/tamil-ie/media/media_files/uploads/2017/08/pregnant_759_pixabay.jpg)
நாட்டில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுதல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது நாட்டில் அதிகரித்துள்ளது. முக்கியமாக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, நாம் அனைவருமே அக்கறை கொள்ள வேண்டும்.”, என கூறினார்.
மேலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு, சொந்த விருப்பம், ஆபத்தான நிலைமை, குறைந்த நேரம் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
“சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை குறைக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுகுறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கவுன்சிலிங் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”, என அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.
மத்திய அரசின் சுகாதார சேவையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 31,296 பிரசவங்களில், 17,450 பிரசவங்கள் சிசேரியன் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார். இதும் 55.75 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனைகளில் சொந்த விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும் பிரசவங்களின் எண்ணிக்கையை மருத்துவமனையின் வரவேற்பரையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சிசேரியன் அறுவை சிகிச்சை என்பது வயிறு மற்றும் கருப்பை சுவர்களின் வழியாக வெட்டுவதன் மூலம், கருப்பையில் இருந்து குழந்தை எடுக்கும் முறையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.