WEB EXCLUSIVE
நாகலட்சுமி, நிறுவனர், க்யூரியோ கிட்ஸ்:
சென்னை சைதாப்பேட்டையில் ‘க்யூரியோ கிட்ஸ்’ பயிற்சி மையம் அமைந்துள்ளது. 2012ம் ஆண்டு திருமதி. நாகலட்சுமி என்பவரால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இப்பயிற்சி மையத்தின் நிறுவனரான இவர், சிறந்த பட்டய கணக்காளராக (Chartered Accountant) பணிபுரிந்தவர். பெங்களூரூவில் உள்ள சொஃபையர் கான்வெண்ட்டில் 10ம் வகுப்பு வரை படித்தவர். பின்பு அனைத்துக் கல்விகளையும் சென்னையில் பயின்றவர். இவர் ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்.
பள்ளிப் பருவத்திலிருந்தே சமூகத்தின் மீது அக்கரைக் கொண்டவராக இருந்தவர். ரோட்டரி கிளப் சார்பில், பல்வேறு சமூகநலம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்குப் பின்னரும் அதே ஆர்வத்துடன் செயல்படுபவர் இவர். இதன் தொடர்ச்சியாகத்தான், குழந்தைகளின் வாழ்வில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தார். அவ்வாறு எழுந்த யோசனையில் உருவாக்கப்பட்டது தான் ‘க்யூரியோ கிட்ஸ்’.
க்யூரியோ கிளப்பின் உருவான கதை:
இவ்வாறு மாறுபட்ட கல்வி பயிற்சியைத் துவங்க எவ்வாறு முடிவு செய்தார் நாகலட்சுமி என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். அதற்கு அவர் கூறுகிறார்,
“பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் கற்பனைத்திறன் கொண்டே பிறக்கின்றன. அந்தத் திறனை சரியாக மேம்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாகக் கல்வியில் படைப்பாற்றலை அறிமுகப்படுத்தினால் மாணவர்கள் கற்கும் அனைத்தும் வெறும் பாடங்களாக இல்லாமல் மனதில் ஆழமாகப் பதியும். இதன் மூலம் அவர்களின் அறிவுத்திறன் மேலும் வளரும். இதைத் தான் நான் செய்ய விரும்பினேன். சலிப்பான ஒரு பள்ளி வாழ்க்கையை வாழாமல், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்ல ஆர்வம் எழ வேண்டும். அதற்குக் கல்வி பயிலும் முறை மாற்றப்பட வேண்டும்.” என்கிறார்.
இந்த எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு முதன் முதலில் அடையார், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம் மற்றும் சைதாபேட்டை உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளித்து வந்தார். பின்னர் தனியாக பயிற்சி மையம் துவங்கி அதில் மாணவர்களுக்குச் செயற்கை முறையில் பாடங்கள் கற்றுக்கொடுத்தார். மேலும் இவ்வாறு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கற்பனைத்திறன், அறிவாற்றல் மற்றும் கவனம் ஈர்ப்பு சக்தி கூடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
க்யூரியோ கிட்ஸ்-ன் அம்சங்கள்:
பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு தற்போது உள்ள கல்வி திட்டத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும். வெறும் வார்த்தைகளாக மட்டுமில்லாமல் செயல் முறையிலும் பாடங்கள் கற்றுத் தர வேண்டும் மற்றும் செயல்முறைகள் மூலம் விஞ்ஞானத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் ஏற்றுக் கொண்ட முக்கிய பொறுப்பு.
“மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதோடு மட்டும் பொறுப்பு முடிந்து விடாது. அவர்கள் படிக்கும் அந்தக் கல்வி அவர்கள் வாழ்வோடு இணைந்திருக்க வேண்டும். அந்த முயற்சியில் தான் இது துவங்கப்பட்டது” - நாகலட்சுமி, நிறுவனர்.
3ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பொதுவாக 8ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிகளிலேயே ஆய்வகம் இருப்பது வழக்கம். 9 வகுப்பில் இருந்து அறிவியல் பாடத்தில் வரும் பெரும்பாலான தலைப்புகளில் செயல் முறை பயிற்சி உண்டு. ஆனால் அதற்குக் கீழ் உள்ள வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும், செயல் முறையாகப் பாடங்களை படிப்பதில்லை. எனவே அந்தத் தடையை தகர்த்தெரிய அனைத்து வகுப்புகளுக்கும் இந்தச் செயல் முறை பயிற்சிகளை நடத்தி வருகிறது ‘க்யூரியோ கிட்ஸ்’.
பயிற்சியின் செயல் முறை:
மாணவர்கள் படிக்கும் அறிவியல் சார்ந்த அனைத்துப் பாடங்களுக்கும், செயல் முறை கல்வியை (DIY - Do It Yourself) இந்நிறுவனம் வழங்குகிறது. இதில் எந்த பாடத் தலைப்பாக இருந்தாலும் அவற்றை மாணவர்கள் வார்த்தைகளாக மட்டும் படிக்காமல், மூலப்பொருட்களைக் கொண்டு ஒரு மாடல் செய்வார்கள். அந்தச் செயல்முறை வாயிலாக அறிவியல் சார்ந்த சந்தேர்கங்களை தீர்த்துக் கொள்வதோ, பாட விவரங்களை நன்கு புரிந்து கொண்டு படிக்கின்றனர். இதன் மூலம், வாழ்வின் ஒரு பகுதிதான் அறிவியல் என்பதை நன்கு உணருகின்றனர்.
உதாரணத்திற்கு ஸ்டார்ச் எந்த உணவுகளில் இருக்கும், எந்த உணவுகளில் இருக்காது, அதே போல் செடிகளில் பெரும்பாலானவை பச்சை நிறமாக இருக்கையில், ஏன் ஒரு சில தாவிரங்கள் மட்டும் நிறம் மாறி காணப்படுகின்றன? என்பதைச் செடிகள், காய்கள் கொண்டு செயல் முறையில் வகுப்பு நடத்துகிறார்கள். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது ஆர்வம் அதிகரிப்பதாக மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளில் பயிற்சி:
சென்னையில் உள்ள பள்ளிகளுடன் இணைந்து அங்கு மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பயிற்சி அளிக்கிறார். இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையையும் அவர்கள் வழியிலேயே பாடம் கற்பிக்க வைப்பது எப்படி என்ற தந்திரத்தையும் பயிற்று வருகிறார் நாகலட்சுமி. இவரின் தலைமையில், 8 பேர் கொண்ட அணியினரும் பணியாற்றுகின்றனர். இவர்கள் மாணவர்களுடன் நட்புடன் பழகி வருவார்கள். இதன் மூலம் சவுகரியமான சூழல் உருவாகுவதால் மாணவர்களின் அறிவுத்திறனை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் இவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் பள்ளியில், ஆய்வகத்தின் மேம்பாட்டிற்கும் முக்கியம் செலுத்துவதாக கூறுகின்றார்.
“அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வகம் இருக்கும், ஆனால் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் பள்ளிகள் மிகவும் குறைவு. எனவே ஆய்வக கூடத்தை எவ்வாறு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் பயிற்சியாக அளிக்கிறோம். மேலும் சில பள்ளிகளில் ஆய்வகங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை அமைத்துத் தருவதிலும் உதவி வருகிறோம்.” என்றார்.
இவ்வாறு செயல்படுவதால் கல்வியின் மீது மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாகச் செய்யும் செயல்முறைகள் அனைத்து எளிதான வழியில் கற்றுத்தருவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கற்றுக்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
க்யூரியோ கிளப்பின் சாதனைகள்:
இதுவரை 20,000 மாணவர்கள் வரை இந்தச் செயல்முறை கல்வி திட்டம் சென்றடைந்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பங்குபெற பலவகையான போட்டிகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால் இது போன்ற அனைத்துச் சாதனைகளையும் முறியடித்தது மற்றொரு மாபெரும் சாதனை.
சென்னை ரோட்டரி கிளப்புடன் இணைந்து மாநகராட்சி பள்ளிகளின் குழந்தைகளுக்குப் பயிற்சி பட்டறை நடத்தினர். இதில் 450 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குச் செயல்முறை கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டது. இறுதியாக இதில் இருந்து 8 மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டு நாசா (NASA) ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
8 மாணவர்களுக்கு ரோட்டரி கிளப்பின் சார்பில் பாஸ்போர்ட், பயணச்சீட்டு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நாசா-விற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் மே மாதம் 14ம் தேதி புறப்படுகிறார்கள். அங்கு விண்வெளி வீரர்களை (Astronauts) சந்தித்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இச்செய்தி அந்த 8 மாணவர்களிடமும் அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது.
வருங்கால திட்டங்கள்:
தற்போது பள்ளிகளுடன் இணைந்து செயலாற்றி வரும் நாகலட்சுமி, எதிர்காலத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் துவங்க முடிவெடுத்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கொண்டு அந்நிறுவனத்தைத் துவங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் துவக்கத்தை வெறும் சிந்திப்பதோடு மட்டும் நிறுத்தாமல், அவற்றைச் சார்ந்த விவரங்களைத் திரட்டி வருகிறார்.
மேலும் 2018ம் ஆண்டின் முக்கிய பணியாக, ஏப்ரல் 4ம் தேதி அரசு சார்பில் நித்தி அயோக் திட்டத்தில் கீழ் புதிய ஆய்வகம் துவங்க உள்ளதாகத் தெரிவித்தார். முறையான ஆய்வகம் (laboratary) இல்லாத அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அருகில் உள்ள மாணவர்களும் இலவசமாக இந்தச் சேவை உபயோகிக்கலாம். இதற்கு அட்டல் கம்யூனிட்டி லேப் என்ற பெயரும் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.
விஞ்ஞானத்தில் தேர்ச்சிப்பெற்றோர் இருக்கும் மாபெரும் தளத்திற்கு செல்வது கனவு நிஜம் ஆவது போல் உள்ளதாக உற்சாகம் அடைந்துள்ளனர் மாணவர்கள்.
இத்தகைய சாதனைகளை செய்து வரும் 'க்யூரியோ கிட்ஸ்' நிறுவனம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனதிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் பல்வேறு மாணவர்கள் விரும்பி பயிற்சிப் பெற்று வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.