பள்ளி, கல்லூரிகளில், அலுவலக கூட்டங்களில் உங்கள் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறதா? விழித்துக்கொண்டே பகல் கனவு காண்பவரா நீங்கள்? நீங்கள் நினைப்பதுபோல், எங்கெங்கோ உங்கள் மனம் சுற்றித்திரிவது ஒன்றும் தவறான விஷயமில்லை. ஆமாங்க, ஓரிடத்தில் மனதை நிலை நிறுத்த முடியாமல், பல விஷயங்கள் குறித்து நினைத்துக்கொண்டே இருப்பவர்கள் ஸ்மார்ட்டானவர்கள் என்றும், கற்பனை வளம் மிக்கவர்கள் என்றும் ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அதிக மூளை திறனைக் கொண்டிருப்பவர்கள், ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அதில் மட்டுமல்லாமல், தங்கள் மனதை வேறு பல விஷயங்களில் எளிமையாக கவனத்தை செலுத்தும் திறன் வாய்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
“மனதை நிலை நிறுத்த முடியாமல், பல விஷயங்களை நினைத்துக்கொண்டிருப்பது தவறு என நினைக்கிறோம். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால், உங்களால் முடியாது. ஆனால், அத்தகையவர்கள் அதிக திறனுடையவர்கள் என்பது எங்கள் ஆய்வு முடிவுகளின் மூலம் நிரூபணமாகிறது”, என ஆய்வை மேற்கொண்டவர்களுள் ஒருவரான பேராசிரியர் எரிக் கூறுகிறார்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் ஸ்கேன் எடுக்கப்படும்போது, அவர்களுடைய மூளை செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பதை இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஒருவர் உறக்கத்திலிருந்து எழும்போதும், ஓய்வெடுக்கும்போதும், மூளையின் எந்தெந்த பகுதிகள் ஒன்றாக செயல்படுகின்றன என்பதையும் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில், பகல் கனவு காண்பவர்கள் அதிக கற்பனைத்திறன் கொண்டவர்களாகவும், அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பது உறுதிபடுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.