புகை என்னும் பயங்கரம்!

முதல் இழுப்புதான் இருப்பதிலேயே ஆபத்தானது. பாஸ்பரஸ் உள்ளிட்ட நெருப்பு உருவாக்கும் வேதிப் பொருட்கள், சிகரெட்டின் முதல் இழுப்பினால் உள்ளே போகும் புகையிலுள்ள வேதிப் பொருட்கள் சேர்ந்து...

டி.ஐ.ரவீந்திரன்

6 வினாடிக்கு ஒருவர்: நிமிடத்துக்கு பத்து பேர்: இது என்ன? குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கையா? இல்லை. புகை பிடிப்பதால் மாண்டு போகிறவர்களின் எண்ணிக்கை. ஒரு சிகரெட்டில் 4000 வேதிப் பொருட்கள் இருக்கின்றனவாம். அதில் 43 வேதிப் பொருட்கள், புற்று நோயை உருவாக்குவதை, முழு நேரப் பணியாக செய்துகொண்டிருக்கும் நச்சுக் கிருமிகள்.
’எல்லாம் தெரியும்யா, நடக்கும்போது பார்த்துக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டே ஸ்டைலாகப் புகையை ஊதுபவரா நீங்கள்? அதை நீங்கள் பற்ற வைப்பதிலிருந்து புகையின் பயணத்தைப் பார்க்கலாமா?

புகையின் பயணம்

வாயில் சிகரெட், பீடி வைத்துக்கொண்டு தீக்குச்சி அல்லது லைட்டரில் பற்ற வைக்கிறீர்கள். முதல் இழுப்புதான் இருப்பதிலேயே ஆபத்தானது. பாஸ்பரஸ் உள்ளிட்ட நெருப்பு உருவாக்கும் வேதிப் பொருட்கள், சிகரெட்டின் முதல் இழுப்பினால் உள்ளே போகும் புகையிலுள்ள வேதிப் பொருட்கள் சேர்ந்து விவகாரமான ‘காக்டெயில்’ உருவாகி உள்ளே போகிறது. இது உட்செல்லும் மூக்கினுள் இருக்கும் சளிப் படலத்தைத் தீய்க்கிறது.
இதோடு வாயினுள் போன புகை முதலில் தொடர்பில் வரும் ஈறுகளின் மேல் லேசான கரும் படலத்தை ஒரு ‘கோட்’ வைக்கிறது. அடுத்து பற்கள் மட்டும் தப்ப முடியுமா? வெகு காலம் புகைப்பவரின் பற்கள், வெற்றிலைப் பழக்கம் இல்லாமலே பழுப்பாக மாறியிருப்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

பற்களை மட்டுமல்ல. புகை நாக்கையும் பாதிக்கிறது. நாக்கின் மேல் படரும் வேதிப் பொருட்களின் புகை, சுவை மொட்டுக்களை, மொட்டிலேயே கருக்கும். சுவையை உணரும் சுவை மொட்டுக்கள் தாக்கப்படும்போது, அதைத் தடுக்க உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். ஆனால் அது என்ன, டாஸ்மாக் பீரா, தடையில்லா சப்ளை ஆவதற்கு? சிறிது நேரத்திலேயே அது ஓய்ந்துவிடும். ‘நாக்கு வரட்சியா இருக்குப்பா’’ என்று தண்ணீர் வாங்கிக் குடிக்கத் தோன்றும். இதெல்லாம் போதாதென்று வாயினுள் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் கொல்லப்படும். அதன் காரணமாய் வாய் ‘மணக்கும்’. ஏலக்காய், ஹால்ஸ் வேண்டும்.
அடுத்து வருவது தொண்டை. இந்தப் பகுதி பல ரத்தக் குழாய்களால் சூழப்பட்டிருக்கும். மோசமான நச்சுப் புகை இந்தப் பகுதியின் மேல் பட்டவுடன், ’ஐயோ’ என்று இறுகும். அங்கே உள்ள நீர்மம் கரையும். தொண்டை வரளும். எரிச்சல், அரிப்பு, இருமல் ஆகியன அடுத்தடுத்து ஏற்படும். இது போன்றவை தொடர்ந்து இருந்தால், அங்குள்ள செல் கட்டமைப்பில் மாறுதல் வரும். பக்கவாட்டுச் சவ்வுகள் தொடர்ந்து இது போலத் தாக்குதலுக்கு உள்ளானால், வலுவிழந்து போகும். முடிவில் தொண்டைப் புற்று நோய்தான்.

இதை முடித்துக்கொண்டு சுவாசக் குழாய்க்கு வரும் புகை, வெளியிலிருந்து வரும் தேவையற்றதை விலகும் சில்லாக்குகளைப் பாதிக்கும். இப்படியே சென்று சுவாச அமைப்பின் இதயப் பகுதியான, நுரையீரலைத் தாக்கிப் பெரும் சேதத்தை விளைவிக்கும். நுரையீரலினுள் பயணமாகும் புகை, அங்குள்ள ரத்தக் குழாய்கள், சுவர்கள் ஆகியவற்றில் படிந்து அவற்றைக் கறுப்பாக்குவதுடன், அவற்றினுள் சென்று அடைத்துக்கொள்கிறது. அதன் பின் திணறல், மூச்சிரைப்பு, இழுப்பு, அயர்வு, சிலருக்கு மயக்கம்….

இது புகை உள்ளே செல்லும்போது நடப்பவை. போன புகை வெளியே வரும்போதும் மேற்குறிப்பிட்ட அனைத்தும் இன்னொரு முறை நடக்கிறது. இப்படியே போனால் என்ன நிகழும்?
முதல் வரிகளைப் படியுங்கள். அதுதான் நடக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close