Advertisment

கொரோனா ஒழிப்பில் ‘சித்தா’வின் வெற்றி, உலகமே நம்மை திரும்பிப் பார்க்கும்: மருத்துவர் வேலாயுதம் நேர்காணல்

சித்த மருத்துவர்கள் மட்டும் அல்லாமல் அலோபதி மருத்துவர்கள் ஏராளமானோர் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் கபசுரக் குடிநீர் குடித்து இருக்கிறார்கள். அவர்களும் இந்த மருந்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அவர்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காகவும் இந்த மருந்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஒரு பார்மா லாபியில் இருக்கிறார்கள் இல்லையா.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus treatment, siddha medicine for covid-19, சித்த மருத்துவர் வேலாயுதம் நேர்காணல், kabasura kudineer for coronavirus, கபசுரக் குடிநீர், கொரோனா வைரஸுகு சித்த மருத்துவ சிகிச்சை, siddha dr velayutham interview, siddha

coronavirus treatment, siddha medicine for covid-19, சித்த மருத்துவர் வேலாயுதம் நேர்காணல், kabasura kudineer for coronavirus, கபசுரக் குடிநீர், கொரோனா வைரஸுகு சித்த மருத்துவ சிகிச்சை, siddha dr velayutham interview, siddha

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தலைகாட்டத் தொடங்கிய தொடக்கத்திலேயே சித்த மருத்துவத்தை சிகிச்சையாக பரிந்துரைத்தவர். சித்த மருத்துவ முறையால் கொரோனாவுக்கு தீர்வு காணமுடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவபவர் மருத்துவர் வேலாயுதம். பி.எஸ்.எம்.எச்.எஸ்., எம்.டி படித்தவர். சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். திருவான்மியூரில் இன்கார்ப்ஸ் ஒரு மருந்து நிறுவனத்தில் துறை தலைவராக இருந்தவர். தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியவர். சித்த மருத்துவம் உலகத்துக்கே பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மகிழ்நலமனை நிறுவனத்தையும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

Advertisment

இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து அறிவியல் பூர்வமாக சித்த மருத்துவத்தின் பெருமையை முழங்கி வரும் மருத்துவர் வேலாயுதம் உடன் ஒரு நேர்காணல்.

கொரோனா வைரசை சித்த மருத்துவ துறையில் எப்படி அனுகுகிறார்கள்?

சித்த மருத்துவத்தில் இந்த நுண்ணுயிரிகளைப் பற்றி குறிப்பு அதிக அளவில் இல்லை. ஆனால், வந்தைகள் என்று ஒரு குறிப்பு உள்ளது. வரும்முன் காத்தல், வந்த பின் நீக்கல் ஆகிய இரண்டு முறைகளில் வந்தைகளை நீக்குவதில் அணுகி இருக்கிறார்கள். வரும்முன் காத்தலில் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் கை,கால்களை கழுவிக்கொண்டும், மேலும் இறப்புகளுக்கோ, மருத்துவமனைகளுக்கோ சென்று வரும் போது வீட்டின் வாசலில் வைக்கபட்டுள்ள உப்பு நீரால் கை,கால்களை சுத்தம் செய்துக்கொண்டு வீட்டினுள் வரும் போது வெளியில் இருந்து தொற்றிய தொற்றுகள் நீங்கி விடும். இதனை நாம் தோஷம் நீக்குதல் என்று கூறுவோம். தோஷம் என்பது நோய் ஆகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் முத்தோடம் என்று கூறுவார்கள். இந்த முத்தோடமானது தன்னிலையில் இருந்து மாற்றம் அடையும்போது அது நோய் நிலையாக மாற்றமடைகிறது. அதாவது வாதம் 1சதவீதம், பித்தம் 1/2சதவீதம் மற்றும் கபம் கால் சதவீதமும் இருக்க வேண்டும். கிருமிகளானது இதில் மாற்றத்தினை ஏற்ப்படுத்துகின்றன. அதனால்தான், வெளிப்பிறயோகத்தில் தூய்மை செய்து கொள்கிறோம்.

இதுபோல பெண்கள் மாதவிடாய் காலத்தில் மஞ்சள் தேய்த்து குளித்தல், மேலும் ஆண்களுக்கு நலங்குமாவு என்று தயாரிக்கும் முறை உள்ளது. வல்லாரைக்கீரை, சேனைக்கிழங்கு, சந்தனம் போன்ற பொருள்கள் அனைத்துமே பொதுவாக கிருமிகளை நீக்கும் தன்மை உடையது. அந்த காலக்கட்டத்தில் கஸ்தூரி மஞ்சள், சந்தனம் ஆகியவைகளை தான் நாம் குளியல் பொருளாக பயன்படுத்தி வந்தோம். நமது உடலில் கிருமிகள் பெருகுவதற்கு முக்கியாமான காரணி நமது உடலின் தட்பவெப்பநிலை தான். தட்ப வெப்ப நிலையானது ரத்தத்தில் உள்ள ph அளவை பொறுத்து மாறுபடும். உடலின் தட்பவெப்ப நிலையானது அதிகமாக இருந்தால் உடலில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைவாகவே இருக்கும்.

இதே முறையில்தான் கொரோனா நோயை அணுகுகிறோம். இந்த கொரோனா தொற்றினால் ஏற்படக்கூடிய குறிகுணங்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ள பொருட்களை நாம் முன்கூட்டியே உட்கொள்வதன் மூலம் ஒரு எதிர்ப்பு ஆற்றலை பெற்றுக்கொள்ள முடியும். இதன் காரணமாகவே காரமான, கசப்பான உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் இனிப்பு, புளிப்பு போன்றவை உடலுக்கு ஆற்றலை கொடுத்தாலும் அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

இதுபோன்ற தொற்று காலங்களில் காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். திருவிழா காலங்களில் மக்கள் கூட்டமாக கூடும்பொழுது பானகம் என்ற ஒன்று வழங்கப்படும். பானகம் என்பது இஞ்சி, எலுமிச்சை, பனவெல்லம் ஆகிய மூன்றையும் கொதிக்கவைத்து பருகுவது ஆகும். சில இடங்களில் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக புளி சேர்த்துக்கொள்வர். இது போன்றுதான் தடுப்பு மருந்துகளை அணுகுகின்றோம். ஆனால், இது போதாது என்றும், எல்லோராலும் இதுபோல கடைபிடிக்க முடியாது என்பதினால் நாம் ஒரு formulated மருந்து ஒன்று தயாரிக்கலாம் என்று ஆய்வு மேற்க்கொள்ளும் போது நாம் இதற்கு முன்பே அறிந்த கபசுரம் ஏற்படுத்துகிற குறி குணங்களும் கொரோனாவால் ஏற்படுகின்ற குறி குணங்களும் ஏறத்தாழ ஒன்றாக இருந்ததினால் கபசுரத்திற்கு தீர்வான கபசுரக்குடிநீர் என்ற formulation அந்த காலக்கட்டத்திலேயே சித்தர்கள் கூறிய formulation. எனவே, அந்த கபசுரக் குடிநீரை நாம் பரிந்துரைக்கலாம் என்று முடிவெடுத்து நாம் அறிவித்தோம். இவை சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

நான் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் 2007-2012 வரையிலும் பணிபுரிந்தேன். அந்த காலக்கட்டத்தில் 2009 ஆம் ஆண்டு H1N1 என்ற பன்றிக்காய்ச்சல் மற்றும் சார்ஸ் நோய் பரவியது. ஆனால், அது கோரோனாவை விட வீரியம் குறைந்தே கானப்பட்டது. ஆனால், அந்த பன்றி காய்ச்சலில் உள்ள குறிகுணங்கள் இதனை போன்றதே. தும்மல், இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு போன்ற ஒரே குறிகுணங்களே. அப்பொழுதுதான் 2009 ஆம் ஆண்டு முதல்முதலாக கபசுரக் குடிநீரை பயன்படுத்தலாம் என அறிமுகம் செய்தோம். தினமனி நாளிதழ் அந்த செய்தியினை வெளியிட்டது. கபசுரக் குடிநீர், அமுக்கனா சூரணம், பிரமானந்த பைரவம் ஆகிய மூன்று மருந்துகளும் அப்பொழுது வழங்கப்பட்டது. அதன் காரணமாக நோயானது பெரும் அளவில் பரவாமல் தடுத்து பயன் அளித்தது. அதன் காரணமாகவே அதை முன்னணி தடுப்பு மருந்தாக பயன்படுத்த வேண்டும் என பிப்ரவரியில் முன்னனி தொலைக்காட்சி ஊடகங்களிலே கூறினேன்.

இந்த கபசுரக் குடிநீரை பயன்படுத்த இந்திய சித்த மருத்துவர்கள் சங்கம் சார்பில் அராசாங்கத்திடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பரவலாக மக்கள் கூடும் இடங்களில் நாங்களே கொடுக்க ஆரம்பித்தோம். அரசு அந்த மனுவினை ஏற்று அரசாணையும் பிறப்பித்தார்கள். அதற்கு முன்பு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கபசுரக் குடிநீரை பயன்படுத்தலாம் என அரசுக்கு பரிந்துரை செய்தது. நாங்கள் பிப்ரவரி மாதம் கூறினோம். ஆயுஷ் அமைச்சகம் மார்ச் மாதத்தில் பயன்படுத்த பரிந்துரைத்தது. அரசானது இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டது.

கபசுரக் குடிநீர் மட்டும் கொடுத்தால் போதாது என்று அமுக்கனா சூரணம், நெல்லிக்காய் லேகியம் இவற்றையும் சேர்ந்து வழங்கப்பட்டது. நெல்லிக்கனியில் வைட்டமின் - c இருக்கிறது. மேலும் அமுக்குனா சூரணம் மற்றும் நெல்லிக்கனியை ஆராய்ச்சி செய்யும் போது HIVக்கு பயனுள்ளதாக இருந்தது. எய்ட்ஸ் ஒரு வகை நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கின்ற வைரஸ் தான். எனவே இந்த கபசுரக் குடிநீர்,அமுக்கனா சூரணம், நெல்லிக்காய் லேகியம் போன்றவை சேர்த்து இந்த ஆரோக்ய திட்டத்தில் அரசாணை வெளிவந்தது.

இந்த மருந்தானது முறையாக தயாரிக்கப்பட்டு,சரியான நிறுவனங்களின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிடமோ,மருத்துவர்களாளோ மக்களிடம் சென்று சேரவில்லை. தமிழகத்தில் மொத்தமாக ஒரு 700 ஆரம்ப சுகாதார நிலையங்ளில் சித்த மருத்துவ பிரிவு இருக்கிறது. அங்குள்ள 700 மருத்துவர்களை வைத்துக்கொண்டு எவ்வளவு மக்களிடம் கொடுத்திருக்க முடியும். ஒரு 7 லட்சம் பேருக்கு கொடுத்து இருந்தால் அதிகம். மேலும், அரசாணையானது இரண்டு மாதங்கள் கடந்து ஏப்ரல் மாதத்தில் தான் வந்தது. ஆங்காங்கே மக்களெல்லாம் கபசுரக் குடிநீருக்காக நிறைய மருந்து நிறுவனங்களிடமும், வியாபாரிகளிடமும் அலை மோதுகிறார்கள். ஆனால், மக்களிடம் மருந்து தயாரிப்பு விளக்கத்துடன் சென்று சேரவில்லை.

மக்களிடம் தயாரிப்பு விளக்கத்துடன் கூறினால் அவர்களால் அதனை தயாரிக்க முடியும?

தயாரிக்கலாம். ஆனால், அதில் ஒரு 15 பொருட்கள் கலந்துள்ளன. அந்த 15 பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்பட்டதா என தர நிர்னயம் பார்ப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டது. பெரும்பாலானோர் அவர்களிடம் கிடைக்கும் 4 அல்லது 5 மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். மாவட்டம் தோறும் சித்த மருத்துவ அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், அந்த தரக்கட்டுப்பாட்டில் சரியாக பணி செய்ததாக தெரியவில்லை. அதன் காரணமாகவே மருந்து ஒரு முறையற்றதாகவும், முழுமையாக மக்களிடம் சென்று சேராததற்கும் காரணம். மேலும், இந்த கபசுரக் குடிநீர் அரசாணை அளவில் வெற்றி பெற்றதே தவிர, நடைமுறையில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை எனலாம். அதனை சித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உட்கொண்டவர்கள் எல்லாம் சரியாக குணமடைந்துவிட்டார்கள்.

இது பலரிடம் சென்று அடையாததினால் தான் நான் தமிழ்நாடு அரசுக்கு ஒரு ஆலோசனை கூறினேன். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சாப்பிடுவதற்கு முன்பாக எல்லா இடங்களிலும் ஒரு சித்த மருத்துவ அலுவலர்களை நியமித்து மருத்துவர்களின் கண்கானிப்பில் கபசுரக் குடிநீர் தயாரித்து சரியான முறையில் அனைவரிடமும் கொடுக்கவேண்டும் என்று ஒரு திட்டம் கூறினேன். ஆனால், அந்த திட்டம் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப் படவில்லை. இந்த திட்டத்தையெல்லாம் முன்பே நடைமுறைபடுத்தி இருந்தால் இப்பொழுது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடி இருக்காது என ஒரு நம்பிக்கை.

நீங்கள் இந்த வைரஸை பழைய மரபான முறைப்படி மட்டுமே அணுகுகிறீர்களா?

மரபான முறைப்படி அணுகுகிறோம். அது மட்டும் இல்லாமல் அறிவியல் முறைப்படியும் இந்த வைரஸை வென்ற வரலாறு சித்த மருத்துவத்திற்கு உள்ளது. ஏனெனில், மஞ்சள் காமாலைக்கு இது வரை கீழாநெல்லி தான் மருந்து. அதுவும் ஒருவகை வைரஸ் தான். அதனை அறிவியல்பூர்வமாக எஸ்.பி.தியாகராஜன் ஆய்வு செய்து கிழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் என உறுதிப்படுத்தினார். அதன் பிறகு HIVக்கு நெல்லிக்கனியில் அமுக்கனா சூரணத்தைக் கொடுத்து HIVக்கு எதிராக CD-4, CD-8 என்ற எதிர்ப்பு செல்களை கூட்டுகிறது என பேராசிரியர் தெய்வநாயகம் தாம்பரம் TB மருத்துவமனையில் நிரூபித்தார். அதனை டர்பனில் நடந்த AIIMS மாநாட்டில் அறிவித்தார். அந்த செய்தியானது தலைப்பு செய்தியாக தினமணியில் வந்து இருக்கிறது.

இந்த மருந்தினை உணவு உட்கொள்வதற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டுமா ? அல்லது உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இந்த மருந்தினை உணவுற்கு முன்பு சாப்பிட்டால் நல்லது. ஆனால், உணவு உட்கொண்ட பிறகும் சாப்பிடலாம். எந்த கட்டாயமும் இல்லை.

எந்த நேரத்திலும் சாப்பிடலாமா?

அதாவது சித்த மருத்துவ மருந்துகளை காலை மாற்றும் மாலை வேலைகளில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதைத்தான் சித்த மருத்துவத்தில் அந்தி, சந்தி என்பார்கள்.

ஆயுர்வேத மருத்துவர்களோ,சித்த மருத்துவர்களோ இந்த மருந்தினை எந்த அளவிற்கு புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்?

என்னுடைய அனுபவத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள்,சித்த மருத்துவர்கள் மட்டும் அல்லாமல் அலோபதி மருத்துவர்கள் ஏராளமானோர் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் கபசுரக் குடிநீர் குடித்து இருக்கிறார்கள். அவர்களும் இந்த மருந்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்காகவும் அவர்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காகவும் இந்த மருந்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஒரு பார்மா லாபியில் இருக்கிறார்கள் இல்லையா. நவீன மருத்துவமே பார்மா இயக்கத்தின்படிதானே நடக்கிறது. அதனால், அவர்கள் சூழல் காரணமாக இதை பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தவில்லையே தவிர, அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டார்கள். ஏற்றுக்கொண்டதன் காரணமாகதான், கே.எம்.சி.யில், ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய அலோபதி மருத்துவமனைகளில் கபசுர குடிநீர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் இதை தவிர்க்க முடியவில்லை. சில நவீன மருத்துவர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். சில பேர் அதை மறுக்கிறார்கள்.

கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சையை உலக அளவில் நிரூபிப்பதற்கான முயற்சிகள் ஏதேனும் நடந்துகொண்டிருக்கிறதா?

ஆம், நடந்துகொண்டிருக்கிறது. செண்ட்ரல் கவுன்சில் ஆஃப் ரிசர்ச் ஃபார் சித்தா என்று அரும்பாக்கத்தில் ஒரு நிறுவனம் இருக்கிறது. அது நவீன மருத்துவத்துக்கு ஐசிஎம்ஆர் இருப்பதைப் போல, அரும்பாக்கத்தில் சித்த மருத்துவத்துக்கு சிசிஆர்எஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் கபசுரக் குடிநீரில் இருக்கிற மூலக்கூறுகளை எல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகு, நம்முடைய எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டு இடங்களிலும் இது தொடர்பான ஆய்வுகள் திவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. அது விரைவில் ஒரு அறிவியல் பூர்வமான நல்ல ஆதாரமாக வெளிவரும்.

கொரோனா சிகிச்சைக்கான மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளது என்று நிரூபிக்கப்படும்போது எந்த மாதிரியான பலன், புகழ் கிடைக்கும்?

உலகம் பூராவும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய தொற்று நோய்க்கு தமிழ்நாட்டில் இருந்து நம்முடைய பழைய மரபு வைத்தியமான சித்த மருத்துவத்தில் இருந்து நம்ம ஊரில் விளைந்த மூலிகையில் இருந்து ஒரு தீர்வு கிடைக்கிறது என்றால் சித்த மருத்துவர்களுக்கு மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த எல்லாருக்கும் பெருமை கிடைக்கும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதுதான் நம்முடைய பண்பாடு. நாம் சீனாக்காரனுக்கும் கொடுக்கலாம் இத்தாலிக்காரனுக்கும் கொடுக்கலாம். இன்றுவரை நம்முடைய மூலிகைகளின் மூலப்பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. அதனால், நம்முடைய மருந்து ஒரு தீர்வு என்று அறிவிக்கப்படும்போது தமிழ்நாடு உலகத்துக்கே ஒரு பெரிய தீர்வை அளிக்கும். இன்று மருத்துவ உலகில் இந்தியாதான் உலகத்துக்கே முன்மாதிரி என்று சொல்கிறார்கள். இந்தியாவுக்கே முன்மாதிரி தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கே முன்மாதிரி சித்த மருத்துவம் என்ற அளவுக்கு பெயர் வரும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவ மருந்து தீர்வு என்பதற்கான நிரூபனங்களை நீங்கள் எப்படி ஆவணப்படுத்தி வைத்துள்ளீர்கள்?

ஆமாம், ஆவணங்கள் இருக்கிறது. தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் சேர்ந்து சில பேருக்கு சித்த மருத்துவ மருந்து கொடுத்ததில் சில பேருக்கும் கோவிட் பாஸிட்டிவ் எல்லாம் நெகட்டிவ் ஆன முடிவுகள் எல்லாம் இருக்கிறது. இபோதுதான் அந்த நடைமுறை போய்க்கொண்டிருக்கிறது. அதை பகிரங்கமாக அறிவித்து அறிக்கையாக வெளியிடுவதற்கு சிறிது காலம் ஆகும். நூற்றுக்கணக்கானோர் சித்த மருத்துவ மருந்து கொடுத்து கோவிட் பாஸிட்டிவ்வில் இருந்து நெகட்டிவ் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நடந்துகொண்டிருக்கிற ஒரு ஆய்வு. இது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக விரைவில் உறுதியாக வெளிவரும். அதனை ஆவணப்படுத்தும் பணிகளும் நடந்துகொண்டிருக்கிறது. கிளினிக்கல் ஆய்வும் நடந்துகொண்டிருக்கிறது. பார்மாகாலஜிக்கல் ஆய்வும் நடந்துகொண்டிருக்கிறது. சித்த மருத்துவ மருந்தால் நூற்றுக்கணக்கானோர் தீர்வடைந்துகொண்டிருக்கின்றனர்.

அலோபதி மருத்துவர்கள் இந்த கொரோனா வைரஸை எப்படி அணுகுகிறார்கள் என்று ஒரு சித்த மருத்துவராக உங்களுடைய பார்வையில் இருந்து கூற முடியுமா?

இதுவரை நவீன மருத்துவத்தில் எந்த வைரஸுக்கும் தீர்வு இல்லை. உதாரணத்துக்கு அம்மைக்கு மருந்து கிடையாது. அக்கிக்கு மருந்து கிடையாது. காமாலைக்கு மருந்து கிடையாது. எச்.ஐ.வி, கொரோனா இந்த இரண்டுக்கும் ரொம்ப காஸ்ட்லியான ஆண்டி வைரல் மருந்து இருக்கிறது. இப்போது ஒரு மாத்திரை அறிவித்திருக்கிறார்கள். ஒரு மாத்திரை 120 ரூபாய். ஒருவருக்கு முழுமையாக மருந்து வாங்கினால் 3000, 4000 ரூபாய் ஆகும். விலை என்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வைரஸுக்கு எதிரான மருந்தில் தோல்வியடைகிறார்கள். அதனால்தான், அவர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனைக்கு வந்துள்ளார்கள்.

நாம் நோய் எதிர்ப்பு சக்தி என்று சொல்ல ஆரம்பித்ததும் அவர்கள் விட்டமின் சி, விட்டமின் ஜின்க் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய அணுகுமுறை என்பது ஆண்ட்டி பாக்டிரியல், ஆண்டி வைரல், ஆண்ட்டி மைக்ரோபியல் என்பதுதான் அவர்களுடைய அணுகுமுறை. ஆனால், சித்தாவுடைய அணுகுமுறை எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டுகிற அணுகுமுறை. இப்போது சித்த மருத்துவத்தின் வழிக்கு நவீன மருத்துவம் வந்துவிட்டது என்பதைத்தான் அவர்கள் விட்டமின் சி, விட்டமின் ஜின்க் என்று சொல்வது காட்டுகிறது. அவர்களும் கிருமி எதுவாக வேண்டுமானல் இருக்கட்டும் எதிர்ப்பு சக்தியைக் கூட்டிக்கொண்டால், இந்த நோய்க் கிருமி செயலிழந்துவிடும். பெருகாமல் நின்றுவிடும், பிரச்னையை உண்டு பண்ணாது என்ற நிலைக்கு வந்துள்ளார்கள்.

இப்போது வருபவர்களைப் பாருங்கள் கோவிட் பாஸிட்டிவ் இருப்பவர்கள் அறிகுறி இல்லை. 1 சதவீதத்துக்கும் குறைவுதான் இறப்பு சதவீதம். அதுவும் வேறு நோய்கள் உள்ளவர்களுக்கு மேல் தொற்றாக வந்ததுதான் இது.

முதிவர்கள் தலைவர்கள் இறப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் கட்டுப்படாத நீரிழிவு நோய், கட்டுப்படாத சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு இது போன்ற சிக்கலான நோய்களுக்கு ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை எடுத்துக்கொண்டு அதில் உடலின் எதிர்ப்பாற்றலை இழந்தவர்கள்தான் இப்போது இறக்கிறார்கள். அதனால் தான் நாம் எதிர்ப்பாற்றலைக் கூட்ட வேண்டும் என்கிறோம். இன்றைக்கு கோவிட் வந்திருக்கிறது நாளைக்கு இதே போல வேறொன்று வரும். எதுவந்தாலும் உடலை உறமாக்கு. அந்த கருத்தைதான் நாம் immuno booster, immuno modulator என்று சொல்கிறோம். நவீன மருத்துவம் ஆண்ட்டி பயாட்டிக் என்ற பார்வையில் இருந்து மாறி immunology பக்கம் வந்தது என்பதே மிகப்பெரிய ஒரு மாற்றம். இதில் சித்த மருத்துவம்தான் நவீன மருத்துவத்தின் பார்வையையே மாற்றி இருக்கிறது.

கொரோனாவுக்கு சிகிச்சையாக சித்த மருத்துவ மருந்து கொடுப்பது என்பது இந்தியாவில், தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதே போல, இந்த நடைமுறை உலக அளவில் எந்த அளவுக்கு சென்று சேர்ந்து இருக்கிறது?

இந்த சூழ்நிலையில் உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர், லண்டன் இங்கெல்லாம் எனக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு எல்லாம் நம்முடைய மருந்து இங்கிருந்து சென்றிருக்கிறது. லண்டனில் வேலை செய்கிற ஒரு மருத்துவர். நம் தமிழ்நாட்டைச் சேந்தவர். லண்டனில் கோவிட் பாஸிட்டிவ் மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவர் கொரோனா பாஸிட்டிவ் ஆகிறார். அவர் தானாகவே தனிமைப் படுத்திக்கொள்கிறார். நம்முடைய மருந்தையும் அவர் எடுத்த்கொள்கிறார். நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் எல்லாம் குடித்து 21 நாட்களில் குணமடைந்து மீண்டும் பணிக்கு செல்கிறார். இது என்னுடைய சொந்த அனுபவம். இது போல, சிங்கப்பூர், மலேசியாவில் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் முதிர்ச்சியில்லாமல் ஒவ்வொரு வழக்கு ஆய்வாக நாம் வெளிப்படுத்த முடியாது. அப்படி செய்தால் மலினமான பப்ளிசிட்டியாகிவிடும்.

அதனால், நாங்கள் மேலும் மேலும் உறுதியாகிற வரை சொல்லவில்லை. ஆனால், மருத்துவத்தில் அவர்கள் குணமடைந்துவிட்டார்கள் என்பது சொல்ல வேண்டிய செய்தி. அவர்கள் யார் என்பது போன்ற விவரங்களை நாம் பின்னர் சொல்வோம். அதனால், உலகமெல்லாம் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நிலவேம்பு குடிநீரும் கபசுர குடிநீரும் போய் சேர்ந்திருக்கிறது. அவர்கள் வழியாக அந்தந்த நாட்டுக்காரர்களும் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் தமிழ் மருந்து போய் சேர்ந்திருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அமெரிக்கர்கள், இத்தாலியர்களுக்கு எல்லாம் மருந்து கொடுத்துள்ளார்கள். மலேசியாவில் நம்ம தமிழர்கள் சீனாக்காரர்களுக்கும் மருந்து கொடுத்திருக்கிறார்கள். மலாய்காரர்களும் நம்ம ஆட்களிடம் மருந்து வாங்கி குடித்திருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மௌனப் புரட்சியாக நடந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய்க்கும் சித்த மருத்துவத்தின் மூலம் மட்டுமே சிகிச்சை செய்யலாமா? அல்லது அலோபதியுடன் சேர்ந்தும் சிகிச்சை அளிக்கலாமா?

கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கலாம். ஆனால், ஒரு சிலருக்கு இந்த மூச்சுத் திணறல் பிரச்னை வருகிறது. அப்போது நாம் அவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும். ஆக்ஸிஜன் ஒரு ஆங்கில மருந்து கிடையாது அதை யார் வேண்டுமானலும் கொடுக்கலாம். அது ஒரு தொழில்நுட்பம்தான். ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர் தேவைப்பட்டால் ஒருங்கிணைந்து செயல்படுவதில் மாற்றுக் கருத்து இல்லை. தேவையான இடங்களில் நவீன மருத்துவத்தை இணைத்துக்கொள்ளலாம். நமக்கு மக்கள் நலன்தானே முக்கியம்.

சித்த மருத்துவத்தில் 10 சதவீத பலவீனம் இருக்கிறது. ஒரு எமர்ஜென்ஸி நோயாளி வருகிறார் என்றால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், அந்த காலத்தில் இருந்தது. நாக்கில் லிங்கக்கட்டு என்ற ஒரு மருந்தை உழைவு செய்து நாக்கில் தடவினால் மூச்சையானவன் எழுந்துகொள்வான் என்று எல்லாம் பாட்டில் இருக்கிறது. மூக்கில் பொடி மாதிரி விட்டால் மயங்கியவர்கள் எழுந்துகொள்வார்கள் என்று இருக்கிறது. அதை ஆய்வு பண்ண நமக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த பலவீனத்தை நாம் பரிசோதிக்கிற நிலையில் இல்லை. அதனால், சித்த மருத்துவத்தில் உள்ள 10 சதவீத பலவீனத்தை ஈடு செய்ய நவீன மருத்துவத்தின் கரங்களை கோர்த்துக்கொள்வதில் தவறில்லை.

அலோபதி மருந்தையும் சித்த மருந்தையும் சேர்த்து கொடுக்கும்போது ஏதேனும் சிக்கல் வருமா?

அப்படி சிக்கல் எதுவும் வராது. ஏனென்றால் சித்த மருத்துவ மருந்துகளின் மூலப் பொருட்கள் எல்லாமே இயற்கைப் பொருட்கள். அதனால், நீங்கள் உணவு மாதிரி சாப்பிடலாம். சாப்பார், ரசம், கீரை, முருங்கை என்று நீங்கள் சாப்பிடுவதெல்லாம் சித்த மருந்துதான். அந்த உணவு சாப்பிடும்போது நீங்கள் ஆங்கில மருந்தை எடுத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? அதனால், இதில் எந்த முரண்பாடும் சிக்கலும் வராது. அதனால், நாங்கள் உறுதியாக ஆயிரக்கணக்காணோருக்கு பரீட்சித்து பார்த்துள்ளோம். லட்சக் கணக்கான மக்கள் இரண்டு மருந்தையும் சேர்த்தே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அதனால், சித்த மருத்துவமும் அலோபதியும் இணைந்தே செயல்படலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coronavirus Siddha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment