ரகுமான், கோவை
கோவை சாய்பாபாகாலனி காலனி பகுதியில் உள்ள வாணி வித்யாலாயா மெட்ரிக் தனியார் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் வாக்கு பதிவு நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் மன்ற தேர்தல் முன்னோர் பயன்படுத்திய வாக்கு சீட்டுகள் முறையை பின்பற்றி நடத்தப்பட்டது.

இதில் வாக்குச்சாவடி அமைத்து மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் அவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக மாணவர் மன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர் தலைவர் துணை தலைவர் – விளையாட்டு கலை ஆகிய பிரிவுகளுக்கு அணித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது



பொது தேர்தல் போல நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவில் மாணவ – மாணவிகள் உங்கள் ஓட்டு உங்கள் கடமை என்பதை உணர்ந்து அமைதியாக நின்றபடி வாக்களித்தனர். மேலும் தேர்தல் முறைகளைப் பற்றி மாணவ, மாணவிகள் பள்ளியில் பயிலும் போதே அறிந்து கொள்வதற்காகவும் கல்வி மட்டுமல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இது போன்று தேர்தல் நடத்தி வருவதாக பள்ளியின் ஆசிரியர் ஆறுச்சாமி தகவல் தெரிவித்தார்.

குறிப்பாக தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் வேட்பாளர் பரிசீலனை இறுதி வேட்பாளர் மற்றும் பிரச்சாரம் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு மாணவ – மாணவிகள் கையில் மை வைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது பள்ளி குழந்தைகள் மத்தியில் வாக்களிப்பதின் அவசியம் என்ன என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil