப்பட்டது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Agriculture Rice
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment