Diabetes prevention | Diabetic patient food to avoid | நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு | இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் சர்க்கரை நோய் என சொல்கிறோம்.
அதிக உடல் எடை, பரம்பரை, அதிக ரத்த அழுத்தம் (140/90 அல்லது அதற்கும் மேல் இருப்பது), அதிகக் கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக இருக்கின்றன.
அறிகுறிகள் என்ன?
அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர்க் கசிவு, உடல் சோர்வு, உடல் எடை குறைவு முதலானவை இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள். ஆனால், எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு.
எனவே, 30 வயதைத் தாண்டிய அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் திடீரென இதயம், கண்கள், சிறுநீரகம் ஆகியவற்றையும் பாதித்து விடும். கால்களையோ அல்லது விரல்களையோ அகற்றும் நிலையும் ஏற்படலாம். எனவே, நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இதனால்தான் சர்க்கரை நோயின் பின் விளைவுகளைத் தவிர்க்க சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தவிர்க்கவேண்டிய உணவுகள்…
தேன், சர்க்கரை, ஸ்வீட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், குளூகோஸ், சாக்லேட், கேக், பொரித்த உணவுகள், இனிப்பான குளிர் பானங்கள், மது, ஜூஸ் வகைகளை தவிர்க்க வேண்டும்.

முருங்கை கீரை, கொய்யா, கறிவேப்பிலை, நெல்லி, வெந்தயம், பாகற்காய் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
சாப்பாட்டுக்கும் மாத்திரைக்குமான நேர இடைவெளி மிக முக்கியம். எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல், மாத்திரை எடுத்துக் கொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் திடீர் ஏற்றம், இறக்கம் வரும் வாய்ப்புள்ளது.
கால் பாதங்களில் வெட்டுகள், கொப்புளம், புண், வீக்கம் அல்லது காயங்கள் இருக்கின்றனவா என்று தினமும் பரிசோதிப்பது நல்லது. வெளியில் சென்று வந்தவுடன் கால்களை நன்கு கழுவவும், இந்தப் பழக்கம் பாதங்களைப் பாதுகாக்க உதவும்.
நீரிழிவு நோய்க்கு தொடர் வைத்தியம் அவசியம். தக்க மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கண் பாதிப்பு, இருதய, மூளை, சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“