Chinnakuyil Chithra Birthday Life Travel Rewind Tamil News
Chinnakuyil Chithra Birthday Life Travel Rewind Tamil News : சின்னக்குயில், இந்திய சினிமாவின் மெலடி ராணி, வானம்பாடி, லிட்டில் நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா என இன்னும் ஏராளமான செல்ல பெயர்களைக் கொண்டிருக்கும் சித்ரா பிறந்தநாள் இன்று. 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருடைய இசைப் பயணத்தைப் பற்றிப் பார்ப்போமா!
Advertisment
வெகுளி, புன்சிரிப்பு, இனிமையான குரல் என இவ்வனைத்திற்கும் சொந்தக்காரர் சித்ரா. கேரளாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழ் திரைப்பட பாடல்கள் சித்ரா இல்லாமல் நிறைவு பெறாது. சிறு வயதில், சித்ராவின் வீட்டுப் பக்கத்தில் இருந்த சிவா தியேட்டரில் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள்தான் வெளியிடுவார்களாம். அங்கு வெளியிடப்படும் படத்தின் பாடல்களை கேட்டுதான் தமிழ் பாடல்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் இளையராஜா பற்றி சித்ராவிற்கு தெரியவந்துள்ளது.
எப்படியாவது இளையராஜாவை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியவருக்கு அவரை தேடியே அந்த வாய்ப்பு வந்தது. `நோக்கத்த தூரத்து காணும் நாத்து' என்ற மலையாள படத்தை தமிழில் எடுக்க விரும்பிய இயக்குநர் ஃபாசில், மலையாள பாடல்களை இளையராஜாவிடம் போட்டுக்காட்டினார். அதில், `ஆயிரம் கண்ணுமாயி' எனும் சித்ரா பாடிய பாடலும் குரலும் இளையராஜாவை ஈர்க்க, அவரையே தமிழிலும் பாடவைத்துவிடலாம் என்று சித்ராவை அழைத்துள்ளார் ராஜா.
Advertisment
Advertisements
பெரிய ஜாம்பவானை சந்திக்க போகிறோம். பெரிய உருவமாக இருப்பார் என ராஜாவைப் பற்றிய சித்ராவின் கற்பனை உருவத்திற்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் போனது அவருடைய முதல் சந்திப்பில். என்றாலும், சித்ரா மனதிற்குள் இருந்த பயமும் பதற்றமும் சிறிதும் குறையவில்லை. ராஜா வைத்த தேர்வில், பதற்றத்தில் மூச்சு வாங்கி வாங்கி பாடியவருக்கு வகுப்பெடுத்து அனுப்பினார் ராஜா.
தேர்வில் பாஸ் ஆகிவிட்ட சித்ரா, அந்தப் படத்தில் பாடவும் செய்தார். அந்தப் படம்தான் தமிழில் 'பூவே பூச்சூடவா' என்று எடுக்கப்பட்டு, அதில் வரும் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா..' பாடல் மூலம் தமிழ் மக்களுக்கு சின்னக்குயில் சித்ராவாக அறிமுகமானார். என்றாலும் இளையராஜாவின் இசையில் சித்ரா பாடிய முதல் பாடல் `நீதானா அந்தக் குயில்' படத்தில் வரும் `பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து பைரவி படத்தில் 'பாடறியேன் படிப்பறியேன்..' பாடலுக்காக தேசிய விருது பெற்றவருக்கு, இந்த தகவல் கிடைத்த விதமே வித்தியாசமாக இருக்கும். யேசுதாஸுடன் வெளிநாட்டுக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தார் சித்ரா. அந்நேரத்தில் ரேடியோவில் சித்ராவிற்கு விருது கிடைத்த விஷயத்தைக் கேட்டு யேசுதாஸிடம் ஒருவர் சொல்ல, அதனை மேடையிலேயே அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளார். அப்போதும், தனக்குத்தான் விருது கிடைத்திருக்கிறதா என்கிற சந்தேகத்திலேயே இருந்திருக்கிறார் சித்ரா.
எஸ்.பி.பியுடன் இணைந்து ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள சித்ரா, அவருடன் இணைந்து பாடிய முதல் பாடல் 'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் வரும் 'காலகாலமாக வாழும்..' பாடல்தான். அதேபோல, பின்னணி பாடகி ஜானகி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். ஜானகியின் மாடுலேஷன் மற்றும் மூச்சு விடாமல் பாடுவதைப் பற்றிக் கூறி எப்போதும் பூரிப்பார் சித்ரா. சித்ரா, தமிழ் மொழி எழுதப் படிக்க மற்றும் சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டதில் வைரமுத்துவுக்கு அதிக பங்கு உண்டு என்றும் அவருக்கு நன்றி சொல்லி தமிழில் கடிதம் ஒன்றையும் எழுதிக் கொடுத்திருக்கிறார் சித்ரா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil