Coimbatore Ashok Tender Coconut sherbet kadai : இளநீர் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கோடை காலத்தில் அந்த இளநீரை வாங்கி குடிக்கும் போது தான் எத்தனை ஆனந்தம். இளநீர் பாயாசம், இளநீர் ஜிகர்தண்டா, ஏன் இளநீர் தோசை என கோவை, பொள்ளாச்சி மக்கள் இளநீரில், தேங்காயில் நிறைய நிறைய சாப்பாட்டு வகைகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். திக்கு முக்காட வைக்கும் விருந்தினை தருவதில் கொங்கு மக்களுக்கு நிகர் இல்லை என்றும் சொல்லலாம். ஆனாலும் இந்த இளநீர் சர்பத் பற்றி தான் இப்போது ஒரே கேள்வி.
நன்னாரி சர்பத் கேள்விப்பட்டதுண்டு. நன்னாரியுடன் எலுமிச்சை கலந்த சர்பத்தும் கூட கிடைக்கின்றது. சில இடங்களில் ஸ்குவாஷில் நிறைய பழச்சாறுகள் வந்துவிட்டது. ஆனாலும் இந்த இளநீர் சர்பத் என்ற வார்த்தையை கேட்டவுடன் அங்கே சென்றால் என்ன ஆசையே உருவாகிவிட்டது.
கோவையின் மேற்கு ஆர்.எஸ்.புரம் , வி.சி.வி ரோட்டில் அமைந்திருக்கிறது ஸ்ரீ அங்கண்ணன் புலவு உணவகம். அந்த உணவகத்தை ஒட்டியவாறே அமைந்துள்ளது பொன். வலையப்பட்டி பொன்னமராவதி அசோக் சர்பத் கடை. இந்த கடையில் தான் அத்தனை விதங்களில் சர்பத் கிடைக்கின்றது. குங்குமப்பூ சர்பத், ஆப்பிள் சர்பத், நன்னாரி சர்பத், சாத்துக்குடி சர்பத், திராட்சை சர்பத் என பல்வேறு விதங்களில் சர்பத்கள் கிடைக்கிறது.
இந்த சர்பத்கள் எல்லாம் 300 மி.லி-க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனாலும் இந்த இளநீர் சபர்த்திற்கு தான் மக்கள் போட்டி போட்டு வந்து சுவைத்து செல்கின்றனர். ஒரு லிட்டர் தான் பாஸ். விலையோ ரூ. 100. ஒரு பெரிய பீயர் ஜார் நிறைய ஊற்றி தரும் இந்த சர்பத்தை முழு மூச்சாக குடிப்பவர்களை பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் இதன் ருசியோ ருசி தான். நிறைய குடிக்க முடியாது என்று நினைப்பவர்கள் தயங்காமல் ஒன் - பை டூவை ட்ரை செய்யலாம். இளநீர், நன்னாரி சிரப், துண்டுத்துண்டுகளாக வெட்டப்பட்ட தேங்காய் துண்டுகளுடன் கையில் வரும் ஜாரை நீங்கள் உடைக்காமல் குடித்து முடித்தால் போதும் உங்களின் கோவை ட்ரிப் வெற்றி கரமாக அமைந்துவிடும். இரவு 11 மணி வரை பரபரப்பாக இயங்கி வரும் இந்த கடையின் சர்பத்களை வாடிக்கையாளர்கள் ஸ்விக்கி அல்லது ஸொமாட்டோவிலும் வாங்கிக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.