காமன்வெல்த் வாள் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய சென்னை பெண் பவானி தேவி செய்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வீராங்கனை பவானி தேவி:
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் பெண்களின் ஈடுப்பாடு சமீபகாலமாக பெருமளவில் உயர்ந்துள்ளது. கிரிக்கெட்டில் தொடங்கி டென்னிஸ், கபடி, குத்துச்சண்டை, ஹாக்கி, எடை தூக்கல் என அனைத்திலும் பெண்களின் சாதனை இந்தியாவை தொடர்ந்து கவுரப்படுத்தி வருகிறது.
ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி நம்நாட்டு பெண்கள் இமாலய சாதனையை செய்து வருகின்றனர். அந்த வகையில் தனி ஒரு வீராங்கனையாக ஆஸ்திரேலியா சென்று , இங்கிலாந்து வீராங்கனையுடன் நின்று விளையாடி தங்க மகள் பவானி தேவிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் கான்பெரா நகரில், காமன்வெல்த் வாள் சண்டை போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில், சென்னை, புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பவானி தேவி மட்டும் பங்கேற்றார்.
சீனியர் பெண்களுக்கான சேபர் பிரிவு வாள் சண்டை போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.இறுதிப் போட்டியில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, உலகின் முன்னணி வீராங்கனையான எமிலி ராக்ஸ் என்பவருடன் மோதினார்.
அதில் திறமையாக விளையாடிய பவானி தேவி, 15 - 12 என்ற புள்ளிகள் கணக்கில், எமிலி ராக்சை வென்று, காமன்வெல்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சீனியர் பிரிவு காமன்வெல்த் வாள் சண்டை போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை, தமிழக வீராங்கனை பவானி தேவி பெற்றுள்ளார்.
இப்படி ஏகப்பட்ட சாதனைகளை செய்து நம்மூர் பொண்ணு பவானி தேவியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த நெகிழ்வான பதில் பலரையும் ஈர்த்துள்ளது. இதோ அவர் அளித்த பதில்,
” அனைவருக்கும் நன்றி.. இந்தியாவில் இருந்து ஒரே வீராங்கனையாக சென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளேன் என்று நினைத்தாலே இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் கஜா புயலால் டெல்டா மக்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்தால் வேதனை அதிகமாகி விடுகிறது. சோறு போடும் டெல்டாவிற்கு இப்படியொரு நிலையா? அனைவரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.
இந்த தருணத்தில் நான் செய்ய நினைப்பது இதுதான். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நான் வாங்கிய இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். இதே உற்சாகத்துடன், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கிறேன். அந்த பதக்கத்தையும் கண்டிப்பாக என் மக்களுக்காக அர்பணிப்பேன்” என்று கூறியுள்ளார்.
பவானியின் இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.