சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார்.
ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் பாரதியின் தோழியாக, டாக்டர் வெண்பாவாக வரும் இவரது கதாபாத்திரம், அவரை தமிழ் சீரியல் உலகில், நம்பிக்கைக்குரிய வில்லிகளில் ஒருவராக்கியது.
29 வயதான ஃபரினா தனது காதலரான ரஹ்மான் உபைத்தை நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இப்படி சொந்த வாழ்க்கை, சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
தன் கர்ப்பத்தை வெளி உலகத்துக்கு அறிவித்தது முதல், தான் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா, தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அதிலும் கர்ப்ப காலத்தில்’ ஃபரினா எடுத்த சில போட்டோஷூட்கள் பல விமர்சனங்களையும் கிளப்பியது. ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஃபரினா வழக்கம்போல மாடலிங், நடிப்பு என ஓடிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு’ நவம்பர் 16ஆம் தேதி ஃபரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் எட்டி அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பது போல், தன்னுடைய ஒரு மாதமே ஆன குழந்தைக்கு சயன் லாரா ரஹ்மான் என பெயரிட்டு, விதவிதமாக போட்டோஷூட்கள் எடுத்து’ அதையெல்லாம் ஃபரினா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாமே பயங்கர வைரலாகியது.
சீரியலில், பாரதிக்கு கண்ணம்மாவுடன் திருமணமானது தெரிந்தும், அவனை அடையும் மோசமான நோக்கத்துடன் பல சதிகளை செய்யும் வில்லி வெண்பாகவே, ஃபரினா சீரியல் முழுக்க வருகிறார். வெண்பாவே பார்த்தாலே ரசிகர்கள் எரிச்சலடைவது உண்டு. அந்தளவுக்கு இவரது நடிப்பு இருக்கும்.
சீரியலில், கண்ணம்மாவுக்கு பிரசவ வலி வரும்போது, மனசாட்சியே இல்லாமல் அவளை கொல்ல நினைப்பது, அஞ்சலி கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்வது, கருக்கலைப்பு செய்ததாகக் கூறி போலீசாரிடம் சிக்குவது என வெண்பா சீரியல் முழுக்க சகலகலா வில்லியாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஃபரினா ஒரு ஹீரோயின் தான்!
பாக்கியலெட்சுமி சீரியலில், ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்த, ஜெனிஃபர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அந்த கதாபாத்திரம் இனி நெகட்டிவ்வாக மாறபோகிறது. எனவே அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கெட்டப்பெயர் வாங்க விரும்பவில்லை என்று அவர் கூறினார். அவருக்கும் சமீபத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபரீனா போன்று தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் பிரித்து அதை நேர்த்தியுடன் கையாளும் பெண்கள் மிகவும் குறைவு. அதுவும் ஒரு இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வரும் பெண்ணுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும். அதையெல்லாம் உடைத்தெறிந்து இன்று ஒரு நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஃபரினா!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“