Advertisment

அரியமான் பீச் முதல் அரிச்சல் முனை வரை… ராமேஸ்வரத்தில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இருக்கு!

ஒருபுறம் அமைதியான கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகள் கொண்ட கடலையும் தனக்கு கிடைத்த வரமாக பெற்றுள்ளது ராமேஸ்வரம் தீவு.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
BEST Places to Visit in Rameswaram in tamil

Tourist Places to Visit in Rameswaram

ச. மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்

Advertisment

Top 11 Best Places to Visit in Rameshwaram Tamil News: நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள நிலப்பகுதி "தீவு" என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய தீவுகளில் ஒன்றுதான் ராமேஸ்வரம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தீவு சுமார் 53 கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் வரலாறு ராமர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. ராமர் தனது மனைவி சீதையை இலங்கையிலிருந்து மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாகவும், நகரின் மையத்திலுள்ள ராமநாதசுவாமி கோவிலில் சிவனை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது. இதனால், இந்து சமயத்திற்கு இது முக்கிய தலமாக உள்ளது.

இந்தியாவின் மூன்று கடல்களில் ஒன்றான வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்த தீவில் மீனவ மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் மார்க்கங்களில் பிடிக்கப்படும் மீன்கள் நாட்டின் தென்மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிப்பிகள் மற்றும் சங்குகளால் தயார் செய்யப்படும் அலங்கார பொருட்கள் இங்கு குவியும் சுற்றுலாப் பயணிகளை கவருகின்றன.

publive-image

ஒருபுறம் அமைதியான கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகள் கொண்ட கடலையும் தனக்கு கிடைத்த வரமாக பெற்றுள்ளது ராமேஸ்வரம் தீவு. நாட்டைக் கட்டியாண்ட மன்னர்கள் முதல் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் வரை இத்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர். அதுமுதல் தற்போது வரை பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சந்தித்து நிற்கிறது. அத்தையாக அழகியலை கொண்ட இத்தீவை ஒரே நாளில் சுற்றிக் களிக்க முடியாது. ஆனால், பரபரப்பாக இயங்கும் இவ்வுலகத்தில் வாழும் நாம் ஒருநாளில் சுற்றி மகிழ வேண்டிய சில முக்கிய இடங்களை இங்கு வழங்க நாங்கள் முயன்று இருக்கிறோம். வாங்க தீவுக்குள் பயணிக்கலாம்…

  1. அரியமான் பீச் (குஷி பீச்)
publive-image

அரியமான் பீச் ராமேஸ்வரம் தீவில் இல்லை. தீவுக்கு செல்லும் வழியில் இருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவில் இந்த பீச் அமைத்துள்ளது. குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அமைதியாக மண்ணை முத்தமிடும் அலைகளில் கால்களை நனைத்து மகிழலாம். குழந்தைகள் ஓடியாடி விளையாட மண் திட்டுகளும், சறுக்குப் பலகைகளும் உள்ளன. இங்கு மலையில் இருந்து கொட்டும் அருவில் போல் அமைக்கப்பட்டுள்ளது பார்ப்போரின் கண்களுக்கு ரம்மியமாக இருக்கும்.

  1. பாம்பன் பாலம்
publive-image

ராமேசுவரம் தீவை ராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு பாக்ஜலசந்தி கடலில் பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேய இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இப்பாலம் 145 கர்டர்களுடன் 2.06 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டது. கடல் தண்ணீர் மற்றும் உப்பு காற்று ஆகியவற்றால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த பாலம் சேதமடைந்து வரும் நிலையில், அதன் அருகாமையிலேயே ரூ.279 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'லிப்ட்' தொழில்நுட்பத்தில் புதிய பாலம் கட்டுப்பட்டு வருகிறது.

publive-image
publive-image

பொதுவாக, ராமேசுவரம் செல்லும் மக்கள் ரயிலில் பயணிக்கும் போது இப்பாலத்தை கடந்து செல்லுகையில், கடல் அழகை ரசித்துக்கொண்டு புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ்வார்கள். ஆனால், தற்போது பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், ரயில் மண்டபம் நிலையத்துடன் நின்றுவிடும். அதன்பிறகு பேருந்தில் பயணித்து தான் தீவை அடைய வேண்டும். சுற்றுலா வாகனம், கார், பைக்குகளில் செல்லும் மக்கள் வாகனங்கள் செல்ல அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் நின்று கடல் அழகையும், கட்டப்பட்டு வரும் பாலத்தையும் காணலாம். அங்கு நின்றவாறு சில செல்ஃபிகளையும் க்ளிக் செய்யலாம்.

  1. குந்துகல் - விவேகானந்தர் மணிமண்டபம்
publive-image

பாம்பன் ரயில் பாலத்தை கடந்து அக்காள்மடத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பும் சாலையில் பயணித்தால் குந்துகல் வந்துவிடும். அங்கு சுவாமி விவேகானந்தருக்கென மணிமண்டபம் எழுப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தை வலம் வந்த பிறகு, அருகில் இருக்கும் கடற்கரையில் உலவி வரலாம். அதன் அருகிலே அமைத்துள்ள குருசடை தீவுக்கும் விசிட் அடிக்கலாம். குந்துகலில் இருந்து அந்த தீவுக்கு படகில் பயணிக்கலாம். அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

publive-image

குருசடை தீவு ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. தற்போது தீவை மேம்படுத்தும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. அங்கு சென்றால், ஆங்கிலேயர் கால கட்டிடங்களை காணலாம். அவர்கள் காலத்தில் உறைய வைத்த கடல் மீன்கள், பாம்புகள், டால்பின்களின் மண்டை ஓடுகள் என பலவற்றையும் பார்க்கலாம். இந்த பயணத்தை முடித்தவுடன், குந்துகலில் அமைக்கப்பட்டுள்ள குட்டி மீன்பிடி துறைமுகத்தையும் பார்க்கலாம்.

publive-image
  1. வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயம்
publive-image

அக்காள்மடத்திற்கு அடுத்ததாக தங்கச்சிமடம் உள்ளது. இங்குள்ள வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம் 16- ம் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பரப்ப ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியா வந்த புனித சவேரியாரால் 1542-ம் ஆண்டு பனை ஓலை வைத்து இயேசுவின் சீடரான புனித யாகாப்பருக்கு ஆலயம் கட்டினார். அந்த ஆலயம் 1990-களில் புதுப்பிக்கப்பட்டு, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்களின் அடையாளத்துடன் கட்டப்பட்டது.

publive-image

480 ஆண்டுகள் வரலாற்றை தாங்கி இருக்கும் இவ்வாலயத்தின் திருவிழா பெரும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் செல்லும் போது அமைதியான சூழல் இருக்கும். கடல் காற்று மரங்களை அசைக்க அதிலிருந்து வரும் காற்று மனதிற்கு அமைதி தரும்.

  1. வில்லூண்டி தீர்த்தம்

அடுத்த தலமாக வில்லூன்றி தீர்த்தம் அல்லது வில்லூண்டித் தீர்த்தம் எனும் புனித தீர்த்த கிணறு நோக்கி பயணிக்கலாம். இந்த இடம் தங்கச்சிமடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

publive-image

இலங்கையில் ராவணனுடன் போரிட்டு சீதையுடன் ராமேஸ்வரம் திரும்பிய ராமன், சீதாபிராட்டிக்கு தனது கையிலிருந்த வில்லை ஊன்றி அதிலிருந்து பீறிட்ட நீரைக் கொண்டு தாகத்தைக் தணித்துள்ளார். இதனால் இந்த இடத்துக்கு வில்லூண்டித் தீர்த்தம் என்று பெயராயிற்று.

  1. அப்துல் கலாம் தேசிய நினைவகம்
publive-image

தொடர்ந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் சாலையில் பேக்ரும்பு என்ற இடத்தில், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், ராமேஸ்வரம் மண்ணின் மைந்தருமான ஏ. பி. ஜே. அப்துல் கலாமுக்கு இந்திய அரசால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது அப்துல்கலாம் நினைவு மண்டபம்.

publive-image

இங்கு அவரின் சமாதியுடன், அவர் விஞ்ஞானியாக, அறிவியல் ஆலோசகராக, கண்டுபிடிப்புகளை உருவாக்கியவராக மற்றும் குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலங்களை பிரதிபலிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான ஓவியங்களும், சிலைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், அறிவுசார் மையம், கலையரங்கம், கோளரங்கம், வாகனம் நிறுத்தும் இடம் போன்றவையும் உள்ளன.

  1. லட்சுமண தீர்த்தம்

அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை அடுத்து, லட்சுமண தீர்த்தம் உள்ள இடத்திற்கு செல்லலாம். இந்த தீர்த்தமானது சீதையை கடத்தி சென்ற ராவணனை வதம் செய்து தனக்கு ஏற்பட்ட பாவங்களை போக்குவதற்காக ராமரின் தம்பி இலட்சுமனரால் உருவாக்கப்பட்டது என்று இராமாயணம் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள முக்கிய தீர்த்த குளங்களில் இந்த தீர்த்த குளமும் ஒன்றாக உள்ளது.

publive-image

இலட்சுமண தீர்த்தம் இலட்சுமனேஸ்வரர் பெயரில் சிவன் இருக்கும் கோவில் உள்ளது. கோவிலில் பக்தர்கள் வழிபட்டு தீர்த்தநீரை தலையில் தெளித்து செல்வார்கள். குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி, அரிசி இரையாக வழங்கி புண்ணியம் தேடுவது ஐதீகமாக உள்ளது.

publive-image

இதற்கு அருகிலே "மிதக்கும் கல்" அருங்காட்சியகமும், அதற்கு எதிரிலேயே ராமர் - சீதை அருங்காட்சியகமும் உள்ளன. இங்கு உள்ளே சென்றபின் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை.

  1. ராமநாத சுவாமி கோவில்

இந்த இடங்கள் அமைந்துள்ள அதே சாலையில் தான் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் ராமர் கால வரலாற்றை கொண்டுள்ளது. பாண்டியர் காலத்தில் புனரமைக்கப்பட்ட இந்தத் திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்றதாகவும், சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றதாகவும் உள்ளது.

publive-image

ராவணனைக் கொன்ற பாவத்தினை போக்கவும், ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக்கூடாது என்பதற்காகவும் ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிசுடை செய்தார். எனவே, ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு ராம நாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் அதாவது இராம ஈஸ்வரம் என்றும் பெயர் பெற்றது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது இந்து தர்ம நம்பிக்கை.

publive-image

காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விசுவநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும். இங்குள்ள 64 புனிததீர்த்த குளங்களில் சிலவை அழிந்து வரும் நிலையில், தற்போது 22 புனித தீர்த்தங்களே உள்ளன.

தீர்த்தகரைகளை கடந்த பின்னர் மக்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிய துறைமுகத்தில் இருந்து படகு சவாரி மேற்கொள்ளலாம். கோவிலை ஒட்டியுள்ள ஓலைகூட பீச்சிலும் களைப்பாறலாம்.

  1. தனுஷ்கோடி

இதன்பிறகு, இந்தியாவின் கடைக்கோடி எல்லையான தனுஷ்கோடிக்கு செல்லலாம். வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர். 'கோடி' என்பது முனை. வானைத் தொடும் முனை 'கோடு'. அதுபோலக் கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் 'கோடி'. தனுஷ்கோடியையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் ராமர் கட்டியதாக கருதப்படும் ராமர் பாலத்தின் சுவடுகள் இன்றும் காணப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது எழுந்த இராட்சத அலைகள் தனுஷ்கோடியை தரைமட்டமாக்கியது. இந்த கோர தாண்டவத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.

publive-image

தற்போது அங்கு இடிந்த நிலையில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தேவாலயமும் சில கட்டிடங்களுமே மீதமுள்ளன. சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களும் தனுஷ்கோடிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். மீன் பொரித்து கொடுப்பது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளையும், அலங்கார பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.

publive-image
  1. கோதண்டராமர் கோவில்

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் உள்ள தனுஷ்கோடியில் கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு தனுஷ்கோடியைக் கடந்து இடதுபுறமாக கடல் மேல் போடப்பட்டுள்ள சாலையில் பயணிக்க வேண்டும். கோவிலை சுற்றி வரும் போது அதனை சூழந்து கடல் அழகு நம்மை உறைய வைத்து விடும்.

publive-image

இராமாயணத்தில், விபீசணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவரை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூற, ராவணன் அதை ஏற்க மறுக்கிறார். அத்துடன் வீடணனை தனது காலால் மிதிக்கச் சென்றார். இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைகிறார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். வீடணனுக்கு பட்டாபிஷேகம் நடந்த அந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோவில் தான் கோதண்டராமர் கோவில்.

  1. அரிச்சல் முனை
publive-image

வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் சங்கமிக்கும் இடமே அரிச்சல் முனை. இந்த இடத்துடன் ராமேஸ்வரம் தீவின் எல்லை முடிகிறது. புவியியல் அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கையின் நில எல்லையும் இங்கிருந்துதான் தொடங்கி முடிகின்றன. இந்த இடத்தில் இருந்து இலங்கை சுமார் 15 கி.மீ-க்கு அப்பால் உள்ளது.

publive-image

தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல் முனை வரை செல்லும் போது இருபுறமும் சூழந்து கடலை ரசித்து மகிழலாம். கடல் அலைகள் சாலையை அரித்து விடாத வண்ணம் அங்கு கருங்கற்கள் கொட்டப்பட்டு இருக்கும். அரிச்சல் முனையை அடைந்தவுடன் வாகனங்களை நிறுத்தி விட்டு, கடற்கரை சுற்றி வரலாம். மேலும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழலாம். சில நாட்களில் கடல் உள்வாங்கி இருக்கும், அதுவே சில நாட்களில் கரையில் இருக்கும் கருங்கற்களை மோதிய வண்ணம் இருக்கும். எப்படி இருந்தாலும், அங்குள்ள கடல் அழகு நம்மை உற்சாகத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Lifestyle Update Lifestyle Rameshwaram Tourism Abdul Kalam Tamilnadu Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment