இந்தியர்களுக்கு Visa on Arrival தரும் நாடுகள் ஒரு சிறப்புப் பார்வை: ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு விடுமுறைக்கு செல்ல அனைவருக்கும் விருப்பம் இருக்கும். வெறுமனே தங்களின் உடமைகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமானத்தில் பயணித்துவிடலாம் என்று எப்போதுமே நினைக்க இயலாது. அனைத்திலும் மிகவும் இக்கட்டான, ஆனால் சந்தித்தே ஆகவேண்டிய ஒரு நிர்பந்தம் என்பது நமக்கான விசாவினை அந்த நாடு நமக்குத் தருவது.
இந்தியர்களுக்கு Visa on Arrival மூலம் விசா தரும் நாடுகள் பட்டியல் :
பல நேர காத்திருப்புகள் மற்றும் விசாரணைகளுக்கு பிறகே நமக்கு விசா வழங்குவார்கள் அல்லது நிராகரிப்பார்கள். ஆனால் சில நாடுகள், சுற்றுலாவாசிகள் அவர்களின் நாடுகளுக்கு சென்ற பின்னர் Visa on Arrival என்ற நடவடிக்கைகளின் படி விசாக்கள் தருவார்கள். இது போன்ற பயணங்களில் உங்களின் நேரம் மிச்சமாகும். கீழே இருக்கும் இந்த நாடுகள் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் என்ற பெயரில் விசாக்களை வழங்கி வருகிறது. 59 நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகள் பற்றி ஒரு பார்வை.
மாலத்தீவுகள்
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மாலத்தீவுகளின் தலைநகர் மேலிற்கு செல்ல வெறும் இரண்டு மணி நேரங்கள் தான் ஆகும். ஆனால் அங்கு சென்றவுடன் இந்தியர்களுக்கு ஒரு மாதத்திற்கான விசாவினை வழங்குவார்கள். நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான நேரங்களில் நீங்கள் அந்த தீவுக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
மொரிசீயஸ்
ஆங்கிலத்திற்கு அடுத்து ப்ரெஞ்ச் மொழி பேசும் மனிதர்கள் வாழும் மொரிசீயஸ் தீவுகளை பார்வையிட வரும் இந்தியர்களுக்கு, 90 நாட்களுக்கான விசா பெர்மிட்டினை இலவசமாக வழங்குகிறது இந்த நாட்டின் அரசாங்கம். மும்பையில் இருந்து மொரிசியஸ்ஸிற்கு நேரடி விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 6 மணி நேரம் பயண காலம் ஆகும். மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை இந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்ல அனுபவத்தினை தரும்.
மடகாஸ்கர்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையை கொண்டிருக்கும் நாடாகும். முதல் 30 நாட்களுக்கு விசா ஆன் அரைவல் மூலமாக இலவச விசாவினை வழங்குகிறது மடகாஸ்கர் அரசாங்கம். இந்தியா – அபுதாபி- நைரோபி -ஆண்டனனரிவோ என பல்வேறு விமான நிலையங்களை பார்வையிட்ட பின்னர் தான் உங்களால் மட்காஸ்கரை அடைய முடியும். இந்தியாவில் இருந்து இந்த நாட்டிற்கு நேரடி விமான சேவை இல்லை.
இந்தோனேசியா
அழகான கடற்கரைகளையும், கலாச்சாரத்தையும், சுவைமிக்க உணவு வகைகளையும் தரும் நாடு தான் இந்தோனேசியா. தெருவோர உணவகங்களுக்கு பெயர் பெற்ற நாடு இது. இந்தியர்களுக்கு 25 – 30 அமெரிக்க டாலர்களுக்கு விசாவினை வழங்குகிறது இந்த நாடு. 10 முதல் 15 மணி நேர பயணம் இருக்கும். இந்தியா – சிங்கப்பூர் – பாங்காக் – பாலி என இதன் மார்க்கங்கள் அமைந்திருக்கிறது.
ஜோர்டான்
மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அழகான நாடுகளில் ஒன்று தான் ஜோர்டான். யுனெஸ்கோ அமைப்பின் மூலம் இங்கிருக்கும் புராதான கலைகள் மற்றும் அமைவிடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 40 ஜோர்டான் நாட்டு பணத்தை கொடுத்து இரண்டு வாரங்களுக்கு விசா எடுத்துக் கொள்ளலாம். அங்கு வரும் இந்தியர்கள் 1000 அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தினையும் ரிட்டர்ன் டிக்கெட்டினையும் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது காட்டாயம் ஆகும்.