சொந்த வீடு என்பது பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவு. இன்றைய விலைவாசியில் அது பலருக்கும் வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது. ஆனால் 3 லட்ச ரூபாயில் நீங்களும் சொந்த வீடு கட்டலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம், அதற்கு பயனற்ற கண்டெய்னர்கள் மட்டும் போதும், இந்த வீடுகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. 20 அடி நீளம், 8 அடி அகலம், 8.5 அடி உயரம் கொண்ட கண்டெய்னர்களில், கதவையும் ஜன்னல்களையும் பொருத்தியவுடன், அற்புதமான வெளிச்சம் கொண்ட வீடாக மாறுகின்றன.
மேக் வெல் கண்டைனர்ஸ் நிறுவனர் வான்மதி DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் Container வீடுகள் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
எல்லாருக்குமே சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. அந்த வீடு கல்லு, மண்ணு, மேஸ்திரி வச்சு கட்டணும் ஒரு பதிவு எல்லார் மனசுலயும் இருக்கு. அது இப்போ ரொம்பவே மாறிட்டு வருது.
தங்குறதுக்கு ஒரு இடம் வேணும், அது வசதியா இருக்கணும் நினைக்கிற அளவுக்கு இன்னைக்கு மக்களோட மனசு மாறியிருக்குனா அதுக்கு காரணம் Container வீடுகள்தான்.
நீங்க ரோட்டோரோம் பஞ்சர் கடையெல்லாம் பாத்துருப்பீங்க, அந்தமாதிரி இன்னொருத்தங்க இடத்துல ஒரு ஓரமா மரத்தடிக்கு கீழ ஒரு வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் ஓட, ஒரு வெல்டர், நான், என் கணவர் நாங்க மூணு பேரு மட்டும் தான் உட்காந்திருப்போம், வர வண்டிகளுக்கெல்லாம் வேலை பண்ணி கொடுப்போம். அப்புறம் நாங்களே ஒரு பாதி கண்டெய்னரை கட் பண்ணி, ஜன்னல் வச்சு அதுல உட்கார ஆரம்பிச்சோம். அப்புறம் லைட், ஃபேன் வச்சோம். அப்போதான் ஆஃபிஸ் இல்லன்னு சொல்றவங்களுக்கு இந்த கண்டெய்னர் போட்டுத் தரலான்னு யோசிக்க ஆரம்பிச்சோம்.
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள ஒரு ஆயிரம் கண்டெயினர் வந்தா அதுல 10, 15 கண்டெயினர்ல டேமேஜ் இருக்கும், அந்தமாதிரி கண்டெயினர்ஸ் வாங்கி, அதுல ஓட்டை இருந்தா அடைச்சிட்டு, துரு பிடிச்சிருந்தா அதை சுத்தம் பண்ணி, நிறைய வேலைகள் செய்ஞ்சு முதல்ல கண்டெய்னரை அழகுபடுத்திருவோம்.
அதுக்கு அப்புறம் வாடிக்கையாளருக்கு ஏத்தமாதிரி, பெட்ரூம், ஜன்னல், கிச்சன், பாத்ரூம் என வடிவமைச்சு கொடுக்கிறோம். இந்த 20 அடியில முழு எலெக்ட்ரிக்சிட்டி, மூணு விண்டோ, ஒரு மெயின் டோர், கிச்சன், பெட்ரூம், பாத்ரூம் செட்டப் எல்லாமே இருக்கும். இதுக்கு 3 லட்சம் ஆகும்.
கோவிட் அப்புறம் நிறைய ஐ.டி. ஊழியர்களுக்கு கண்டெய்னர்ல நிறைய காஃபி ஷாப்ஸ், ஹோட்டல்ஸ் செய்ஞ்சு கொடுத்துருக்கோம்.
சூழல் பாதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை, நிறைய ஃபார்மலிட்டிஸ் இதுக்கெல்லாம் ஒரு பெரிய மாற்றாக கண்டெயினர் வீடு இருக்குது. இப்போ கண்டெயினர் டச் இல்லாம வியாபாரம் இல்ல. வீடு, ஆஃபிஸ், ஹாஸ்பிடல், மண்டபம், பெரிய மால் இதெல்லாம் கண்டெயினர்ல வந்தா நமக்கு நல்லது. மக்களோட பட்ஜெட்டுக்கு இது ஏத்தமாதிரி இருக்கும் என்றார் வான்மதி.
ஆனால், இந்த கண்டெய்னர் வீடுகள்ல சில குறைகளும் இருக்குது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜியோ டாமின். ’மேற்கு நாடுகள்ள இந்த கண்டெய்னர் வீடுகள் ரொம்ப பிரபலம், ஆனா அங்க இருக்கிற வானிலையும், இங்கேயும் வேற. அதனால இந்திய அல்லது தமிழ்நாட்டு சூழலுக்கு தகுந்தமாதிரி இதோட சாதக, பாதகங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்குது’ என்கிறார் டாமின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.