“எங்களைத் தவிர வேறு யார் பார்த்துப்பாங்க?” – கொரோனா வார்டு தலைமை செவிலியர் சாந்தியின் தன்னம்பிக்கை பதிவு

Corona ward nurse Shanti Rani interview Tamil News கண்ணுக்குத் தெரியாத இந்த வைரசைத் தோற்கடிப்பதுதான் நம் முதன்மை நோக்கம்

Corona ward nurse Shanti Rani interview Tamil News
Corona ward nurse Shanti Rani interview Tamil News

Corona ward Cheif Nurse Shanti Rani interview Tamil News : இந்தப் பெருந்தொற்று காலகட்டத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை இரவும் பகலும் பாராமல் கவனித்துக்கொண்டிருப்பவர்கள் செவிலியர்கள். சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்திற்கு இடையில், பயந்து சோர்ந்து போயிருக்கும் மனதிற்குத் தன்னம்பிக்கை கொடுத்து, மரணத்திலிருந்து மீட்டெடுக்கும் ஒவ்வொரு செவிலியரும் பாராட்டுக்குரியவர்களே. அந்த வரிசையில் பல செவிலியர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்து, முன்னுதாரணமாக இருப்பவர் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் தலைமை செவிலியராகப் பணிபுரியும் சாந்தி ராணி.

பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலை யாரும் எதிர்பாராதது. இதனைக் கண்டு மக்கள் அனைவரும் அஞ்சும் வேளையில், நோயுற்றவர்களை முதல் முதலில் எதிர்கொண்டவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும்தான். அதிலும், 24 மணிநேரமும் நோயாளிகளுக்குத் தேவையானதைப் பணிவோடு செய்துகொடுத்து அவர்களுடனே பயணிப்பவர்கள் செவிலியர்கள். அதுவரை யாரும் கண்டிராத PPE உடை, தனிப்பட்ட வகையில் கையுறை, மாஸ்க் என ஏராளமான பாதுகாப்பு உடைகளை அணிந்து நோயாளிகளை கவனித்துக்கொண்டனர். தன்னோடு பணிபுரிந்த மற்ற செவிலியர்களுக்கு இதனைக் கண்டு அச்சம் தொற்றியிருந்தாலும், துணிவோடு முன் நின்றார் சாந்தி.

இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் சாந்தி, ஓர் சிங்கிள் மாம். தனி ஒரு பெண்ணாக இருந்து கொரோனாவை மட்டும் எதிர்கொள்ளாமல், தன் குழந்தைகள் மற்றும் தன்னுடைய அம்மாவையும் கவனித்துக்கொள்ளும் சாந்தி போன்ற பெண்களிடமிருந்து தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். தூங்குவதற்கு முன்பு, தன் குழந்தைகளை அரவணைத்துப் பேசுவது சாந்தியின் வழக்கம். ஆனால், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் பக்கத்தில் கூட அனுமதிப்பதில்லை.

‘தடுப்பூசியா?’ என்று அனைவரும் பயந்து ஒதுங்கிய நிலையில், முதல் ஆளாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பிறருக்கு ஊக்கத்தையும் கொடுத்தார் சாந்தி. மேலும், இந்த ஓராண்டுக் காலம் தான் கடந்து வந்த பாதைகளை நம்மோடு பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொண்டார்.

“எங்களுக்குள் பயம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், இதைக் கடந்து வந்துதான் ஆகவேண்டும் என்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டோம். தலைமை செவிலியராக இருந்துகொண்டு, என்னிடமே தன்னம்பிக்கை இல்லையென்றால், என்னைப் பின்பற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்களின் நிலை மிகவும் மோசமாகிவிடும். முதல் அலை, இரண்டாம் அலை, தடுப்பூசி என ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்களுக்குள் இருந்த பதற்றம் அதிகம். அவ்வப்போது சோர்வடைந்தாலும், நாங்கள் இல்லையென்றால் இவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணமே எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது.

அத்தனை உடைகளை அணிந்தபிறகு எங்களுக்கு மூச்சு முட்டும். வியர்க்கும். தலையில் தண்ணீர் கோர்த்துக்கொள்ளும். எல்லாவற்றையும் கடந்துதான் வந்தோம். அதேபோல குறைந்தது ஆறு மணிநேரம் அன்னம், தண்ணீர், சிறுநீர் கழிப்பது என எதுவும் எங்களால் செய்ய முடியாது. வேலை முடிந்து, எல்லாவற்றையும் அகற்றி, குளித்து முடித்து மற்றவர்களிடம் பேசவே ஒரு மணிநேரம் ஆகும். ஆரம்பத்தில் இவை கஷ்டமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது.

பாசிட்டிவ் எண்ணங்கள் மட்டுமே நம்மை நம் அழிவிலிருந்து காப்பாற்றும். எந்த ஒரு தடுப்பூசியும் மனிதனை அழிப்பதற்கு அல்ல. ஏராளமான சோதனைகளுக்கு பிறகுதான் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதனால், தடுப்பூசியைக் கண்டு யாரும் பயப்படவேண்டாம். நிச்சயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். தடுப்பூசி எடுத்துக்கொண்டால் காய்ச்சல் போன்றவை வந்தாலும் கண்டிப்பாக மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

கொசுவை அழிக்க ஆரம்பித்தோம், அதனால் டெங்கு காய்ச்சல் ஒழிந்தது. சுத்தமான சுடுநீர் குடிக்க ஆரம்பித்தோம், அதனால் காலரா காய்ச்சல் ஒழிந்தது. அதேபோல, மாஸ்க் மற்றும் சமூக இடைவெளிதான் கொரோனாவை ஒழிக்கும் என்பதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்” என்கிறார் அக்கறையோடு.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தினந்தோறும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் இவரைப்போன்ற மற்ற செவிலியர்களுக்கு சாந்தி கொடுக்கும் அட்வைஸ், “ஒரு நோயாளியைப் பார்ப்பதற்கு முன்பு நாம் மனதளவிலும், உடலளவிலும் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கிறோம். அதனால், நாம் எந்தக் காரணத்தைக்கொண்டும் மனம் தளர்ந்துவிடக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரசைத் தோற்கடிப்பதுதான் நம் முதன்மை நோக்கம்” என்கிறார் தன்னம்பிக்கை நிறைந்த புன்னகையோடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona ward nurse shanti rani interview tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com