இளம் பெண்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு பெண்களும் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனை கால ஒழுங்கற்ற மாதவிடாய். நம்முடைய வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை இத்தகைய ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான 5 காரணங்களாக, மகப்பேறு மருத்துவர் ஷோபா குப்தா குறிப்பிடுவதை தெரிந்துகொள்ளலாம்.
1. மன அழுத்தம்:
மாதவிடாய் சுழற்சி முறையான காலை இடைவெளியில் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் மன அழுத்தம். கடுமையான மன அழுத்தத்தில் நீங்கள் இருந்தால், மாதவிடாய் சுழற்சியில் கடும் பாதிப்புகள் ஏற்படும். உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்போது, மாதவிடாயுடன் தொடர்புடைய ஹார்மோன்களில் இடையூறு ஏற்படுகின்றன. இதனால், மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது மாதவிடாய் நின்றுவிடுதல் ஏற்படுகின்றன.
2. அதிகப்படியான உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லதுதான். ஆனால், அதனை அதிகப்படியாக செய்யும்போது, மாதவிடாயுடன் தொடர்புடைய ஹார்மோன்களில் இடையூறுகள் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தால் எப்படி மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகின்றனவோ, அதேபோன்ற பிரச்சனைகள் இவற்றால் ஏற்படும்.
போதுமான கலோரி உணவுகளை உட்கொள்ளாமல் உட்கொள்ளாமல் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படும்.
3. அதிகமான அல்லது குறைந்த உடல் எடை:
எல்லா கொழுப்புகளுமே நல்லதில்லை. ஆனால், நல்ல கொழுப்புகள் நமது உடலுக்கு அவசியம் தேவை. மிகவும் உடல் எடை குறைவுடன், ஒல்லியாக இருப்பதால் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
அதேபோல், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. அதனால், உடல் எடை மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது உங்களது மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற கால இடைவெளியை ஏற்படுத்தும்.
4. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்:
பெண்களிடையே இன்றைய காலகட்டத்தில் அதிகமாக காணப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை சினைக்கட்டிகளாலும், இத்தகைய ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தை பேறு இல்லாமை, உடல் பருமன் உள்ளிட்டவை ஏற்படும்.
இதற்காக உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால், டைப் 2 நீரிழிவு நோய், இருதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
5. குறிப்பிட்ட வயதுக்கு முன்பே மெனோபாஸ் நிலையை அடைதல்:
வயது முதிர்ந்த பெண்களுக்கு மட்டுமே மெனோபாஸ் முற்றிலும் நின்றுவிடக்கூடிய மெனோபாஸ் நிலை ஏற்படும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இளம் வயது பெண்களிடமும் அது நேரும். உணவு பழக்கவழக்கங்களில் மாறுதல்கள், பணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் (இரவு நேர வேலை உள்ளிட்டவை), மன அழுத்தத்தை உண்டாக்கும் வேலைகள் ஆகியவை இவற்றிற்கு காரணங்களாகும்.