தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. அதன்படி தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலராக இருந்த ராஷ்மி சித்தார்த் ஜகடே சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ராஷ்மி சித்தார்த் ஜகடே?
2010, தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஷ்மி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
பின்னர், 2019 ஆம் ஆண்டில் 3 ஆண்டுகள் மத்திய பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநராக மகாராஷ்டிராவில் பணியாற்றினார்.
மீண்டும், இந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு பணிக்குத் திரும்பிய ராஷ்மி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 4 முறை தோல்வி
2010 ஆம் ஆண்டு புனேவில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே ஒரு பெண் ராஷ்மி சித்தாத் ஜகடே. புனேவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியும் இவர் தான். அறிவியல் பட்டதாரியான ராஷ்மி, 2003 ஆம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகி வந்தார்.
தொடர்ந்து 4 முறை தேர்வு எழுதி தோல்வியுற்றார்.
இறுதியாக 2010ல் தனது 29 வயதில், 169வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார் ராஷ்மி.
ராஷ்மியின் இந்த வெற்றிக்கு பின்னால் இருந்தது அவரது கணவர் சித்தார்த் ஜகடே.. அவர்தான் ராஷ்மிக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தார். ஆனால், சித்தார்த் படித்தது வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டும் தான்…
என்ன இதை படிக்கும் போது சூரிய வம்சம் படம் உங்களுக்கு நியாபகம் வருகிறதா? ஆம் ராஷ்மியின் நிஜ வாழ்க்கையும் கிட்டத்தட்ட அந்த படம் போலத்தான்….
சொத்துகளை விற்ற கணவன்
/indian-express-tamil/media/media_files/ODSWlIdbUSpP9iphw1SN.jpg)
சித்தார்த் ஜகடேவுக்கு சிறுவயதில் இருந்தே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை.
ஆனால், சித்தார்த் சிறுவயதிலே அவர் தந்தை இறந்து விட்டதால், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக அவரால் படிக்க முடியாமல் போனது,. இதனால் அவரது ஐ.ஏ.எஸ். கனவு கனவாகவே போனது.
ராஷ்மி, சித்தார்த் வாழ்வில் வந்தபிறகு மீண்டும் அந்த கனவு துளிர்விட ஆரம்பித்தது.
தன்னால் தான் ஐ.எ.ஏஸ் ஆக முடியவில்லை. எப்படியாவது தனது மனைவி ராஷ்மியை ஐஏஎஸ் அதிகாரியாக்க வேண்டும் என விரும்பினார் சித்தார்த்.
தங்கள் வீடு, நிலம், சில்லறை வியாபாரம் செய்து வந்த கடை அனைத்தையும் விற்று ராஷ்மியை சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து படிக்க வைத்தார்.
ஆனால், நான்கு முறை ஐஏஎஸ் தேர்வில் தோற்ற ராஷ்மி, இனி இது வேண்டாம் என முடிவெடுத்த போது, சித்தார்த் மட்டும் விடாப்பிடியாக இருந்தார். குழந்தையை தானே கவனித்துக் கொண்டு, ராஷ்மி தொடர்ந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத ஊக்குவித்தார்.
கிட்டத்தட்ட ஏழாண்டுகள் கடின உழைப்புக்கு பிறகு ராஷ்மி ஐ.எ.ஏஸ். தேர்வில் வெற்றி பெற்று தன் கணவரின் ஆசையை நனவாக்கினார்...
தான் படிக்கவில்லை என்றாலும் தன் மனைவியை படிக்க வைத்து ஐ.எ.ஏஸ் ஆக்கிய சித்தார்த் கதை, அவரைப் போல மனைவியை நேசிக்கும் பல கணவன்மார்களுக்கு ஓரு தூண்டுகோலாக இருக்கும் என்பது நிச்சயம்….
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“