வல்லவரும் நல்லவரும் நீரே! நம்பிக்கையைத் தரப் பிறந்த தெய்வீக பாலகன்
மகிழ்ச்சியின் நாயகனாகிய இயேசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் என்ற சிற்றூரில் மாட்டுத்தொழுவத்தில், ஏழ்மையான சூழலில் பிறந்தார்.
சாதி, மத, வேற்றுமைகளை தாண்டி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. அப்படிப்பட்ட இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
Advertisment
இயேசு பிறந்த கதை
ரோமாபுரியின் ஆளுகைக்கு உட்பட்ட கலிலேயாவில் நாசரேத் என்ற ஊர் இருந்தது. அங்கே எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கன்னிப்பெண்ணிடம் காபிரியேல் தேவதூதரைக் கடவுள் அனுப்பினார். தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது; அந்தக் கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள்.
ஒருநாள் கடவுளின் தூதர் கபிரியேல், மரியாளின் முன் தோன்றினார். ‘அருள் நிறைந்த மரியாளே வாழ்க, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்…’ என்றார்.
Advertisment
Advertisements
இந்த திடீர் அறிவிப்பைக் கேட்டு கலங்கி நின்ற மரியாளை, ‘பயப்படாதே மரியாளே, நீர் உன்னதமானவர். ஆண்டவரின் பூரண அன்பையும் அருளையும் நீர் பெற்றுள்ளீர். திருமணத்துக்கு முன்பு ஆண்டவரின் கிருபையால் நீர் ஒரு அதிசயக் குழந்தையைப் பெற்றெடுப்பீர். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவரே ஆண்டவரின் குழந்தை. இந்த உலகின் ரட்சகர் அவரே. இந்த உலகை ஆளப்போகும் இறைமகன் அவர். அவரது ஆட்சிக்கு மட்டும் முடிவே இருக்காது’ என்றார்.
இதை கேட்ட மரியாள் ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் வாக்குப்படியே எல்லாம் நிகழட்டும்’ என்றார்.
திருமணத்துக்கு முன் மரியா கருவுற்றிருப்பது யோசேப்புக்குத் தெரிய வந்தது. யோசேப்பு, மரியாவை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல், அமைதியாய் இந்த ஒப்பந்ததிலிருந்து விலகிட நினைத்தார்.
பின்னொரு நாள், மன்னர் அகஸ்டஸ் சீசர் மக்கள் தொகையைக் கணக்கிட கட்டளையிட்டதும், தம் பெயரை பதிவு செய்ய யோசேப்பு, நிறைமாத கர்ப்பிணியான மரியாளோடு யூதேயாவிலுள்ள பெத்லகேம் ஊருக்குச் சென்றார். அந்நேரம் மரியாவுக்கு பேறுகால வலி வர, ஒரு மாட்டுத் தொழுவத்தில் உலகின் பாவங்களைப் போக்க இறைவன் அருளிய தெய்வமகனைப் பெற்றெடுத்தார்.
இயேசு பிறந்த போது ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது.
தெய்வக் குழந்தையான இயேசுவைக் கண்டு வணங்கிட இடையர்களே முதலில் சென்றனர். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது.
இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதற்கு அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் கடவுள் நம் முன் தோன்றினார்.
நம்மில் யாரும் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தரப் பிறந்த தெய்வீக பாலகனுக்கு நன்றி கூறுவோம். அவரது பிறப்பால் அவநம்பிக்கை அகன்று, நம்பிக்கையின் ஒளி தோன்றும் உன்னதத் தருணம் இது. இன, மத, தேச எல்லைகள் கடந்து இயேசு கிறிஸ்துவின் அருள் அனைவரது உள்ளத்தையும் நிறைக்கட்டும்.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“