புதுச்சேரி என்றாலே நினைவுக்கு வருவது அழகு நிறைந்த கடற்கரைகளும், விதவிதமான மதுபானங்களும் அதுவும் குறைந்த விலையில் என்பது தான். சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்கு வார இறுதி சில்லிங் ஸ்பாட்டாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரியில் திரும்பும் திசை எல்லாம் விதவிதமான மதுக்கடைகள், ரெஸ்ட்டாரண்ட், ரெஸ்டோபார்கள் இருக்கும். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க பலரும் அங்கு சென்று வருவர். இந்தநிலையில் இதற்கு மேலும் ஒரு படி மேலாக செல்லும் வழியிலேயே வைப் செய்யும் படி கேடமரன் ப்ரூயிங் கோ, பாண்டி என்ற நிறுவனம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு முதன்முதலாக ‘பீர் பஸ்’ அறிமுகம் செய்ய உள்ளது.
Advertisment
வெளிநாடுகளில் மட்டுமே இதுபோன்ற பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் முதல் முதலாக தமிழகத்தில் இயக்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.3000 என்ற விலையில் ஏப்ரல் 22-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீர் பஸ் பயணத்தில் 3 கோர்ஸ் உணவு, அன்லிமிடெட் உணவு வகைகள், கிராஃப்ட் பீர் ஆகியவை வழங்கப்படுகிறது. 9 வகையான கிராஃப்ட் பீர் வழங்கப்படுகிறது. அதோடு அறிவுசார்ந்த வகையிலும் பீர் தயாரிப்பு குறித்து நிபுணர்களால் விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பழங்கள், தானியங்களில் இருந்து பீர் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள சிறந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. அரசு அனுமதித்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது.
அதோடு செல்லும் வழியில் புதுச்சேரி அரசு அனுமதித்த இடத்தில் மட்டும் மது அருந்த பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என பீர் பஸ் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பேருந்தில் மது அருந்த கட்டாயம் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 'பீர் பஸ்' என்று அழைக்கப்படுவதால் பஸ்ஸில் பீர் வழங்கப்படும் என அர்த்தம் கொள்ளக் கூடாது. பேருந்தில் கட்டாயம் பீர் வழங்கப்பட மாட்டாது.
'பீர் பஸ்' சுற்றுலா பயணத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயனர்களிடையே பயணத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பீர் பஸ் சுற்றுலாவிற்கு நீங்க தயாரா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil