Is Biriyani Good for Health? பிரியாணிக்கு மயங்காதவர்கள் யார்தான் இங்கு இருக்கிறார்கள். சைவம், அசைவம், லக்னோயி, ஹைதராபாதி, சீராக சம்பா, பாசுமதி என அரிசி முதல் சுவை வரை எண்ணிலடங்கா பிரியாணி வகைகள் உள்ளன. ஆனால், பிரியாணியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை நம்மோடுப் பகிர்ந்துகொண்டார் பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

“இப்போது குளிர்காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் பலருக்கு இந்த சீசனில் எந்த வகையான பிரியாணி சிறந்தது என்கிற குழப்பம்தான் மனதில் எழும். கவலையே வேண்டாம்.எந்த சீசனிலும் எந்த வகையான பிரியாணியையும் சாப்பிடலாம். ஆனால், பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களையும், சாப்பிடும் அளவையும் சீசனுக்கு ஏற்றபடி நிச்சயம் மாற்றிக்கொள்ளவேண்டும். சாதாரண நாள்களிலும் அதிக மசாலா போட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லதல்ல.
மற்ற காலங்களைவிடக் கோடையில் வியர்வை மூலமாக உடலிலுள்ள மினரல்கள் அதிகப்படியாக வெளியேறுவதால், பிரியாணி மட்டுமல்ல அதிகப்படியான மசாலா கலந்த எந்த உணவுகளையும் கோடைக்காலங்களில் குறைத்துக்கொள்வது சிறந்தது. மேலும், இந்தக் காலகட்டத்தில் அதிகம் காரம் சாப்பிட்டால், உடலில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. குளிர்காலங்களில் பிரியாணி மற்றும் பிற மசாலா உணவு வகைகள் சாப்பிட்டாலும் அதில் கட்டுப்பாடு அவசியம்.

சீரகச் சம்பா பிரியாணி, பாசுமதி பிரியாணி, தக்காளி சேர்த்த பிரியாணி, தக்காளி இல்லாத பிரியாணி, கலவை பிரியாணி, தம் பிரியாணி என நூற்றுக்கணக்கான பிரியாணி வகைகள் இங்கு உள்ளன. இதில் எது ‘ஒரிஜினல்’ என யாராலும் சொல்லவே முடியாது. எனவே அவற்றை ஆராயாமல், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படாத அளவிற்குப் பிரியாணியை உட்கொள்வதே சிறந்தது.
பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாவின் அளவைக் குறைத்து, அதற்குப் பதிலாகக் காய்கறி, மாமிச அளவுகளை அதிகரித்துச் சாப்பிடுவது சிறந்தது. பொதுவாக ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் காய்கறிகளைத்தான் சேர்ப்பார்கள். ஆனால், இனி ஒரு கப் அரிசிக்கு இரண்டு முதல் மூன்று கப் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகளில் இருக்கும் காரத்தன்மை (Alkaline), அரிசி, பருப்புகளில் இருக்கும் அமிலங்களோடு சேர்ந்து உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அமிலத்தைவிட அல்கலைனின் அளவு உடலில் அதிகமாக இருக்கவேண்டும். எனவே, காய்கறிகளின் அளவை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. பாசுமதி அரிசியிலேயே ஏராளமான வகைகள் உண்டு. அதில் அன்பிளீச்சுடு ஹை-ஃபைபர் (Unbleached High-Fibre) பாசுமதி அரிசி தற்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கிறது. உடலுக்கும் நல்லது. மேலும், பிரவுன் நிற அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இந்தக் காரணத்தினால் பாசுமதி அரிசியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். எந்த ஒரு அரிசி வகையைத் தேர்ந்தெடுக்கும் போதும் நார்ச்சத்து இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து வாங்குங்கள்.
ஒரு நாள் முழுவதும்கூட பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன் எனச் சாதாரணமாகச் சொல்லுபவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அப்படி ஒருவேளை நிஜமாகவே செய்ய முயற்சிகூட செய்து பார்க்க வேண்டாம். நிச்சயம் உடல்நலத்திற்குப் பல கேடுகளை விளைவிக்கும். எந்த உணவையும் மெதுவாக ருசித்து உண்ணுவதே சிறந்தது. அதேபோல, சாப்பிடுவதற்கு இடையே அவ்வப்போது தண்ணீர் குடிப்பது, ஜீரண சக்தியைக் குறைக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது சிறந்தது.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”